யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர், இக் கூட்டத்திற்குவருகை தந்த கெளரவ அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்களை வரவேற்றதுடன், சிறுவர் பெண்கள் தொடர்பான பிரச்சினைகளை நடப்பாண்டிலும் எதிர்வரும் காலங்களிலும் மாவட்டத்தில் எவ்வாறு கொண்டு செல்வது தொடர்பாக கௌரவ அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரை 2025, 2026 ஆம் ஆண்டுகளில் கிடைக்கப்பெற்ற நிதிகளை மிக சிறப்பான முறையில் உத்தியோகத்தர்கள் பிரதேச செயலக ரீதியாக குறிப்பாக மகளிர் மற்றும் சிறுவர்கள் அலுவலர்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கிடைக்கப்பெற்ற நிதிகளை மிகச் சிறப்பான முறையில் செலவு செய்ததாகவும் அத்துடன் ஏனைய அமைச்சுக்களில் இருந்து கிடைக்கப்படும் நிதிகளையும் சரியான முறையில் பயன்படுத்தி உள்ளதாகவும் அனைத்து உத்தியோகத்தரையும் ஒருமுகப்படுத்தி ஒருங்கிணைந்த வகையிலே இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் எங்களுடைய பிரச்சினைகளை தமிழ் மொழியிலே கலந்துரையாடக்கூடிய ஓர் அமைச்சராக கௌரவ அமைச்சர் அவர்கள் வருகை தந்திருப்பது பெருமைப்படக்கூடிய ஒரு விடயமெனவும் உத்தியோகத்தர்கள் தங்கள் தேவைப்பாடுகளையும் கோரிக்கைகளையும் சரியான முறையில் முன்வைக்குமாறு கேட்டுக் கொண்டதுடன், உத்தியோகத்தர்களாகிய நாம் வினைத்திறனாகவும் சரியான முறையில் செயற்பாடுகளை முன்னெடுக்கின்ற போது அக்குடும்பம், பிள்ளைகளின் வாழ்க்கை சிறப்பாக அமையும் எனவும் உத்தியோகத்தர்களின் சிறப்பான அர்ப்பணிப்பான சேவைக்கு தனது நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டார்.
இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர்,
எமது மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் அடிக்கடி யாழ்ப்பாணம் வருகைதந்து பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தியில் அக்கறை கொண்டவர் என்பதுடன், வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்ட பெண்கள், கணவனை இழந்தவர்கள் சிறுவர்கள் ஆகியோருக்கு உதவிகள் வழங்க வேண்டும் என்பதில் அக்கறை கொண்டவர் எனவும் தெரிவித்து, இக் கலந்துரையாடலில் பங்குபற்றும் அதிகாரிகள் உத்தியோகத்தர்களுடன் ஒரு பரஸ்பர புரிந்துணர்வு ஏற்படும் எனவும் தெரிவித்தார். மேலும், முன்னேற்றத்தினை புள்ளிவிபர ரீதியாக குறிப்பிட்டாலும், அது எவ்வாறு யதார்த்தமாக உள்ளது என்பதனை தெளிவுபடுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், எமது சனாதிபதி அவர்களை ஏமாற்றிவிட முடியாது ஆகவே யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள பிரச்சினைகளை நல்ல முறையில் ஆராய வேண்டும் என்பதுடன் இக் கலந்துரையாடல் வினைத்திறனான அமைய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தொடர்ந்து யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025 மற்றும் 2026 காலப்பகுதிகளில் சிறுவர் பெண்கள் சார்ந்த அபிவிருத்தி வேலை திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு உதவி மாவட்ட செயலாளர் உ.தர்ஷினி அவர்களினால் முன்னளிக்கை செய்யப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் கௌரவ சரோஜா சாவித்திரி போல்ராஜ் அவர்களால் பெண்கள் சிறுவர் அபிவிருத்தி தொடர்பாக பல விடயங்களும் அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டன.
இக் கலந்துரையாடலின் இறுதியில் உத்தியோகத்தர்களால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு அமைச்சர் அவர்களினால் ஆராயப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், பெண் மற்றும் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், துறை சார்ந்த அரச உத்தியோகத்தர்கள், பொலீஸ் அதிகாரிகள், வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியக உத்தியோகத்தர்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டிருந்தனர்.
