;
Athirady Tamil News

நாடு முழுவதும் இன்று புதிய பேருந்து கட்டண திருத்தம் அமுல்

0

வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் நேற்று (5) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

வருடாந்த பேருந்து கட்டண திருத்தம் ஜூலை மாதம் முதலாம் திகதி முறைப்படி அமுல்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

அதன் தொடர்ச்சியாகவே, இன்று(6) இந்த பேருந்து கட்டண திருத்தம் இடம்பெறுகின்றது.

நேற்று நள்ளிரவு 12 மணிக்குப் பின்னர் இந்த புதிய பேருந்து கட்டணங்கள் நாடு முழுவதும் உள்ள தனியார் பேருந்துகள் மற்றும் அரச பேருந்துகள் ஆகிய இரண்டுக்கும் ஒரே நேரத்தில் அமுலுக்கு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

“நகர்ப்புற, கிராமப்புற மற்றும் சுமார் 3,000 தூரசேவை பேருந்துகள் உட்பட சொகுசு பேருந்து சேவைகள் அனைத்தினதும் கட்டணங்கள் நூற்றுக்கு 12 வீதத்தால் (12%) திருத்தியமைக்கப்பட்டுள்ளன.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இந்த கட்டணங்களை கணக்கிடும் போது ஒருவித முரண்பாடான தன்மையைக் கையாண்டுள்ளது.

கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக இவ்வாறானதொரு சதவீத அடிப்படையில் கட்டணங்களை பிரித்து வழங்கிய சரித்திரம் இல்லை.

இடைப்பட்ட தூரங்களுக்கு வெவ்வேறு சதவீதங்கள் கணக்கிடப்பட்டுள்ளதால், எதிர்காலத்தில் டீசல் விலை குறைந்தால் கூட, இந்த நடைமுறையினால் குறுகிய தூர பேருந்துக் கட்டணங்களை எவ்விதத்திலும் குறைக்க முடியாமல் போகும்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தன்னிச்சையாக மேற்கொண்ட இந்த தவறான செயல்முறை காரணமாக, பேருந்து கைத்தொழில் எதிர்காலத்தில் மிக மோசமானதொரு நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிடும்.

அரசாங்கத்தின் பலவீனமான நிதி நிர்வாகம் காரணமாகவே, பொதுமக்கள் இவ்வாறானதொரு பேருந்து கட்டண உயர்வுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, இன்று முதல் இந்த புதிய பேருந்து கட்டணத்துக்கு முகம்கொடுக்க பொதுமக்கள் பழகிக்கொள்ள வேண்டும்.

அதேநேரம், தனியார் பேருந்துகளில் பயணிக்கும் போது தயவுசெய்து ஊழியர்களுடன் வீண் தர்க்கங்களோ அல்லது பிரச்சினைகளோ செய்துகொள்ள வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு எங்களால் இயன்ற அதிகபட்ச சலுகைகளை நாம் வழங்கியுள்ளோம் எனவும் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.

புதிய திருத்தத்தின்படி, 30 ரூபாயாக காணப்பட்ட குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 34 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் அதிகபட்ச பேருந்து கட்டணமான 2,422 ரூபாயானது 480 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 2,902 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.