;
Athirady Tamil News

திடீரென இடமாற்றப்பட்ட பெண் கைதிகள் ; அடுத்தடுத்து இடம்பெறும் மரணங்கள் ; தீவிரமாகும் விசாரணை

0

நீர்கொழும்பு சிறைச்சாலையில் வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் சிலர் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று (08) குறித்த கைதிகள் வாரியபொல மற்றும் போகம்பரை ஆகிய சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தொடர் மரணங்கள்
இவ்வாறு மாற்றப்பட்டவர்களில் அந்தச் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பெண் கைதிகள் சிலரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து, அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண் கைதிகள் சிலரும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

எவ்வாறாயினும், தற்போது அந்தப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதுடன், முறைப்படியாக அந்தக் கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டு வருவதாகச் சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நீர்கொழும்பு சிறைச்சாலையிலுள்ள ஆண் கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், ஏனைய சிறைச்சாலைகளிலுள்ள வசதிகளை ஆராய்ந்து இந்த இடமாற்றங்கள் மேற்கொள்ளப்படுவதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை அங்குணகொலபெலஸ்ஸ, பூச மற்றும் வெலிக்கடை ஆகிய சிறைச்சாலைகளில் மூன்று கைதிகள் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அண்மையில் நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்கும் பூச சிறைச்சாலைக்கும் மாற்றப்பட்டிருந்த இரண்டு கைதிகள், திடீரென ஏற்பட்ட நோய் நிலைமைகள் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.

அதேவேளை, வெலிக்கடை சிறைச்சாலையிலும் கைதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகப் பதிவாகியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.