;
Athirady Tamil News

விடியலை எதிர்பார்த்து காத்திருக்கும் நெடுந்தீவு மக்கள்

0

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில், சப்த தீவுகள் என அழைக்கப்படும் வரலாற்று சிறப்பு மிக்க ஏழு தீவுகள் காணப்படுகின்றன. ஊர்காவற்துறை, எழுவை தீவு, அனலைதீவு, நயினாதீவு, புங்குடுதீவு, நெடுந்தீவு மற்றும் பருத்தித்தீவு ஆகிய ஏழு தீவுகளையே சப்த தீவுகள் என்பார்கள். அதில் பருத்தி தீவினை தவிர ஏனைய தீவுகளில் மக்கள் வசிக்கின்றார்கள். அவற்றிலும், ஊர்காவற்துறை மற்றும் புங்குடுதீவு ஆகியவற்றுக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து தரை வழியாக செல்ல முடியும். ஏனைய எழுவை தீவு, அனலைதீவு, நயினாதீவு மற்றும் நெடுந்தீவு ஆகிய நான்கு தீவுகளுக்கும் செல்ல கடல் கடந்த பயணத்தை மேற்கொள்ள வேண்டும். நெடுந்தீவு, யாழ்ப்பாணத்தில் இருந்து மிகத் தூரமாக இருப்பதனாலும், தீவுகளிலேயே மிக நீளமான தீவாகவும் இருப்பதனால் இதற்கு நெடுந்தீவு என பெயர் வந்ததாகவும் கூறுவார்கள். யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து குறிகட்டுவான் இறங்குதுறை வரையான தூரம் சுமார் 32 கிலோ மீற்றர். குறிகட்டுவான் வரையில் தரைவழி பாதையூடாக வாகனங்களில் பயணிக்க முடியும். குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவு சுமார் 10 கிலோ மீற்றர், அதாவது சுமார் 05 கடல் மைல் தூரம். காலநிலையால் கடலின் தன்மை மற்றும் பயணிக்கும் படகின் வேகத்தைப் பொறுத்து, இந்த தூரத்தைக் கடக்க சுமார் 45 நிமிடங்களில் இருந்து 1 மணி நேரம் வரை ஆகும். இந்தக் கடல் பயணத்திற்காக, குமுதினி, நெடுந்தாரகை மற்றும் வடதாரகை ஆகிய மூன்று படகுகள் பிரதானமாக சேவையில் ஈடுபட்டு வருவதுடன், தனியார் படகு சேவைகளும் நடைபெற்று வருகிறது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க நெடுந்தீவினை ஒல்லாந்தர் (Dutch) இலங்கையைக் கைப்பற்றிய போது, நெதர்லாந்தில் உள்ள தங்களின் புகழ்பெற்ற “டெல்வ்ட்” நகரத்தின் பெயரை இத்தீவுக்குச் சூட்டினர். இன்றும் ஆங்கிலத்திலும் , பலராலும் Delft Island என்றே இது அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் உள்ள குறிப்புக்களில் Delft Island என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. நெடுந்தீவு என்றதும், முதலில் பலருக்கு ஞாபகம் வருவது “குமுதினி படுகொலை” நெடுந்தீவின் மாவலித்துறையிலிருந்து குறிகாட்டுவான் இறங்குதுறை நோக்கி 1985ஆம் ஆண்டு மே 15 ஆம் திகதி பயணித்துக் கொண்டிருந்த குமுதினி படகில் குழந்தைகள் முதியவர்கள் என 64 பேர் இருந்தனர். 07 மாதக் குழந்தையான சுபாஜினி விசுவலிங்கம் முதல் 70 வயதான தெய்வானை எனும் மூதாட்டி வரையில் 36 பேர் கடற்படையினரால் மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். இதனையும் தாண்டி நெடுந்தீவு என்றதும், அங்கு வாழும் குள்ள இனக் குதிரைகள்தான் ஞாபகம் வரும். ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் இங்கு குதிரைகள் வளர்க்கப்பட்டன. காலப்போக்கில் அவை குள்ளமான குதிரைகளாக மாறி, இன்று இந்தத் தீவின் முக்கிய அடையாளமாகத் திகழ்கின்றன. அடுத்து அங்குள்ள பெருக்க மரம், வளரும் கல், ஒல்லாந்தர் கோட்டை, பவளக்கல் சுவர்கள், மனிதப் பாதம் போன்ற வடிவம் கொண்ட பெரிய பாறை என்பவை முக்கியமானவை. இதனை “இராமரின் பாதம்” என்றும், இஸ்லாமியர்கள் “ஆதமின் பாதம்” என்றும், சிலர் “அனுமனின் பாதம்” என்றும் தத்தமது நம்பிக்கைகளின்படி அழைக்கின்றனர். அத்தோடு ஒல்லாந்தர் காலத்தில் செய்திகளைப் பரிமாறிக்கொள்வதற்காகப் பயன்படுத்தப்பட்ட புறாக்களை வளர்க்க, பவளக் கற்களால் கட்டப்பட்ட ஒரு பெரிய புறாக் கூண்டு இன்றும் சிதைவடைந்த நிலையில் காணப்படுகிறது.

இவ்வாறான வரலாற்று பின்னணிகளை கொண்ட நெடுந்தீவு. ஒரு சுற்றுலா தளமாகவும் காணப்படுகிறது. நெடுந்தீவில் பிரதேச 1325 குடும்பங்களை சேர்ந்த 4062 பேர் வசித்து வருகின்றனர். நெடுந்தீவுக்கு என தனியான பிரதேச செயலகம், பிரதேச சபை, பொலிஸ் நிலையம், வைத்தியசாலை என்பவை காணப்படுகிறது. அங்கு 06 கிராம சேவையாளர் பிரிவுகள் உள்ளன. ஊர்காவற்துறை நீதிமன்றின் சுற்றுலா நீதிமன்றமும் உண்டு. நெடுந்தீவில் 10 பாடசாலைகளும் உள்ளன. நெடுந்தீவுக்கு என தனியான பிரதேச செயலகம் , பிரதேச சபை, பொலிஸ் நிலையம், வைத்தியசாலை என்பன காணப்பட்டாலும், யாழ்ப்பாணத்தில் இருந்து மிக தொலைவில் இருப்பதாலும், கடல் பயணம் மாத்திரம் சுமார் ஒரு மணி நேரமாக காணப்படுவதாலும், நெடுந்தீவு அபிவிருத்தி சாத்தியப்படாத நிலையிலையே காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் அமைய பெற்ற பின்னர் நெடுந்தீவின் அபிவிருத்தியில் அரசாங்கம் கூடிய கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக நெடுந்தீவின் சுற்றுலாத்துறையை மேம்படுத்த பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதுடன், கல்வி, மின்சாரம், மருத்துவ வசதிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவில் ஒரே ஒரு பிரதேச வைத்தியசாலை காணப்படுகிறது. அது பல்வேறு வளப் பற்றாக்குறைகளுடன் காணப்படுகிறது. வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக, நோயாளிகளை யாழ்ப்பாணம் அழைத்து வர கடல் வழி பயணமாக குறிகட்டுவான் வரையில் அழைத்து வந்து அங்கிருந்து நோயாளர் காவு வண்டியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச்செல்வதாயின் சுமார் 1.30 மணித்தியாலம் முதல் 2 மணித்தியாலங்கள் தேவை. காலநிலை சீரில்லாத காலப் பகுதியில் கடற் பயணம் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். அவ்வாறான நேரங்களில் விமானப் படையினரின் உதவி கோரப்பட்டு, உலங்குவானூர்தி ஊடாக நோயாளிகளை நெடுந்தீவில் இருந்து யாழ்ப்பாணம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வாறான சில வேளைகளில் கூட அதிக காற்று, மழை மேகங்கள் கூடி வானம் தெளிவில்லாத நிலமை காணப்பட்டால் உலங்கு வானூர்தி முயற்சியும் கைவிடப்படும். அவ்வாறான நேரங்களில் பல்வேறு வளப் பற்றாக்குறையுடன் காணப்படும் பிரதேச வைத்தியசாலையில் வைத்தே ஆபத்தான நிலையிலும் சிகிச்சை வழங்க வேண்டியிருக்கும். இவ்வாறான நிலைமைகள் காணப்படுவதால், கர்ப்பிணிப் பெண்களில் பெரும்பாலானவர்கள் தமது பேறு காலத்தில் கடல் தாண்டி மருத்துவ வசதிகளுக்காக யாழ்ப்பாண பகுதிக்கு வந்து தற்காலிகமாக தங்கி இருக்கும் நிலைமை காணப்படுகிறது. இவ்வாறான நிலையில் கடந்த மாதம் 27ஆம் திகதி யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நெடுந்தீவுக்கு விஜயம் செய்து, பிரதேச வைத்தியசாலையை பார்வையிட்டதுடன், வைத்தியசாலை உட்கட்டமைப்பு மேம்பாடு, அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களின் வழங்கல், மனிதவள வலுப்படுத்தல் மற்றும் தொடர்ச்சியான சுகாதார சேவையை உறுதிப்படுத்த தேவையான குறுகிய மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை விரைவாக நடைமுறைப்படுத்த நடவடிக்கைள் எடுக்கப்படும் என உறுதி அளித்துச் சென்றுள்ளார். மின்சாரம். நெடுந்தீவினை பொறுத்தவரைக்கும் மின் பிறப்பாக்கிகள் ஊடாகவே மின்சார சபையினால் மின்சாரம் வழங்கப்படுகிறது. தேசிய மின் வழங்கல் கட்டமைப்புக்குள் நெடுந்தீவு இல்லை, அங்கே தனியாக மின் பிறப்பாக்கிகளை இயங்கச் செய்தே மின்சாரம் வழங்கப்படுகிறது. மின் பிறப்பாக்கிகள் பழுதடைந்தால், எரிபொருள் தட்டுப்பபாடு ஏற்பட்டால், அங்கு மின் தடைகள் ஏற்படும். மின் பிறப்பாக்கிகள் பழுதடைந்தால், அவற்றினை திருத்தும் வரையில் நெடுந்தீவு இருளில் மூழ்கியிருக்கும். அதேவேளை இயற்கை அனர்த்தங்களின் போதும், கடல் கொந்தளிப்பாக காணப்படும் சூழ்நிலையிலும் கடல் தாண்டி டீசலை கொண்டு செல்வதில் இடர்கள் ஏற்பட்டாலும் மின் தடை ஏற்படும் இவ்வாறான நிலையில் நெடுந்தீவு மக்களுக்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சார விநியோகத்தை வழங்கும் நோக்கில் புதுப்பிக்கத்தக்க புதிய கலப்பின எரிசக்தித் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் 21ஆம் திகதி நெடுந்தீவுக்கு விஜயம் மேற்கொண்ட எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக, அங்கு நிறுவப்பட்டு வரும் சூரிய மின்சக்தி அமைப்பையும் ஆய்வு செய்துடன், எதிர்காலத்தில் நெடுந்தீவுப் பகுதியில் காற்றாலை மின் திட்டத்தை நிறுவ உள்ளதாகவும் தெரிவித்தார்,நெடுந்தீவில் சுமார் 11 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில், இந்திய அரசின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் இந்த செயற்திட்டத்தில் 1.7 மெகாவாட் சூரிய மின் நிலையம், 750 கிலோவாட் காற்றாலை மின் நிலையம் மற்றும் 2.4 மெகாவாட்- மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்பு (BESS) ஆகியவை அடங்கும். குறிகட்டுவானில் இருந்து சுமார் ஒரு மணி நேர கடல் பயணத்தின் பின்னர், நெடுந்தீவை சென்றடைந்தால், நெடுந்தீவினுள் பயணிக்க இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து சேவை நடைபெறும். அந்த பேருந்தும் பல நாட்கள் பழுதடைந்த நிலையில் சேவையில் ஈடுபடாத நிலைமையிலேயே காணப்படுகிறது. நெடுந்தீவினுள் பயணிக்க தனியார் வாடகை வாகனங்களை வாடகைக்கு அமர்த்தியே பயணிக்க வேண்டும். உள்ளூர் வீதிகளும் பல வருடங்களாக திருத்தப்படாமையால் மிக மோசமாக சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது, இந்நிலையில் நெடுந்தீவுவில் உள்ள பிரதான வீதிகளில் ஒன்றான மாவலி பெரியதுறை வீதி 135.90 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. அதன் ஆரம்ப பணிகளை போக்குவரத்து நெடுஞ்சாலைகள் அமைச்சர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைத்துள்ளனர். அத்துடன் நெடுந்தீவுக்கான எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கான அடிக்கல்லையும் அமைச்சர்கள் நட்டனர். இதுவரை காலமும் நெடுந்தீவு மக்கள் தமது எரிபொருள் தேவைக்காக ஒரு மணி நேர கடல் பயணம் மேற்கொண்டு, பின்னர் வேலணை அல்லது ஊர்காவற்துறை பகுதிக்கு சென்று எரிபொருளை பெற்றுச் செல்ல வேண்டிய நிலமை காணப்பட்டது. தற்போது நெடுந்தீவில் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைவது அவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அதேவேளை நெடுந்தீவுக்கான படகு சேவையில் வடதாரகை, நெடுந்தாரகை மற்றும் குமுதினி ஆகியவையே பிரதானமாக ஈடுபட்டு வருகிறது, கடந்த சில மாதங்களாக மூன்று படகுகளும் பழுதடைந்தமையால், நெடுந்தீவுக்கான போக்குவரத்தில் பல இடர்களை மக்கள் சந்தித்தனர். தனியார் படகுகள் மூலமே பயணத்தை மேற்கொன்டு வந்தனர். அந்நிலையில் துரித கெதியில் வடதாரகை மற்றும் நெடுந்தாரகை பழுது பார்க்கப்பட்டு, கடந்த மாத இறுதி வார காலப் பகுதியில் சேவையில் மீள இணைந்து கொண்டன. அதேநேரம் குமுதினி படகின் திருத்த வேலைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நெடுந்தீவில் 10 பாடசாலைகள் காணப்படும் போதும் அவை பல்வேறு வளப்பற்றாக்குறைகளுடன் இயங்கி வருகின்றன. ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது. இதனால் உயர்தரம் கற்கும் மாணவர்கள் பலரும் உயர்தரத்திற்கு யாழ். நகரை அண்டிய பாடசாலைகளில் இணைந்து கற்கின்றனர். அதனால் வாடகை அறைகளில் தங்கி கல்வி கற்கும் நிலைமைகள் காணப்படுகிறது.

குறிப்பாக உயர்தரத்தில் கணிதம் மற்றும் விஞ்ஞானப் பிரிவு மாணவர்கள் நெடுந்தீவில் கல்வி கற்கக் கூடிய வளங்கள் இல்லாதமையால், அவர்கள் நகர்ப் புறப் பாடசாலைகளில் இணைந்து கற்கின்றனர். எனவே நெடுந்தீவு மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பாடசாலை வளங்களை மேம்படுத்துவதுடன், ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீண்ட காலமாக அப்பகுதி மக்கள் கோரி வருகின்றனர். நெடுந்தீவில் கட்டுமான பணிகளை மேற்கொள்ள , சீமெந்து, கற்கள், கம்பிகள் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை கடல் தாண்டி கொண்டு செல்ல வேண்டிய தேவை ஏற்படுவதாலும், கட்டுமான பணியாளர்களை கடல் தாண்டி அழைத்து வருவதாலும், கட்டுமான செலவுகள் அதிகமாக காணப்படுகிறது. இதனால் அரசாங்கத்தினால் வழங்கப்படும் வீட்டு திட்ட செயற்பாடுகளை முன்னெடுக்க பயனாளிகள் பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

இதனால் கடல் கடந்த தீவுகளில் வசிக்கும் வீட்டுத் திட்டப் பயனாளிகளுக்கு வீட்டு திட்ட நிதியில் குறிப்பிட்ட ஒரு தொகையை மேலதிகமாக வழங்க வேண்டும் என வடமாகாண ஆளுநர் மற்றும் யாழ்.மாவட்ட செயலர் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்வாறான நிலையில் நெடுந்தீவுக்கு நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விஜயம் செய்த போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்னாயக்க மற்றும் கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோர் கட்டி முடிக்கப்பட்ட வீட்டு திட்ட வீடொன்றினை உத்தியோகபூர்வமாக பயனாளியிடம் கையளித்ததுடன், 20 இலட்ச ரூபாய் வீட்டு திட்டத்தினை பெற்ற பயனாளி ஒருவருக்கான முதல் கட்ட நிதியினையும் வழங்கியிருந்தனர். இவ்வாறாக பல்வேறு இடர்கள், நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழும் நெடுந்தீவு மக்களை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அரவணைத்து, அவர்களின் கல்வி, சுகாதாரம், வாழ்வாதாரம் என்பவற்றை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. நெடுந்தீவினை அழகிய சுற்றுலா தளமாகவும் மாற்றி, நெடுந்தீவு மக்களின் வாழ்வினை மேம்படுத்த, நெடுந்தீவு அபிவிருத்திக்கு என 1500 – 2000 மில்லியன் ரூபாய் வரையில் அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. நெடுந்தீவினை ஒரு அபிவிருத்தியடைந்த ஊராக மாற்றுவோம் என நெடுந்தீவு மக்களுக்கு போக்குவரத்து நெடுஞ்சாலை அமைச்சர் பிமல் ரத்னாயக்க தெரிவித்துள்ளார். அதேநேரம் கடந்த 20 நாட்களுக்குள், சுகாதார அமைச்சர். எரிசக்தி அமைச்சர், போக்குவரத்து அமைச்சர் மற்றும் கடற்தொழில் அமைச்சர் ஆகிய நான்கு அமைச்சர்கள் விஜயம் செய்து, தமது துறை சார் அபிவிருத்திகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இதனால் தமது வாழ்க்கையில் விடிவு ஏற்படும் என்ற நம்பிக்கையுடன் நெடுந்தீவு மக்கள் காத்திருக்கின்றனர்.

மயூரப்பிரியன்…
(யாழ். விசேட நிருபர்)

You might also like

Leave A Reply

Your email address will not be published.