;
Athirady Tamil News

திருமணமான 4 மாதத்தில் கர்ப்பிணி தற்கொலை – நாடு திரும்பிய கணவரும் உயிரை மாய்த்த சோகம்

0

திருவனந்தபுரம்,

திருமணமான 4 மாதத்தில் கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்த கணவர், வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் நாடு திரும்பிய நிலையில் அவரும் உயிரை மாய்த்துக்கொண்டார்.

கேரளம் மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள எடத்துவா பகுதியை சேர்ந்தவர் சானு குட்டன் (30 வயது). இவருடைய மனைவி ஹரிஷ்மா (27 வயது). இவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு மனைவியுடன் சானு குட்டன் 3 மாதமாக குடும்பம் நடத்திய நிலையில் வேலைக்காக தோஹா நாட்டுக்கு சென்றார். ஹரிஷ்மா கர்ப்பிணியாக இருந்தார்.

இந்த நிலையில் மாவேலிக்கரை உம்பர் நாடு பழைய தோப்பில் உள்ள வீட்டில் வசித்து வந்த ஹரிஷ்மா கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

நாடு திரும்பிய கணவர்
இந்த அதிர்ச்சி தகவல் வெளிநாட்டில் வசிக்கும் சானுகுட்டனுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அவர் உடனடியாக நாடு திரும்ப போவதாக உறவினர்களிடம் தெரிவித்தார். விமானம் மூலம் பெங்களூரு வந்து பிறகு அங்கிருந்து நெடும்பாசேரி விமான நிலையம் வரப் போவதாக கூறியுள்ளார். அதன்படி குறிப்பிட்ட நேரத்தில் விமானம் வந்தது. ஆனால் சானு குட்டன் வரவில்லை.

விடுதியில் தற்கொலை
இதுபற்றி விசாரித்தபோது, பெங்களூரு விமான நிலையத்துக்கு சானுகுட்டன் வந்தது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியதில், பெங்களூரூவில் உள்ள ஒரு விடுதியில் சானு குட்டன் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. மனைவி இறந்த அதிர்ச்சியில் அவரும் உயிரை மாய்த்துக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

அதே சமயத்தில் ஹரிஷ்மா தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது மர்மமாக இருக்கிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.