மன்னார் பிரதேசத்தில் பெருகிவரும் போதைப்பொருள் ஒடுக்கும் வகையில், மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கி சமூக நீதியை நிலைநாட்டியுள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் திகதி, 5 கிராமுக்கும் அதிகமான உயிர்க்கொல்லி ‘ஐஸ்’ போதைப்பொருளைத் தன்வசம் வைத்திருந்து, விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நபருக்கு மன்னார் மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. சமூகத்தின் அமைதியைக் குலைக்கும் இத்தகைய குற்றங்களுக்கு எதிராக சட்டம் தன் கடமையை மிகக் கடுமையாகச் செய்யும் என்பதை இத்தீர்ப்பு மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த வழக்கின் விசாரணைகள் மன்னார் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில், குற்றவாளிக்கு எதிரான சாட்சியங்களையும் சான்றுகளையும் அரச சட்டவாதிகளான தேவ விதுரன் மற்றும் ஆறுமுகம் தனுஷன் ஆகியோர் நெறிப்படுத்தி நீதிமன்றத்தின் முன் சமர்ப்பித்திருந்தனர். அரசுத் தரப்பால் முன்வைக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும், குற்றவாளியின் மீதான குற்றச்சாட்டுகளைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிப்பதாக அமைந்திருந்தன.
இவ்வழக்கின் அனைத்துப் பரிமாணங்களையும், சமர்ப்பிக்கப்பட்ட சான்றுகளையும் ஆராய்ந்த மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, குற்றச்சாட்டுகள் அனைத்தும் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் நிரூபிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்தார். சமூகத்தின் மீதான பேரக்கறையுடனும், சட்டத்தின் மாண்பைக் காக்கும் உன்னத நோக்கத்துடனும் செயற்பட்ட நீதிபதி, கடந்த 01.07.2026 அன்று குறித்த குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தனது தீர்க்கமான வரலாற்றுத் தீர்ப்பை அறிவித்தார்.