;
Athirady Tamil News

யாழ். மாவட்டச் செயலகத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வு

0
புனர்வாழ்வு பணியகத்தின் ஏற்பாட்டில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு செயலமர்வு – புனர்வாழ்வு பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் பிரிகேடியர் எம். எஸ். அமித்  தலைமையில் இன்று (21.07.2026) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்  மருதலிங்கம் பிரதீபன் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு செயலமர்வை ஆரம்பித்து வைத்தார்.

போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்டு, மீண்டும் ஆரோக்கியமான சமூக வாழ்வில் இணைத்திடுவது அனைவரின் கூட்டுப்பொறுப்பாகும் என்பதை வலியுறுத்திய இச் செயலமர்வில், போதைப்பொருள் பாவனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குதல், தொழிற்பயிற்சிகள் மூலம் தன்னம்பிக்கையை வளர்த்தல் மற்றும் சமூகத்தில் முழுமையான மனிதர்களாக மீள இணைத்தல் ஆகியவை புனர்வாழ்வு பணியகத்தின் முக்கிய நோக்கங்களாக காணொளி மூலமாகவும் விளக்கப்பட்டன.

இலட்சக்கணக்கான இளைஞர்களின் உயிர்களையும் எதிர்காலத்தையும் சீரழிக்கும் போதைப்பொருள் பேராபத்தை ஒழிப்பதற்காக நாடளாவிய விழிப்புணர்வு இயக்கம் அவசியம் என்பதையும், போதைப்பொருள் பாவனையிலும் விற்பனையிலும் ஈடுபடுவோர் அதிலிருந்து விலக வேண்டும் என்பதையும், இதற்காக முழு சமூகமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தும் நோக்கில் இச்செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இச்செயலமர்வில் பாடசாலை உளவளத் துணை ஆசிரியர்கள், தொடர்புடைய ஆசிரியர்கள், பிரதேச செயலக உளவளத் துணை உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோருக்கு போதைப்பொருள் தடுப்பு மற்றும் உளவள ஆதரவு தொடர்பான விரிவான விழிப்புணர்வு வழங்கப்பட்டது. 200-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

செயலமர்வின் வளவாளர்களாக பொலிஸ் போதைவஸ்து பணியகத்தின் பிரதிநிதி   ஐ. பிரவீன் மற்றும் சாவகச்சேரி அரசினர் வைத்தியசாலையின் வைத்திய கலாநிதி  வினோதா அச்சுதன் ஆகியோர் பங்கேற்று விரிவுரைகளை வழங்கினர்.

ஆரம்ப நிகழ்வில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்  பற்றிக் நிரஞ்சன், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்   க. சிவகரன், புனர்வாழ்வு பணியகத்தின் மேலதிக பணிப்பாளர் பிரிகேடியர் பியலால், மாவட்டச் செயலக புனர்வாழ்வு ஒருங்கிணைப்பு அலுவலக புனர்வாழ்வு உத்தியோகத்தர் மேஜர் S. A. R. N. பெரேரா, சிறைச்சாலை அத்தியட்சகர், வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அருட்சகோதரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கல்வித்துறை அதிகாரிகள், புனர்வாழ்வு பணியக அதிகாரிகள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.