;
Athirady Tamil News

41 வருட பொலிஸ் சேவைக்கு நிறைவு: சம்மாந்துறையின் மைந்தன் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஐ.எல்.ஏ. கபூர் ஓய்வு

0

41 வருட பொலிஸ் சேவைக்கு நிறைவு: சம்மாந்துறையின் மைந்தன் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஐ.எல்.ஏ. கபூர் ஓய்வு!
சமூகத்திற்கும் தேசத்திற்கும் ஆற்றிய மகத்தான சேவை நிறைவு; 9 விருதுகள் வென்ற பெருமைமிக்க அதிகாரி

பாறுக் ஷிஹான்-

தேசத்தின் பாதுகாப்பிற்காகவும் சமூகத்தின் அமைதிக்காகவும் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்த சம்மாந்துறையைச் சேர்ந்த மூத்த பொலிஸ் உத்தியோகத்தர் பிரதம பொலிஸ் பரிசோதகர் (Chief Inspector of Police) ஐ.எல்.ஏ. கபூர் தனது 41 வருட கால மகத்தான பொலிஸ் சேவையிலிருந்து இன்று உத்தியோகபூர்வமாக ஓய்வு பெறுகின்றார்.

1966ஆம் ஆண்டு சம்மாந்துறை மண்ணில் பிறந்த இவர், தாய்நாட்டிற்கும் தனது சொந்த மண்ணிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் தனது நீண்டகாலச் சேவையை நிறைவு செய்துள்ளார்.

வரலாற்றுத் தேவையும் பொலிஸ் சேவையும்

குறிப்பாக 1985ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் நாட்டில் நிலவிய அசாதாரண பயங்கரவாதச் சூழ்நிலைகள் காரணமாக முஸ்லிம் சமூகத்தின் பொருளாதாரம், வாழ்வாதாரம் மற்றும் குடும்பக் கட்டமைப்புகள் பாரிய சவால்களை எதிர்நோக்கியிருந்தன.

அந்த இக்கட்டான காலகட்டத்தில் தேசத்தைப் பாதுகாக்கவும், வாழ்வாதாரங்களை இழந்து நின்ற தனது சமூகத்திற்கு அரணாக நிற்கவும் வேண்டிய வரலாற்றுத் தேவையின் நிமித்தம் 1985.08.01 ஆம் திகதி பொலிஸ் சேவையில் இணைந்தார். கிராந்தர் கோட்டை பொலிஸ் கல்லூரியில் பயிற்சி பெற்று, பயங்கரவாத காலத்தில் கல்குடாவில் தனது முதலாவது நியமனத்தைப் பெற்றார். தொடர்ந்து மட்டக்களப்பு, கல்முனை, சம்மாந்துறை, அம்பாறை ஆகிய பிரதேசங்களில் பணிபுரிந்தார்.

பின்னர் உதவிப் பொலிஸ் பரிசோதகர் (Sub Inspector) நேர்முகப் பரீட்சையில் சித்தியடைந்து, மகியங்கனை வியாழினி பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெற்று 1990.02.20ஆம் திகதி உதவிப் பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு பெற்றார். அதனைத் தொடர்ந்து அம்பாறை, இரத்தினபுரி, மொனராகலை, பதுளை ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்து, 2010.02.08ஆம் திகதி பொலிஸ் பரிசோதகராக (Inspector Of Police) பதவி உயர்வு பெற்று சியம்பலான்டுவ, தனமல்வில, மொனராகலை, மககலுகொல்ல ஆகிய பொலிஸ் நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் பொறுப்பதிகாரியாகப் பணியாற்றினார்.

தொடர் உயர்வுகளும் சாதனைகளும்

கடந்த 2020.02.08ஆம் திகதி பிரதம பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்வு பெற்ற இவர், அதன் பின்னர் மத்திய முகாம், நீலாவனை, பண்டாரதுவ மற்றும் சவளக்கடை ஆகிய பொலிஸ் நிலையங்களில் பதில் பொறுப்பதிகாரியாகவும் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரியாவும் கடமையாற்றி மக்களின் அன்பையும் மேலதிகாரிகளின் மதிப்பையும் வென்றெடுத்த நிலையில் இன்றுடன் சேவையிலிருந்து ஓய்வு பெறுகின்றார்.

அம்பாறை மாவட்டத்தில் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவிற்கான விசேட பயிற்சியை நிறைவு செய்த மிகச்சில அதிகாரிகளில் ஒருவரான இவர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கான பரீட்சையிலும் அம்பாறை மாவட்டத்தில் முதன்மைச் சித்தி பெற்று தனது திறமையை நிரூபித்திருந்தார்.

விருதுகளும் குடும்பப் பின்னணியும்

அப்துல் றஹ்மான் அவ்வா உம்மா மற்றும் அலியார் இஸ்மாலெப்பை ஆகியோரின் எட்டுப் பிள்ளைகளில் ஏழாவது பிள்ளையான இவர், தனது சேவைக்காலத்தில் 9க்கும் மேற்பட்ட மதிப்புமிக்க பதக்கங்களைப் பெற்றுள்ளார்:

First Aid Medal

Poornabhumi Paddakkama 1985

Medal for Meritorious Service

Police Long Service and Good Conduct Medal

125th Police Anniversary Medal (1866-1991)

150th Police Anniversary Medal (1866-2016)

50th Independence Anniversary (1948-1998)

East Humanitarian Operation Medal (2006–2007)

Sewabhimani Paddakkama Service Medal 2009

ஓய்வுநிலை ஆசிரியை றஷீபா அவர்களின் கணவரான இவரது மூன்று பிள்ளைகளும் கல்வித் துறையில் சாதனை படைத்து வருகின்றனர். மூத்த மகள் மருத்துவ ஆய்வுகூடத் துறையிலும், இரண்டாவது பிள்ளை கிழக்கு பல்கலைக்கழகத்தின் உயிர்முறை தொழில்நுட்ப பீட மாணவியாகவும், மூன்றாவது பிள்ளை அண்மையில் வெளியான உயர்தரப் பரீட்சையில் உயிர்முறை தொழில்நுட்பப் பிரிவில் மாவட்ட மட்டத்தில் 8ஆம் இடத்தினைப் பெற்று பல்கலைக்கழகத்திற்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

தனது 41 ஆண்டு கால சேவையில் எவ்வித கறையுமின்றி மக்களுக்கான சேவையையே முதன்மையாகக் கொண்டு கடமையாற்றிய சம்மாந்துறையின் பெருமைக்குரிய மைந்தன் பிரதம பொலிஸ் பரிசோதகர் ஐ.எல்.ஏ. கபூர் அவர்களுக்குப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தமது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.