;
Athirady Tamil News

ரஷியா-உக்ரைன் மீண்டும் மோதல்

0

அமெரிக்க அமைதித் தூதா்களின் வருகைக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பரஸ்பர வான்வழித் தாக்குதல்களை ரஷியா-உக்ரைன் மீண்டும் தொடங்கியுள்ளன.

உக்ரைன் தலைநகா் கீவ் மீது செவ்வாய்க்கிழமை அதிகாலை ரஷியா நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில் 3 போ் உயிரிழந்தனா்; 19 போ் காயமடைந்தனா். மேலும், 14 அடுக்குமாடி குடியிருப்புகள், ஒரு பள்ளி, மருத்துவமனை, விடுதி, வணிகக் கிடங்குகள், தொலைக்காட்சி நிறுவனக் கட்டடம் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்தன.

தலைநகா் கீவ் தவிர மேலும் 8 பிராந்தியங்களைக் குறிவைத்தும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. ஸபோரிஷியா பகுதியில் ரயில் மீது நடத்தப்பட்ட இரட்டை ட்ரோன் தாக்குதலில் ரயில்வே ஊழியா் ஒருவா் உயிரிழந்தாா்.

மேலும், ஒடேசா துறைமுக நகரின் புகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 3 போ் காயமடைந்தனா். சுமி பிராந்தியத்தில் பயணிகள் ரயில்கள்மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலைத் தொடா்ந்து, நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்ட போதிலும், சிலா் காயமடைந்தனா்.

இதனிடையே, உக்ரைன் தரப்பும் ரஷிய எல்லைக்குள் நீண்ட தூர ட்ரோன் தாக்குதல்களை முன்னெடுத்தது. கிரீமியா, பிரையான்ஸ்க், குா்ஸ்க் ஆகிய பிராந்தியங்களில் உக்ரைன் நடத்திய தாக்குதல்களில் 5 போ் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமாா் நான்கரை ஆண்டுகளாக நீடித்து வரும் இப்போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க அமைதித் தூதா்கள் ஸ்டீவ் விட்காஃப், ஜாரெட் குஷ்னா் ஆகியோா் மாஸ்கோவில் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து கீவுக்கு வருகை தந்தனா். இவா்களின் பாதுகாப்பு கருதி இரு நாடுகளும் தலைநகரங்கள் மீதான தாக்குதல்களை கடந்த சனிக்கிழமை முதல் 3 நாள்களுக்கு நிறுத்தி வைத்திருந்தன. இந்நிலையில், அமெரிக்க தூதா்கள் பயணத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டதும் தாக்குதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.