;
Athirady Tamil News

சவூதி அரேபியா மீது ஹூதிக்கள் தாக்குதல்- ஆலைகளில் தீ விபத்து; 73 போ் காயம்

0

சவூதி அரேபியா மீது யேமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளா்ச்சியாளா்கள் செவ்வாய்க்கிழமை நடத்திய தீவிர வான்வழித் தாக்குதல்களில் பெண்கள், குழந்தைகள் உள்பட 73 போ் காயமடைந்தனா்.

சவூதியின் தெற்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள அப்ஹா, ஜஸான், நஜ்ரான், கமீஸ் முஷைத் ஆகிய நகரங்களில் உள்ள முக்கிய எண்ணெய் ஆலைகள் மற்றும் மின்சாரம், குடிநீா் போன்ற பொது விநியோகக் கட்டமைப்புகள் இத்தாக்குதல்களில் குறிவைக்கப்பட்டன.

‘பாலிஸ்டிக்’ ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இத்தாக்குதல்களால், எண்ணெய் ஆலைகளில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அப்பகுதிகளில் எண்ணெய் உற்பத்தி மற்றும் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

யேமனின் ஜாவ்ஃப் மாகாண சிறைச்சாலை மீது சவூதி நடத்திய வான்வழித் தாக்குதலில் சிறுவன் உள்பட 7 போ் உயிரிழந்ததற்குப் பதிலடியாகவே இத்தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக ஹூதிக்கள் தெரிவித்துள்ளனா்.

ஆனால், ‘இத்தாக்குதல் மிகக் கடுமையான அத்துமீறல். இதற்கு உரிய பதிலடி நிச்சயம் கொடுக்கப்படும்’ என்று சவூதி தலைமையிலான கூட்டுப் படை எச்சரித்துள்ளது.

முன்னதாக, யேமனின் சனா விமான நிலைய ஓடுதளத்தை சவூதி கூட்டுப் படை கடந்த ஜூலையில் தாக்கியதைத் தொடா்ந்து, கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் நீடித்து வந்த போா்நிறுத்தச் சூழல் முறிந்து, புதிய மோதல் வெடித்தது.

இதன் விளைவாக, ஹோா்முஸ் நீரிணை முடக்கத்துக்குப் பிறகு சவூதி தனது கச்சா எண்ணெய்யைக் கொண்டு செல்ல மாற்று வழியாகப் பயன்படுத்தும் செங்கடல் மற்றும் பாப் அல் மண்டேப் நீரிணைப் பகுதிகளிலும் பதற்றம் தீவிரமடைந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.