;
Athirady Tamil News

விநாயகபுரத்தில் நெல் விற்பனை மோசடி முறியடிப்பு: தவிசாளரின் அதிரடி நடவடிக்கையால் தப்பிய விவசாயி!

0

தராசில் முறைகேடு செய்த நெல் கொள்வனவாளர்கள் பொலிஸாரிடம் ஒப்படைப்பு; விழிப்புடன் இருக்குமாறு பிரதேச சபை வேண்டுகோள்!

திருக்கோவில் பிரதேச சபைக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியில் நெல் கொள்வனவின் போது இடம்பெற்ற பாரிய தராசு நிறுவை மோசடியை, திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் மற்றும் உத்தியோகத்தர்கள் உடனடியாகத் தலையிட்டுத் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இன்று விநாயகபுரம் பகுதியில் விவசாயி ஒருவர் தனது நெல் மூடைகளை விற்பனைக்காக நிறுவை செய்துகொண்டிருந்த வேளையில், தராசில் முறைகேடு நடப்பதை அவதானித்துள்ளார். உடனடியாக இது குறித்துத் திருக்கோவில் பிரதேச சபையின் தவிசாளருக்குத் தொலைபேசி ஊடாகத் தகவல் வழங்கியுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், அங்கு பயன்படுத்தப்பட்ட தராசின் தரத்தினைப் பரிசோதித்த போது தராசில் பிழையான அளவீடு (நிறுவை) காட்டப்பட்டமை உறுதி செய்யப்பட்டது.

பிரதேச சபை தவிசாளரின் இந்த உடனடி நடவடிக்கையினால் குறித்த விவசாயிக்கு ஏற்படவிருந்த சுமார் 2.5 லட்சம் ரூபாய் வரையிலான நிதி இழப்பு  தடுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, மோசடியில் ஈடுபட்ட நெல் கொள்வனவாளர்கள் உடனடியாகப் பிடிக்கப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகத் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்துத் திருக்கோவில் பிரதேச சபை ஊடகம் விடுத்துள்ள அறிவிப்பில்:

“எமது பகுதியில் இதுபோன்ற கண்டறியப்படாத மோசடிகள் பல இடம்பெற்றிருக்கலாம். இனிவரும் காலங்களில் இத்தகைய சுரண்டல்களைத் தடுப்பதற்குரிய தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

விவசாயிகள் அனைவரும் நெல் விற்பனையின் போது மிகவும் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள். இவ்வாறான தராசு மோசடிகள் அல்லது சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் இடம்பெற்றால் உடனடியாகத் திருக்கோவில் பிரதேச சபையின் 067-2265018 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ளவும். மோசடிகளில் ஈடுபடுவோருக்கு எதிராகக் கடுமையான நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.