நிந்தவூரில் கிரிக்கெட் நடுவர்களைக் கௌரவிக்கும் “Extolling & Honouring Umpiring – 2026” விழா கோலாகலம்
பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம் பிரதம அதிதியாகப் பங்கேற்பு; அம்பாறை மாவட்ட நடுவர் சங்கத் தலைவர் கௌரவிப்பு!
நிந்தவூர் நடுவர்கள் கல்வி மேம்பாட்டு அமைப்பின் (Society of Nintavur Umpiring Education) ஏற்பாட்டில், நிந்தவூர் பிரதேசத்தைச் சேர்ந்த கிரிக்கெட் நடுவர்களைக் கௌரவிக்கும் “Extolling & Honouring Umpiring – 2026” சான்றிதழ் மற்றும் நினைவுச் சின்னங்கள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை (02) நிந்தவூர் அல்-மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை கேட்போர் கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது.
அமைப்பின் தலைவர் ஐ.எல்.எம். இப்றாஹிம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளரும் சட்டத்தரணியுமான ஏ.எல். றியாஸ் ஆதம் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு நிகழ்வைச் சிறப்பித்தார்.
கிரிக்கெட் விளையாட்டில் நேர்மை, ஒழுக்கம் மற்றும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் நடுவர்களின் பங்களிப்பைப் பாராட்டும் வகையிலும், விளையாட்டின் தரத்தையும் நம்பகத்தன்மையையும் பேணி வரும் நீண்டகால அனுபவம் வாய்ந்த நடுவர்களைக் கௌரவிக்கும் வகையிலும் இவ்விழா ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.
நடுவர்களின் சேவை வெற்றிகரமான போட்டிக்கு அடித்தளம் – பிரதேச சபை தவிசாளர்
நிகழ்வில் உரையாற்றிய பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி ஏ.எல். றியாஸ் ஆதம்
“விளையாட்டுத் துறையில் நடுவர்களின் நேர்மையான சேவை என்பது ஒரு போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கான முக்கிய அடித்தளமாகும். களத்தில் அர்ப்பணிப்புடன் செயலாற்றும் நடுவர்களைச் சமூகமாக மதித்து கௌரவிப்பது காலத்தின் தேவையாகும்” எனக் குறிப்பிட்டார்.
இவ்விழாவில் அம்பாறை மாவட்ட கிரிக்கெட் நடுவர் சங்கத்தின் தலைவர் ஆசிரியர் எஸ்.எம். ஆரிப் கௌரவிக்கப்பட்டார்.
மேலும், நிந்தவூர் பிராந்திய விளையாட்டுக் கழகங்களின் நிர்வாகிகள், அணித்தலைவர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய கிரிக்கெட் வீரர்கள், விளையாட்டுத் துறைப் பிரமுகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
