;
Athirady Tamil News

ரூ.5 லட்சம் பணத்தை அரித்த கரையான் – விவசாயிக்கு நேர்ந்த துயரம்

0

திருட்டு பயம் காரணமாக விவசாயி புதைத்து வைத்திருந்த ரூ.5 லட்சம் பணத்தை கரையான் அரித்துள்ளது.

ரூ.5 லட்சம் பணத்தை அரித்த கரையான்

ராஜஸ்தான் மாநிலம், பலோத்ரா மாவட்டத்தில் உள்ள பச்சபத்ராவைச் சேர்ந்த விவசாயி மங்கிலால் மேக்வால், அவர் சமீபத்தில் தனது நிலத்தின் ஒரு பகுதியை விற்றதன் மூலம் ரூ.5 லட்சம் பெற்றுள்ளார். அந்த பணத்தை வைத்து தனது விவசாய நிலத்தில் ஒரு அறையை கட்ட திட்டமிட்டுள்ளார்.

ஆனால் அந்த பணம் திருடப்படலாம் அல்லது தேவையில்லாமல் செலவழிக்கப்படலாம் என நினைத்த அவர், அந்த பணத்தை ஒரு பாலித்தீன் பையில் போட்டு, தனது வயலில் ஒரு குழி தோண்டிப் புதைத்தார்.

இது குறித்து அவர் தனது மனைவி மற்றும் மகன்களிடம் கூட தெரிவிக்கவில்லை. மங்கிலாலுக்கு மதுஅருந்தும் பழக்கமும், மறதி நோயும் உள்ளது.

இதன் காரணமாக அறை கட்ட நினைத்த போது, பணத்தை எங்கே புதைத்து வைத்தோம் என தெரியவில்லை. குடும்ப உறிப்பனர்களிடம் இதை தெரிவித்த பின்னர், அவர்களும் இணைந்து விவசாய நிலம் முழுவதும் தேடியும் அதனை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதன் பின்னர் ஒரு வருடம் கழித்து, விதைப்பிற்காக டிராக்டர் மூலம் வயலைத் தயார் செய்த போது, அந்த பணப்பை நிலத்தின் மேற்பரப்பிற்கு வந்துள்ளது.

மறுநாள் காலை மங்கிலாலின் மனைவியும் மகனும் அந்தப் பையைக் கவனித்துத் திறந்தபோது, ​​கரையான் அரிப்பால் அந்த பையில் இருந்த 500 ரூபாய் நோட்டுகள் கடுமையாகச் சேதமடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை எடுத்துக்கொண்டு பச்சபத்ரா மற்றும் பலோத்ராவில் உள்ள SBI வங்கி கிளையை அணுகிய போது, நோட்டுகளின் மோசமான நிலை காரணமாக வங்கி அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளது.

மேலும், ஜெய்ப்பூரில் உள்ள வங்கிக்கிளையை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால், தன்னுடைய பொருளாதார சூழல் காரணமாக தற்போது ஜெய்ப்பூருக்குப் பயணம் செய்ய முடியாது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும் எப்படியாவது பணத்தை மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர்.

இந்த பணத்தை புதைத்தது குறித்து எங்களுக்கு முன்பே தெரிவித்திருந்தால் இவ்வளவு பெரிய இழப்பை தவிர்த்திருக்கலாம் என அவரது மனைவி கண்ணீர் வடித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.