;
Athirady Tamil News

‘குஷ்’ போதைப்பொருளுடன் நபர் கைது: 10,000 ரூபாய் அபராதம்

0
அம்பாறை சத்தாதிஸ்ஸபுர புற நகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது  ‘குஷ்’ போதைப்பொருளை வைத்திருந்த சந்தேகநபர்   அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்  அவருக்கு நீதிமன்றினால் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவேளையில் அவரிடமிருந்து 16,150 மில்லிகிராம் ‘குஷ்’ போதைப்பொருள் பொலிஸாரால் கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) கைப்பற்றப்பட்டது. அம்பாறை தலைமையக பொலிஸ் ஊழல் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த இரகசியப் புலனாய்வுத் தகவலின் அடிப்படையிலேயே இச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட முதற்கட்ட விசாரணைகளின்படி, குறித்த சந்தேகநபர் அம்பாறை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இளைஞர்களை இலக்கு வைத்து நீண்டகாலமாக இப் போதைப்பொருள் விநியோக வலையமைப்பில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது. அம்பாறை தலைமையக பொலிஸாரால் இத்தகைய ‘குஷ்’ போதைப்பொருள் கைப்பற்றப்படுவது இது நான்காவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திங்கட்கிழமை (28)  அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதன்போது சந்தேகநபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதித்து அம்பாறை பிரதம நீதிவான்   உத்தரவிட்டார்.உதவி பொலிஸ் பரிசோதகர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவின் பேரில், பொலிஸ் அதிகாரி பிரியந்த பண்டார கஸ்தூரிஆரச்சி, அம்பாறை பிரிவு 1-இன் உதவி பொலிஸ் அதிகாரி சம்பத் விக்ரமரத்ன மற்றும் அம்பாறை தலைமையக பிரதம பொலிஸ் பரிசோதகர் உபுல் இந்திரஜித் குணவர்தன ஆகியோரின் மேற்பார்வையில் இச் சுற்றிவளைப்பு இடம்பெற்றது.

இவ் அதிரடி நடவடிக்கையில் உதவி பொலிஸ் பரிசோதகர்களான செயின்ட், தம்மிக்க மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள்களான நந்தன (15991), சோமரத்ன (66675), குணவர்தன (73734), பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி கசுன் (92988) உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் பங்கேற்றிருந்தனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.