;
Athirady Tamil News

நல்லூர் ஆலயத்திற்குள் சொகுசு வாகனம் ; எழுந்துள்ள கடும் சர்ச்சை

0

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவ காலத்தை முன்னிட்டு, ஆலயத்தைச் சூழவுள்ள பிரதான வீதிகள் மூடப்பட்டு பலத்த பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சொகுசு வாகனம் ஒன்று ஆலய வளாகத்திற்குள் நுழைந்தமை பக்தர்கள் மத்தியில் கடும் அதிருப்தியையும் கேள்விகளையும் ஏற்படுத்தியுள்ளது.

மஹோற்சவ காலத்தில் பக்தர்கள் அமைதியாகவும், தூய்மையாகவும் வழிபடுவதற்கு ஏதுவாக ஆலயத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாகனப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அவசரத் தேவைகளுக்கான அம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களைத் தவிர ஏனைய வாகனங்களின் நுழைவுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், கறுப்பு நிற சொகுசு ஜீப் ரக வாகனம் ஒன்று ஆலயத்தின் உட்பகுதி வரை சென்று நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொதுமக்களும் பக்தர்களும் தங்களது வாகனங்களை தூர இடங்களில் நிறுத்திவிட்டு ஆலயத்துக்கு நடந்துசெல்லும் நிலையில், குறித்த வாகனத்திற்கு மாத்திரம் எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது.

அத்துடன், இது உரிய அனுமதியுடன் இடம்பெற்றதா அல்லது பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தவர்களின் கவனக்குறைவால் வாகனம் ஆலய வளாகத்திற்குள் நுழைந்ததா என்பது தொடர்பிலும் சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

ஆலயத்தின் புனிதத்தையும் மஹோற்சவ காலத்தில் நடைமுறைப்படுத்தப்படும் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகளையும் கருத்திற்கொண்டு, இந்த வாகனம் ஆலய வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் உரிய அதிகாரிகள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் தெளிவான விளக்கமொன்றை வழங்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.