;
Athirady Tamil News

ஆப்கனில் இயற்கை பேரிடர்களுக்கு 92,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு; 97 பேர் பலி: ஐ.நா. தகவல்

0

காபூல்: 2026-ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் ஆப்கானிஸ்தானின் 34 மாகாணங்களிலும் ஏற்பட்ட இயற்கை பேரிடர்களுக்கு 92,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர், சுமார் 97 பேர் பலியாகியுள்ளனர், 331 பேர் காயமடைந்துள்ளனர் என்று ஐ.நா சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆண்டின் தொடக்கத்திலிருந்து நாடு முழுவதும் ஏற்பட்ட பெருவெள்ளம், திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலநடுக்கம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்களுக்கு 10,000 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 2,100-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக, 13,000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த பேரழிவு குடியிருப்புப் பகுதிகளையும் தாண்டி, விவசாய நிலங்கள், சாலைகள், நீர்ப்பாசன மற்றும் குடிநீர் கட்டமைப்புகள் போன்ற பிற அத்தியாவசிய உள்கட்டமைப்புகளையும் பல பகுதிகளில் சேதப்படுத்தியுள்ளது. வீடுகள் மற்றும் விவசாய நிலங்களை இழந்தது மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதித்துள்ளதுடன், விவசாயத்தைச் சார்ந்திருக்கும் குடும்பங்களுக்கு உணவு மற்றும் வருமானப் பாதுகாப்பின்மை அபாயத்தையும் அதிகரித்துள்ளது.

ஜூலை 20 முதல் ஆகஸ்ட் 3 வரையிலான காலகட்டத்தில் மட்டும், நூரிஸ்தான், காபூல், கஸ்னி, கபிசா மற்றும் பர்வான் உள்ளிட்ட 10 மாகாணங்களில் சுமார் 5,000 பேர் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிழக்கு ஆப்கானிஸ்தானில் அதிகபட்சமாக 51,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க பாதிப்புகள், சேதங்கள் பதிவாகியுள்ளன.

இயற்கை பேரிடர்களால் ஏற்பட்டுள்ள தொடர் பாதிப்புகள், மனிதாபிமான உதவி சார்ந்திருத்தலை அதிகரிப்பதாக எச்சரித்துள்ளது.

ஏற்கனவே, கடுமையான மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டு வரும் ஆப்கானிஸ்தானில் லட்சக்கணக்கான மக்கள் மனிதாபிமான உதவிகளைச் சார்ந்தே வாழ்ந்து வருகின்றனர். மீண்டும் மீண்டும் நிகழும் வெள்ளம், வறட்சி, நிலநடுக்கம் மற்றும் பிற இயற்கை பேரிடர்கள், ஏற்கனவே உள்ள பொருளாதார மற்றும் சமூக சவால்களை மேலும் தீவிரமாக்குவதுடன், மீட்சி நடவடிக்கைகளையும் கடினமாக்குகின்றன.

இயற்கை பேரிடர்களின் தாக்கத்தைக் குறைக்கவும், ஆப்கானிஸ்தான் முழுவதும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களின் மீள்திறனை வலுப்படுத்தவும் போதுமான நிதி மற்றும் முன்கூட்டியே தயார்நிலை நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தையும் மனிதாபிமான அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.