;
Athirady Tamil News

வீடொன்றிற்குள் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் எலும்புக்கூடு: குடும்பங்களின் இன்றைய நிலையைக் கூறும் ஒரு செய்தி

0

பெங்களூருவில் வீடொன்றிற்குள் பெண்ணொருவரின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல ஆண்டுகளாக அவரை யாரும் தேடவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூருவில் வீடொன்றில் தனியாக வசித்துவந்துள்ளார் தாக்‌ஷாயினி (52) என்னும் பெண்.

நீண்ட காலமாக அவரது வீடு திறக்கப்படாமலே இருந்த நிலையில், இம்மாதம் 7ஆம் திகதி, பொலிசாருக்கு அது குறித்து தகவலளிக்கப்பட்டுள்ளது.

வீட்டுக்குள் பெண்ணின் எலும்புக்கூடு
பொலிசார் அந்த வீட்டை சோதனையிட, அந்த வீட்டுக்குள் ஒரு எலும்புக்கூடு இருப்பது தெரியவந்துள்ளது.

பொலிசார் விசாரணையில் இறங்க, உயிரிழந்து எலும்புக்கூடாக கண்டுபிடிக்கப்பட்டது தாக்‌ஷாயினி என்பது அவரது சகோதரரான மகேஷ் என்பவர் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

விடயம் என்னவென்றால், 2005ஆம் ஆண்டு தன் மகனை இழந்துள்ளார் தாக்‌ஷாயினி. அந்த இழப்பு அவருக்கு மன நல பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

2017ஆம் ஆண்டு தாக்‌ஷாயினியின் கணவரும் மரணமடைய, குடும்பத்தில் யாருடனும் எந்த தொடர்பும் இல்லாமல் தனியாகவே வாழ்ந்துவந்துள்ளார் அவர்.

விடயம் என்னவென்றால், தாக்‌ஷாயினிக்கு ஒரு மகள் இருக்கிறார். திருமணமாகி வேறொரு இடத்தில் வாழ்ந்துவரும் அந்தப் பெண் தன் தாயை நீண்ட காலமாக வந்து பார்க்கவே இல்லையாம்.

ஆக, தாக்‌ஷாயினி எப்படி வாழ்ந்தார், எப்படி உயிரிழந்தார், எப்போது உயிரிழந்தார், எதனால் உயிரிழந்தார் என எந்த தகவல்களும் குடும்பத்தில் யாருக்கும் தெரியாமல், இறந்து, உடல் எலும்புக்கூடான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார் அவர்.

கூட்டுக்குடும்பங்கள் என்னும் ஒரு முறை மாறி, குடும்பங்கள் சின்னச் சின்னக் குடும்பங்களாகி, ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு இடத்தில் குடியேறி, உற்றார் உறவினர்கள் யார், அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்றே தெரியாத அளவுக்கு நிலைமை மோசமடைந்துவிட்டது தெரிந்த விடயம்தான்.

ஆனால், மிக வயது முதிர்ந்து தள்ளாடும் வயது அல்ல, வெறும் 52 வயதில் ஒரு பெண் வீட்டுக்குள் மரணமடைந்து, எலும்புக்கூடாகும் வரை அவரை யாரும் தேடவில்லை என்றால், இன்றைய குடும்பங்களின் நிலை எவ்வளவு மோசமாக உள்ளது என்பது மிகத் தெளிவாக புரிகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.