உ.பி.யில் குப்பை லாரி மீது வேன் மோதி 8 விவசாயிகள் உயிரிழப்பு
போபால்: உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மத்திய பிரதேசம் குவாலியர் மாவட்டத்தில் நடவு பணியை முடித்துவிட்டு தங்கள் கிராமத்துக்கு வேனில் சென்று கொண்டிருந்தனர்.
அதிகாலை 1 மணியளவில் பிந்த்-குவாலியர் நெடுஞ்சாலையில் சென்றபோது சாலையின் நடுவே அமர்ந்திருந்த மாடு மீது மோதாமல் இருப்பதற்காக டிரைவர் வேனை திருப்பியுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையின் எதிர்திசைக்கு சென்று, குப்பை லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இதில் வேனில் பயணம் செய்த விவசாயிகளில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 35 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் 3 பேர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தனர். விபத்து குறித்து ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.