;
Athirady Tamil News

தென் ஆப்பிரிக்கா: முன்னாள் குத்துச்சண்டை வீரர் சொலனி டெட்டே சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது

0

தென்னாப்பிரிக்கா,

தென்னாப்பிரிக்காவில் முன்னாள் உலக சாம்பியன் குத்துச்சண்டை வீரர் சொலனி டெட்டே சுட்டு கொல்லப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெட்டேவின் சாதனைகள்

கிழக்கு கேப் மாகாணத்தில் மாண்ட்சேன் பகுதியை சேர்ந்தவர் சொலனி டெட்டே(வயது 38). இவர் குத்துச்சண்டைப் போட்டியில் 2 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். 2017-ம் ஆண்டு சிபோனிசோ கோன்யாவுக்கு எதிரான போட்டியை வெறும் 11 வினாடிகளில் வென்று, அதிவேக நாக் அவுட் செய்த குத்துச்சண்டை வீரர் என்ற கின்னஸ் உலக சாதனையையும் படைத்தார். இவர் 2022 ஆண்டு வரை குத்துச்சண்டை போட்டிகளில் விளையாடி பின்னர் ஓய்வை அறிவித்தார்.

சுட்டுக் கொலை

சொலனி டெட்டே கடந்த வெள்ளிக்கிழமை இரவு கிழக்கு கேப் மாகாணத்தில் மாண்ட்சேனில் உள்ள தனது வீட்டிற்கு காரில் காதலியுடன் சென்றுள்ளார். வீட்டின் கதவு திறப்பதற்காக காரில் காத்திருந்தார். அப்போது அங்கு பைக்கில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் காரில் இருந்த இருவர் மீதும் பலமுறை துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் இருவரும் பலத்த காயமடைந்து, சொலன் டெட்டே சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது காதலியை சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மீட்டு சிசிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.சொலனி டெட்டேவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர்.

4 பேர் கைது

இது குறித்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போலீசார் முக்கிய குற்றவாளியான 22 வயதுடைய நபரை சனி கிழமை கைது செய்து கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் இன்று மாண்ட்சேன் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், இது தொடர்பாக சந்தேகப்பட்ட நபர்கள் 27,27,மற்றும் 28 வயதுடைய நபர்களை ஞாயிற்றுக்கிழமை அன்று கைது செய்தனர். இவர்கள் மூவரையும் நாளை அதே மாண்ட்சேன் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். மேலும் இந்த கொலை தொடர்பாக வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.