;
Athirady Tamil News

வவுனியா மாநகரசபைக்கு நிரந்தர கட்டடம் அமைக்க நடவடிக்கை: வடக்கு ஆளுனர்

0

வவுனியா மாநகரசபைக்கு நிரந்தர கட்டடம் அமைக்க நடவடிக்கை: வடக்கு ஆளுனர்

வவுனியா விசேட நிருபர்

வவுனியா மாநகர சபைக்கான நிரந்தரக் கட்டடம் அமைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை சாதகமாகப் பரிசீலிப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தின் 2026ஆம் ஆண்டுக்கான மூன்றாம் காலாண்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (04.09) மாலை வவுனியா மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க ஆகியோரின் இணைத் தலைமையில் நடைபெற்றது.

மாவட்டச் செயலரின் வரவேற்புரையைத் தொடர்ந்து, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க தலைமையுரையாற்றினார்.

வவுனியா மாவட்டத்துக்கு பல்வேறு நிதி மூலங்களிலிருந்து ஒதுக்கப்பட்ட நிதியில் ஒரு ரூபா கூட மீளச் செல்லாத வகையில், ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகப் பயன்படுத்தி அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, கடந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராயப்பட்டு எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து ஆராயப்பட்டது.

வவுனியாக் குளத்தின் முறையற்ற ஆக்கிரமிப்புகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்ட உண்மையைக் கண்டறியும் விசாரணைக் குழு தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாக ஆரம்பப் புலனாய்வு விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டு, இரண்டு மாதங்களுக்குள் விசாரணையை நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஓமந்தைப் பிரதேசத்தில் அடிக்கடி வீதி விபத்துகள் இடம்பெறுவதைக் கருத்திற்கொண்டு, ஓமந்தை மருத்துவமனைக்கு நோயாளர் காவு வண்டி வழங்க வேண்டும் என முன்வைக்கப்பட்ட கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளமை தொடர்பிலும் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. அதேவேளை, வனவளத் திணைக்களத்துடன் தொடர்புடைய பிரச்சினைகள் குறித்தும் ஆராயப்பட்டது.

எல் நினோ காலநிலை நிலைமையால் வவுனியா மாவட்டத்தில் எதிர்கொள்ளக்கூடிய பாதிப்புகளைத் தணிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது. குறிப்பாக, எதிர்வரும் காலப்பகுதியில் மக்களுக்கான குடிநீர் விநியோகத்தை உறுதிப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து வவுனியா மாவட்டத்தின் பொதுப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் பிரதிப் பொலிஸ்மா அதிபரால் விளக்கமளிக்கப்பட்டது. உயிர்கொல்லி போதைப்பொருட்களைக் கைப்பற்றுதல் உள்ளிட்ட போதைப்பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் முன்னேற்றம் மற்றும் ஏனைய பாதுகாப்பு விடயங்கள் தொடர்பிலும் தகவல்கள் முன்வைக்கப்பட்டன.

நாடாளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயப்பட்டதுடன், தொடர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய விடயங்கள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டது.

மேலும், பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் ஆராயப்பட்டு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்துக்கு முன்வைக்கப்பட்ட விடயங்களும் இதன்போது பரிசீலிக்கப்பட்டன.

வவுனியா மாநகர சபைக்கான நிரந்தரக் கட்டடம் அமைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டதுடன், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் ஆளுநர் சாதகமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ரிசாட் பதியுதீன், காதர் மஸ்தான், ம.ஜெகதீஸ்வரன், செ.திலகநாதன், து.ரவிகரன், ப.சத்தியலிங்கம், மேயர் மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர் – திட்டமிடல், மாகாண திணைக்களத் தலைவர்கள், மாவட்டச் செயலக நிறைவேற்று அதிகாரிகள், நிரல் அமைச்சுக்களின் மாவட்ட அதிகாரிகள், முப்படையினர், பொலிஸார் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.