54 இடங்களில் குறைந்த எடை கொண்ட பாண் விற்பனை
நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட விசேட திடீர் முற்றுகையின் போது, 54 இடங்களில் குறைந்த எடைக் கொண்ட பாண் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
நுகர்வோருக்கு முறையான எடையில் பாண் வழங்குவதை உறுதி செய்யும் நோக்கில், சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் வெதுப்பகங்கள் உள்ளிட்ட 118 இடங்களில் செப்டம்பர் 1 முதல் 3 ஆம் திகதி வரை சோதனை நடத்தப்பட்டது.
செப்டம்பர் 1 முதல் 3 ஆம் திகதி வரை சோதனை
முதற்கட்ட ஆய்வுகளின்படி, 54 இடங்களில் தெளிவான எடை விபரங்கள் காட்சிப்படுத்தப்பட்ட போதிலும் எடைக் குறைவான பாண் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
76 கடைகள் மற்றும் வெதுப்பகங்கள் பாணின் எடையை முறையாகக் காட்சிப்படுத்தத் தவறியுள்ளதாகவும், 65 இடங்கள் அதன் விலையை முறையாகக் காட்சிப்படுத்தத் தவறியுள்ளதாகவும் முற்றுகையின் போது கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன் விசாரணைகளின் ஒரு பகுதியாக மொத்தம் 81 வெதுப்பகங்கள் முற்றுகைக்குட்படுத்தப்பட்டுள்ளன.
நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளின்படி, ஒரு முழு பாணின் எடை 450 கிராமும், அரை பாணின் எடை 225 கிராமும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் பாணிண் எடை, விலைகள் அல்லது ஏனைய நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் தொடர்பான முறைப்பாடுகளை அலுவலக நேரங்களில் 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் அவசர தொலைபேசி இலக்கம் ஊடாக நுகர்வோர் தெரிவிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.