;
Athirady Tamil News

செம்மணி புதைகுழி விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்டடு விசாரணைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்: தமிழ் தேசியப் பேரவை பேரணிக்கு அழைப்பு

0

செம்மணி புதைகுழி விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்டடு விசாரணைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்: தமிழ் தேசியப் பேரவை பேரணிக்கு அழைப்பு

செம்மணி புதைகுழி விவகாரம் ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்டடு விசாரணைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் பேரணிக்கு தமிழ் தேசியப் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.

தமிழ் தேசியப் பேரவையின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று (09.09) வெளியிட்டுளடள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

செம்மணி சித்துப் பாத்தியில் சுமார் 600 மனித எலும்புக் கூடுகள் தமிழ் இனப்படுகொலைக்கான சாட்சியங்களாக வெளி வந்துள்ளன. இந்த சான்றுப் பொருட்களானவை மேற்படி குற்றத்தை இழைத்த தரப்பான சிறீலங்கா அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதானது, அவற்றை சேதப்படுத்தி குற்றங்களை நிரூபிக்க முடியாத சூழலை ஏற்படுத்தக் கூடிய ஆபத்துள்ளது. எனவே குற்றமிழைத்த தரப்பாக உள்ள சிறீலங்கா அரசின் தலையீடுகள் எதுவும் அற்ற வகையில் செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி உள்ளிட்ட அனைத்து புதைகுழிகளதும் அகழ்வாராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அதற்கான சர்வதேச தடய அறிவியல் நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து நிபுணர்களையும் நியமித்தல் அகழ்தெடுக்கப்படும் தடங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட அனைத்துச் செயற்பாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்டடு விசாரணைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

உடனடியானதும், அவசரமானதுமான இக் கோரிக்கை உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி இடம்பெறவுள்ள மாபெரும் பேரணிக்கு அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கின்றோம். தமிழ்த் தேசியப் பேரவையும் குடிசார் அமைப்புக்களும் இணைந்து முன்னெடுக்கவுள்ள இப்பேரணியில் அனைத்து குடிசார் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், கல்வி மற்றும் உயர் கல்விச் சமூகத்தினர் மற்றும் தமிழ்த் தேசிய கட்சிகளையும், அனைத்துத் தமிழ் மக்களையும் கலந்து கொண்டு வலுச் சேர்க்குமாறு அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றோம்.

எதிர்வரும் 2026 செப்டம்பர் 13 ஆம் திகதி, காலை மு.ப 10.00 மணிக்கு யாழ் நாவலர் வீதியில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலத்திற்கு அருகாமையில் உள்ள கைலாச பிள்ளையார் கோவில் முன்றலில் பேரணி ஆரம்பமாகி கோவில் வீதி ஊடாகச் சென்று முத்திரைச் சந்தியில் உள்ள கிட்டு பூங்காவில் (சங்கிலியன் பூங்கா) பொதுக் கூட்டம் நடைபெறும்.

கீழ்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தி மேற்படி பேரணி நடைபெறவுள்ளது. செம்மணி உள்ளிட்ட மனிதப் புதைகுழிகளுக்கான சர்வதேச நீதி விசாரணை பொறிமுறை வேண்டும். செம்மணி சித்துப்பாத்தியில் சுமார் 600 மனித எலும்புக்கூடுகள் தமிழ் இனப்படுகொலைக்கான சாட்சியங்களாக வெளி வந்துள்ளன. இந்த சான்றுப் பொருட்களானவை மேற்படி குற்றத்தை இழைத்த தரப்பான சிறீலங்கா அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதானது, அவற்றை சேதப்படுத்தி குற்றங்களை நிரூபிக்க முடியாத சூழலை ஏற்படுத்தக்கூடிய கூடிய ஆபத்துள்ளது. எனவே, குற்றமிழைத்த தரப்பாக உள்ள சிறீலங்கா அரசின் தலையீடுகள் எதுவும் அற்ற வகையில் செம்மணி சித்துப் பாத்தி மனிதப் புதைகுழி உள்ளிட்ட அனைத்து புதைகுழிகளதும் அகழ்வாராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் அதற்கான சர்வதேச தடய அறிவியல் நிபுணர்கள் உள்ளிட்ட அனைத்து நிபுணர்களையும் நியமித்தல் அகழ்தெடுக்கப்படும் தடங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட அனைத்துச் செயற்பாடுகளும் ஐக்கிய நாடுகள் சபையின் முழுமையான பொறுப்பின் கீழ் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.

மேலும் சுயாதீன சர்வதேச விசாரணை வேண்டும். தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலைக்கு சுயாதீனமான, பாரபட்சமற்ற சர்வதேச குற்றவியல் விசாரணை விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்.

சர்வதேச பொறுப்புக் கூறல் பொறிமுறை. வடகிழக்கு தமிழர் தாயகத்தில் தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசினால் இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை அமைப்புகள் மற்றும் அரச சார்பற்ற மனித உரிமை நிறுவனங்களின் செய்யப்பட்ட பரிந்துரைகள், பொறுப்புக்கூறல் தொடர்பாக சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள் ஆவணங்களை எதிர்கால விசாரணை நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறை ஒன்றிற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு முறையாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் நிலுவையில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காண சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கைக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளைத் தொடங்க சர்வதேச நாடுகள் தங்களின் பலத்தைப் பயன்படுத்த வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கான உண்மை மற்றும் நீதி. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக நீதி கோரும் உள்ளகப் பொறிமுறைகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளதனால் அவர்களுக்கான சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்று உருவாக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களது சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டு உண்மை அறியும் உரிமையும் நீதியும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். அத்துடன் பொறுப்புடையவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

அரசியல் கைதிகளின் உடனடியான விடுதலை. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் நீண்ட காலமாக தடுப்புக் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் அனைவரும் உடன் விடுவிக்கப்பட வேண்டும் என்பதுடன் அமுலில் உள்ள பயங்கரவாத தடுப்புச் சட்டம் உடனடியாக நீக்கப்படவும் வேண்டும். இந்த பயங்கரவாத தடுப்புச் சட்டத்திற்கு மாற்றீடாக புதிதாக வேறு எந்த ஒரு சட்டமும் கொண்டு வரப்பட கூடாது.

இராணுவமயமாக்கலை முடிவுக்குக் கொண்டு வருதல். வடக்கு– கிழக்கு தமிழர் தாயகத்தில் பொது மக்களின் சிவில் வாழ்க்கை மற்றும் நிர்வாகத்தில் இராணுவத்தின் தேவையற்ற தலையீடு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, சிவில் நிர்வாகம் முழுமையாக வலுப்படுத்தப்பட வேண்டும். மக்களின் அன்றாட வாழ்க்கை, ஜனநாயகப் பங்கேற்பு மற்றும் சிவில் நிர்வாகத்தின் மீது இராணுவத்தின் தேவையற்ற செல்வாக்கு முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும். வடகிழக்கில் நிலை கொண்டுள்ள இராணுவம் உடனடியாக வெளியேற்றப்பட வேண்டும்.

தமிழ் மக்களின் நில உரிமையைப் பாதுகாத்தல். பொதுப் பயன்பாட்டுக்காக எனக் கூறிக்கொண்டு வடக்கு-கிழக்கு தமிழர் தாயகத்தில் முப்படையினராலும் ஏனைய அரச நிறுவனங்களாலும் ஆக்கிரமிக்கப்படடுள்ள தமிழ் மக்களின் பாரம்பரிய மற்றும் தையிட்டி, மயிலிட்டி, பலாலி, வயாவிளான், கேப்பாபிலவு உட்பட தனியார் காணிகள் அனைத்தும் விடுவிக்கப்பட்டு உடனடியாக உரிமையாளர்களிடம் கையளிக்கப்படல் வேண்டும். தொடரும் நில அபகரிப்பு, இராணுவமயமாக்கல் மற்றும் திட்டமிட்ட குடியேற்றம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

அரசின் திட்டமிடப்பட்ட இனப்பரம்பல் மாற்றத்தைத் தடுத்தல். வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் திட்டமிடப்பட்ட அரசின் நிர்வாக, அபிவிருத்தி, தொல்லியல், வனவள, வனவிலங்கு மற்றும் நீர்ப்பாசன நடவடிக்கைகள் எந்தவொரு சமூகத்தின் வரலாற்று வாழ்விட அமைப்பையும் உரிமைகளையும் பாதிக்கும் வகையில் பயன்படுத்தப்படாதிருப்பதை சர்வதேச அமைப்புகள் கண்காணிக்க வேண்டும்.

தமிழ் மக்களின் பண்பாட்டு மற்றும் மத உரிமைகளைப் பாதுகாத்தல். தமிழர்களின் தொன்மையான வரலாறு, கலை, பண்பாடு மற்றும் மரபுரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அரசானது எந்தவொரு சமூகத்தின் உரிமையையும் பாதிக்கும் வகையில் தொல்லியல், மதம் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. தொல்லியல் அல்லது மத நடவடிக்கைகளின் பெயரில் மக்களின் பாரம்பரிய உரிமைகள் பாதிக்கப்படாத வகையில் சுயாதீன கண்காணிப்பு பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.

ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான அங்கீகாரம். ஐ.நா. அமைப்பு மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும். தமிழினப் படுகொலைக்கும் தமிழினவழிப்புக்கும் வழி வகுத்திருந்த ஒற்றையாட்சிக்குட்பட்ட 13 ஆம் திருத்தம் மற்றும் 2015ஃ2019 வரையான காலப் பகுதியில் பதவியிலிருந்த அரசாங்கம் ஒற்றையாட்சியை மேலும் பலப்படுத்தும் விதத்தில் தயாரித்திருந்த ‘ஏக்யராஜ்ய’ உள்ளிட்ட ஒற்றையாட்சிக்குட்ட எந்த வடிவிலான தீர்வையும் தமிழ் மக்கள் முற்றாக நிராகரிப்பதுடன், தமிழ்த் தேசம் அதன் இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையிலான தீர்வொன்று மட்டுமே தமிழினப் படுகொலை மீள நிகழாமல் இருப்பதற்கும் தொடர் தமிழின அழிப்பைத் தடுத்து நிறுத்தவும் உதவும் வகையில் குறித்த தீர்வு எட்டப்படுவதனை சர்வதேச சமூகம் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.