“கையேட்டிலிருந்து டிஜிட்டலுக்கு…” அரச சேவையில் புதிய மாற்றம் – அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை அடிமட்டம் வரை கொண்டு செல்வோம் – அரசாங்க அதிபர்
அரச திணைக்களங்களில் மேம்பட்ட டிஜிட்டல் ஊடகங்களைப் பயன்படுத்தி மும்மொழிச் சேவை வழங்கலை மேலும் வினைத்திறனுடனும் இலகுவாகவும் முன்னெடுப்பதற்கான பயிற்சிப் பட்டறை யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (17.09.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சின் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் மொழிகள் பிரிவின் மேலதிக செயலாளர் மதுமதி வசந்தகுமார், நிர்வாக அலுவலர் A.A.F. நதிமியா, திட்ட அலுவலர் Gnananie Wickramasinghe உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், அரசாங்கத்தின் முக்கிய கொள்கை முன்னுரிமைகளில் டிஜிட்டல் பமயமாக்கலும் ஒன்றாகும். அரச சேவையை நவீனமயப்படுத்தி, பொதுமக்களுக்கு விரைவானதும் இலகுவானதுமான சேவைகளை வழங்குவதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவது அவசியம் எனத் தெரிவித்தார்.
மேலும், தற்போது பல அரச நிறுவனங்களில் டிஜிட்டல் நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள போதிலும், அவற்றுடன் பழைய கையேடு நடைமுறைகளும் தொடர்கின்றன. டிஜிட்டல் மயமாக்கலை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு புதிய தொழில்நுட்பத்தின் மீது நம்பிக்கை கொண்டு, தேவையற்ற பழைய நடைமுறைகளை படிப்படியாகக் கைவிட வேண்டும் என குறிப்பிட்டார்.
பிறப்புச் சான்றிதழ், கடவுச்சீட்டு சேவை, காணி சேவைகள், வாகன வரி செலுத்துதல் மற்றும் வங்கிச் சேவைகள் உள்ளிட்ட பல துறைகளில் டிஜிட்டல் மயமாக்கல் ஏற்கனவே மக்களுக்கு பயனளித்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அரச நிறுவனங்களின் இலத்திரனியல் உபகரணங்கள், பணியாளர்களின் டிஜிட்டல் அறிவு மற்றும் தொழில்நுட்பத் திறன்கள் காலத்திற்கேற்ப மேம்படுத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை அரச உத்தியோகத்தர்கள் புரிந்துகொண்டு, அவற்றை அரச சேவையின் வினைத்திறனை அதிகரிக்கப் பயன்படுத்த வேண்டும். இந்தப் பயிற்சியில் பங்கேற்கும் உத்தியோகத்தர்கள் பெற்றுக்கொள்ளும் அறிவை தமது அலுவலகங்களிலுள்ள ஏனைய உத்தியோகத்தர்களுடனும் பகிர்ந்து, அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் கொள்கையை நிறுவன மட்டத்தில் வலுப்படுத்த வேண்டும் என அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டார்.
பயிற்சி பட்டறை :
யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் பணியாற்றும் அலுவலர்கள் இப்பயிற்சிப் பட்டறையில் கலந்துகொண்டனர்.
அரச சேவைகளை டிஜிட்டல் மயமாக்கி, சுமார் 80% அரச சேவைகளை மக்கள் கைபேசி ஊடாக வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய டிஜிட்டல் கட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளது.
இதற்கமைவாக, அரச சேவையின் நவீனமயமாக்கல், டிஜிட்டல் மாற்றம் மற்றும் அனைத்து மக்களுக்கும் சமமான முறையில் அரச சேவைகளை வழங்குதல் ஆகிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இப்பயிற்சிப் பட்டறை முன்னெடுக்கப்பட்டது.
பயிற்சிப் பட்டறையில் “நல்லாட்சிக்கான செயற்கை நுண்ணறிவு (AI)” உள்ளிட்ட மேம்பட்ட டிஜிட்டல் ஊடகங்களின் பயன்பாடு தொடர்பில் விரிவான விளக்கங்கள் வழங்கப்பட்டன.
மேலும், டிஜிட்டல் ஊடகம் தொடர்பான பொதுக் கணினி விழிப்புணர்வு, மும்மொழி Google Forms உருவாக்குதல், மொழிபெயர்ப்பு கருவிகளின் பயன்பாடு, Mail Merge உள்ளிட்ட நடைமுறைப் பயன்பாடுகள் தொடர்பிலும் அலுவலர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இப் பயிற்சிகளை சமிச அபேசிங்க, நிறுவனர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO), Idasara Digital (Pvt) Ltd மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் AI தொழில்நுட்பத்திற்கான சிரேஷ்ட ஆலோசகர், அத்துடன் தங்கராஜ் தவரூபன், பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO), Speed IT Net (Pvt) Ltd மற்றும் Govtech Sri Lanka வளவாளர் ஆகியோர் வழங்கினர்.
இறுதியில் கேள்வி–பதில் மற்றும் கருத்துப் பரிமாற்ற அமர்வு இடம்பெற்றதுடன், அரச நிறுவனங்களில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மும்மொழிச் சேவை வழங்கலை மேலும் வலுப்படுத்துவதற்கான நடைமுறை அணுகுமுறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.