மயூரப்பிரியன்
இவ்வாறான நிலையில் தெல்லிப்பழை பிரதேச சபை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் , காரசாரமாக கருத்துக்களை வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் முன் வைத்தனர் .
கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , அருச்சுனா இராமநாதன் ஆகியோரும் காத்திரமான கருத்துக்களை முன் வைத்தனர்
தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டம் ஒருங்கிணைப்பு குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ச. சிறிபவானந்தராசா தலைமையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அதன் போது , கீரிமலை பகுதியில் வலி. தெற்கு பிரதேச சபையினரால் குப்பைகள் கொட்டப்பட்டு , அவற்றை மீள அள்ளுமாறு கோரியும் இது வரையில் மீள அள்ளப்படவில்லை என குற்றம் சாட்டப்பட்டது.
வலி. வடக்கு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ச. சஜீவன் , தற்போது குப்பைகள் கொட்டப்பட்டுள்ள பகுதிகளில் கடந்த 2018 – 2020ஆம் ஆண்டு கால பகுதிகளில் குப்பைகள் கொட்டப்பட்டன.
தெல்லிப்பழை பிரதேச வைத்தியசாலையின் கழிவுகளை எரியூட்டும் இயந்திரம் பழுந்தடைந்த வேளை மருத்துவ கழிவுகளை கூட இங்கே கொட்டினார்கள். அதற்கு அவ்வேளை நான் பிரதேச சபை உறுப்பினராக இருந்த போது கடும் எதிர்ப்பு தெரிவித்தேன். தொடர்ந்தும் பல தரப்பினர்களின் எதிர்ப்புக்களை அடுத்து , அந்நேரம் குப்பைகளை கொட்டாது தடுத்தோம்.
தற்போது மறுபடியும் அப்பகுதிகளில் குப்பைகளை கொட்டியுள்ளனர். இது தனியே கீரிமலை நல்லிணக்கபுரம் கிராமத்தை மாத்திரம் பாதிக்கவில்லை , கொல்லங்கலட்டி , மாவிட்டபுரம் உள்ளிட்ட அயல் கிராமங்களையும் பாதித்துள்ளது. இது பிரதேச சபை தவிசாளருக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை என தெரிவித்தார்.
அதன் போது, வலி. வடக்கு பிரதேச சபையின் உறுப்பினரான ப. சாருஜன் , வீடுகளில் டெங்கு நுளம்பு ஒழிப்புக்களில் ஈடுபடுகின்றனர். ஆனால் , கீரிமலை குப்பை கிடங்கில் டெங்கு நுளம்பு பெருமளவில் பரவுவதற்கு ஏதுவான சூழல் காணப்படுகிறது.
அந்த கிடங்குகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட டிப்பர் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. அவை அனைத்தும் மீள அள்ளப்பட வேண்டும். என தெரிவித்தார்
அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த மற்றுமொரு பிரதேச சபை உறுப்பினரான இதயராஜ் , இந்த கிடங்குகளில் குப்பைகளை கொட்டுவதற்கு ஒரு டிப்பருக்கு 02ஆயிரம் ரூபாய் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டது., அவ்வாறாக சுமார் 300 டிப்பர் கழிவு கொட்டப்பட்டதாக அறிகிறோம். ஆனால் கழிவுகளை கொட்டுவதற்க்காக கட்டணம் செலுத்தப்பட்டு , பற்றுசீட்டு வழங்கப்பட்டதாக இல்லை.
இது தொடர்பில் எமது வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளருக்கு தெரியாமல் , வலி. தெற்கு பிரதேச சபையினர் சர்வாதிகாரமாக கொண்டு வந்து கொட்டினார்களா ? அல்லது எமது தவிசாளரும் அதற்கு உடந்தையா ? என்பது தெரியவில்லை.
கழிவுகளை கொட்டி விட்டார்கள் , அதனை அள்ளுவதற்கு கால தாமதம் ஏற்பட்டாலும் ஏன் அதற்கு நெருப்பு வைத்தார்கள். கழிவுகளுக்கு நெருப்பு வைக்கப்பட்டமையால் , அவ்விடத்தில் வசிப்பவர்கள் சுவாச பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர்.
நாம் அப்பகுதிக்கு சென்று பார்வையிட்ட போது எம்மால் இரண்டு நிமிடங்களுக்கு மேல் அப்பகுதியில் நிற்க முடியவில்லை. எம்மால் சுவாசிக்க முடியாது கஷ்டப்பட்டோம் என்றார்
தொடர்ந்து மற்றுமொரு உறுப்பினர் சீத்தா சிவசுப்பிரமணியம் தெரிவிக்கையில், கழிவுகளை கொட்ட வேண்டாம் என நாம் தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னரும் அங்கே கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன. அப்பகுதிக்கு செல்வதனை தடுக்கும் முகமாக பாதையில் கேற் போடப்பட்டு , அதற்கு பூட்டு போடப்பட்டுள்ளது.
நாம் அப்பகுதிக்கு சென்ற போது, இந்த கேட் பூட்டை உங்கள் சபையை சேர்ந்தவர்கள் வந்து திறந்து விட்ட பின்னர் கழிவுகளை கொட்டி செல்கின்றனர். பின்னர் பூட்டை பூட்டி விட்டு செல்கின்றனர் என அங்குள்ளவர்கள் கூறினார்கள்.
எனவே இங்கே குப்பைகளை கொட்ட கூடாது என அறிவித்தல் பலகை நாட்டப்பட்ட வேண்டும். மல கழிவுகளையும் கொட்டுவதனை நிறுத்த வேண்டும். இனி வரும் காலங்களில் குப்பைகளை அங்கே கொட்ட விடாது தவிசாளர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தொடர்பில் ஒருங்கிணைப்பு குழு தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ச. பவானந்தராசா வலி. வடக்கு பிரதேச சபை தவிசாளரான சோ. சுகிர்தனிடம் கேள்வி எழுப்பிய போது,
வலி. தெற்கு பிரதேச சபையின் உக்கிய கழிவுகளை கொட்டுவதற்கே அனுமதி வழங்கப்பட்டது. ஆனாலும் அவர்கள் எமக்கு தெரியாமல் மேலதிக கழிவுகளையும் கொட்டி விட்டனர்.
இது தொடர்பில் எம்மால் வலி. தெற்கு பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்டதுடன் , எமது சபை உறுப்பினர்கள் உள்ளூராட்சி ஆணையாளர் உள்ளிட்ட தரப்பினருக்கும் முறையிட்டுள்ளாதால் , கொட்டிய கழிவுகளை மீள அள்ளுமாறு வலி. தெற்கு பிரதேச சபைக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அவற்றின் அடிப்படையில் வலி. தெற்கு பிரதேச சபையினர் கழிவுகளை தரம் பிரித்து தமது சபை ஆளுகைக்குள் உள்ள கழிவுகள் எரியூட்டும் நிலையத்திற்கு எடுத்து சென்று அவற்றை எரியூட்டி வருகின்றனர்.
இயந்திர வலுக்களை பயன்படுத்தி கழிவுகளை தரம் பிரிக்கவோ , பாரிய இயந்திரங்களை அப்பகுதிக்கு கொண்டு சென்று அவற்றை மீள அள்ளுவதோ முடியாததால் , அவற்றை மனித வலுவினை பயன்படுத்தியே தரம் பிரித்து வருகின்றனர். அதனால் கால தாமதம் ஏற்படுகிறது என தெரிவித்தார்
அதனை அடுத்து ஒருங்கிணைப்பு குழு தலைவர் இந்த மாத இறுதிக்குள் கொட்டப்பட்ட கழிவுகளை மீள அள்ளி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணித்தார்
அதன் போது நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதன் , யாழ்ப்பாணத்தில் எந்த பிரதேச சபைகளும் மக்களிடம் இருந்து கழிவுகளை தரம் பிரித்து பெறுவதில்லை. எல்லா கழிவுகளையும் ஒன்றாக பெற்று , அதனை கொண்டே தமது சபை ஆளுகைக்குள் கொட்ட இடமில்லை எனில் ,மற்றைய சபையின் ஆளுகைகளுக்குள் கொட்டுகின்றனர்
யாழ். மாநகர சபையினர் தம்மால் சேகரிக்கப்படும் கழிவுகளை மானிப்பாய் பிரதேச சபையின் ஆளுகைக்குள் உள்ள காக்கை தீவு பகுதியில் கொட்டுகின்றனர். அதேபோல் , வலி. தெற்கு பிரதேச சபையினர் தமது கழிவுகளை வலி. வடக்கு பிரதேசத்திற்கு கொட்டி செல்கின்றனர்.
உள்ளூராட்சி சபை சில ஒன்றிணைந்தாவது கழிவுகளை எரியூட்ட கூடிய , கழிவுகளை மீள் சுழற்சிக்கு உட்படுத்த கூடிய நிலையங்களை கட்ட வேண்டும்.
பிரதேச சபைகள் தமது நிதிகளில் மைதானங்கள் அமைக்கின்றோம், உள்ளக அரங்குகளை அமைக்கின்றோம் என் தொடங்க முதல் , சேகரிக்கப்படும் கழிவுகளை எவ்வாறு அகற்ற போகின்றோம் என சிந்திக்க வேண்டும்.
யாழ்ப்பாணத்தில் யாரும் கழிவு முகாமைத்துவத்தை பற்றி சிந்திக்கவில்லை. சபைகளுக்கு இடையில் முரண்பாடுகளை ஏற்படுகின்றன. அதனால் கழிவு முகாமைத்துவம் பற்றி சிந்தித்து முடிவுகளை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்தார்
அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ,
கீரிமலை பகுதியில் தற்போது கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் முன்னர் கற்கள் அகழப்பட்டன. அவ்வாறு கற்கள் அகழப்பட்டு பாரிய குழிகள் ஏற்படுவதால் நிலத்தடி நீர் மாசடையும் அபாயமும் , கடல் நீர் உட்புக கூடிய அபாயமும் காணப்பட்டதால் தான் கற்களை அகழ எதிர்ப்பு தெரிவித்து அதனை நிறுத்தினோம்.
தற்போது அந்த குழிகளுக்குள் கழிவுகளை கொட்டி இன்னமும் பாரிய விளைவுகளை ஏற்படுத்த முயல்கின்றனர்.
பிரதேச சபை உறுப்பினர்களின் முறைப்பாடுகள் , எதிர்ப்புகளையும் மீறி கழிவுகள் அவ்விடத்தில் கொட்டப்பட்டுள்ளது.
அப்பகுதியில் கழிவுகளை கொட்டுவதற்கு கடந்த காலங்களில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு , அது நிறுத்தப்பட்ட நிலையில் மீண்டும் அவ்விடத்தில் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது என்றால் இதொரு பாரிய விடயம்,
கழிவுகள் கொட்ட கூடாது என கூறப்பட்ட இடத்தில் 300 டிப்பர் கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளமை சாதாரண விடயம் இல்லை. அங்கு பாரிய ஊழல் நடந்து இருப்பதற்கான வாய்ப்பும் உள்ளது
எனவே இது தொடர்பில் விசேட விசாரணை குழு அமைக்கப்பட்டு , என்ன நடந்தது என்பதனை விசாரிக்க வேண்டும் என தெரிவித்தார்
அதற்கு பதிலளித்த ஒருங்கிணைப்பு குழு தலைவர் , இது தொடர்பில் உள்ளூராட்சி ஆணையாளருக்கு முறைப்பாடு செய்யப்பட்டு , அது தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுகிறது. அதில் திருப்தி இல்லை என்றால் நாம் ஒரு விசேட குழுவை நியமித்து அது தொடர்பில் விரிவான விசாரணைகளை முன்னெடுப்போம் என தெரிவித்தார்
அத்துடன் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை அதிகாரி , பொலிசாரின் சுற்றாடல் பிரிவு பொலிஸ் உத்தியோகஸ்தர் , வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் , பிரதேச செயலக உத்தயோகஸ்தர் , அப்பகுதி கிராம சேவையாளர் , அபிவிருத்தி உத்தியோகஸ்தர் உள்ளிட்டவர்களை உள்ளடக்கி குழு ஒன்றினை உருவாக்கி , கொட்டப்பட்ட கழிவுகள் தரம் பிரிக்கப்பட்டு , அகற்றப்படுகின்றதா ? அங்குள்ள தற்போதைய நிலவரம் தொடர்பில் ஆராய்ந்து விரிவான அறிக்கையை ஒரு வார காலத்திற்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு , பிரதேச செயலருக்கு ஒருங்கிணைப்பு குழு தலைவர் பணித்தார்
பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் சபை கூட்ட அறிக்கையுடன் மாத்திரம் நின்று விடாது. கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது போன்று குழுவினை அமைத்து கழிவுகளை மீள அள்ளுவதற்கும் , மீண்டும் அப்பகுதிகளில் கழிவுகளை கொட்டாது தடுப்பதற்கு விரைவாகவும் தொடர்ச்சியாக கண்காணிப்புக்கள் , உரிய நடவடிக்கைகளை எடுத்து கீரிமலையையும் அதனை சூழவுள்ள புனித தன்மையை பேணுவது மாத்திரமின்றி , எதிர்கால சந்ததியினருக்கு சுத்தமான இயற்கை வளமுடைய மண்ணை கையளிக்க வேண்டும் ,
