;
Athirady Tamil News

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த ஜார்ஜியா மெலோனி, நெதன்யாகு

0

ரோம்,

பிரதமர் மோடி இன்று தனது 76-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். குஜராத் மாநிலம் வாத்நகரில் 1950-ம் ஆண்டு செப்டம்பர் 17-ந்தேதி தாமோதர்தாஸ் முல்சந்த் மோடி-ஹீராபென் மோடி தம்பதியின் 3-வது மகனாக பிறந்தவர் நரேந்திர மோடி. குஜராத் மாநிலத்தின் முதல்-மந்திரியாக 2001-ம் ஆண்டு பதவியேற்ற மோடி, தொடர்ந்து 4 முறை அந்த மாநிலத்தின் முதல்-மந்திரியாக பதவி வகித்தார்.

பின்னர் 2014-ம் ஆண்டு நாடாளுன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வெற்றி பெற்றதையடுத்து இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்றார். தொடர்ந்து 2019, 2024 நாடாளுமன்ற தேர்தல்களிலும் பா.ஜ.க. வெற்றி பெற்ற நிலையில், தற்போது 3-வது முறையாக நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவி வகித்து வருகிறார். அதோடு தொடர்ச்சியாக அதிக நாட்கள் இந்தியாவின் பிரதமர் பதவியை வகித்தவர் என்ற சாதனையையும் மோடி படைத்துள்ளார்.

இந்நிலையில், இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு, மோடியின் 25 ஆண்டுகால பொதுவாழ்க்கையை பா.ஜ.க.வினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் உலக நாடுகளின் தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், இத்தாலி நாட்டின் பிரதமர் ஜார்ஜியா மெலோனி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “என் நண்பர் பிரதமர் நரேந்திர மோடிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். அவருக்கு உடல்நலம், ஆற்றல் மற்றும் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன். இத்தாலியும், இந்தியாவும் தங்களின் ஆழ்ந்த நட்புறவை தொடர்ந்து வலுப்படுத்தி, நமது நாடுகளுக்கு ஒத்துழைப்பு மற்றும் செழிப்பு நிறைந்த எதிர்காலத்தை ஒன்றிணைந்து கட்டமைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

அதே போல் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உங்கள் தலைமையின் கீழ் இந்தியா ஒரு உலக வல்லரசாக உருவெடுத்துள்ளது. நமது இரு பெரும் ஜனநாயக நாடுகளுக்கும் இடையே முன்னெப்போதும் இல்லாத வகையிலான ஒரு கூட்டாண்மையை நாம் இணைந்து உருவாக்கியுள்ளோம்.

இஸ்ரேல் மற்றும் இந்தியா இடையிலான நட்பு முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது. இதனை நாம் இணைந்து இன்னும் உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்வோம். நீங்கள் இன்னும் பல ஆண்டுகள் தலைமைப் பொறுப்பில் நீடிக்கவும், நல்ல உடல்நலத்துடனும் மனநிறைவுடனும் திகழவும் வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “பிரதமர் மோடிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். வெற்றிகரமான பிரிக்ஸ் உச்சிமாநாட்டை நடத்தியதற்கும், சுகாதார விவகாரங்களுக்கு முன்னுரிமை அளித்ததற்கும், ‘அனைவருக்கும் சுகாதாரம்’ மற்றும் உலகளாவிய சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு பிரிக்ஸ் தலைவர்களிடம் இருந்து வலுவான உறுதிமொழிகளைப் பெற்றதற்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.