வெடிபொருளுக்கு இரையாகி 12 வயதுக் குட்டி யானை பலி
மனித மனங்களை உலுக்குவதாக அமைந்துள்ள இச் சம்பவம் தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் மூத்த கால்நடை மருத்துவர் நிஹால் புஷ்பகுமார தெரிவிக்கையில், காட்டுப்பன்றிகள் போன்ற வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்படும் இக் கொடிய பொறிகளில் சிக்கி யானைகள் எதிர்கொள்ளும் துயரம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது எனக் குறிப்பிட்டனர்.
இக் கொடிய வெடிபொருள் வாய்க்குள் வெடிப்பதனால் யானைகளின் தாடை மற்றும் வாய் பகுதிகள் கடுமையாகச் சிதைந்துபோகின்றன. இதனால் ஏற்படும் கடுமையான வலி, காயம் மற்றும் நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாக இப் பிராணிகளால் ஒரு துளி நீரைக் கூட அருந்த முடியாமல், யாருடைய உதவியும் இன்றி மெல்ல மெல்ல மரணத்தைத் தழுவுகின்றன.
அந்த வகையில், இக் குட்டி யானையும் எந்தத் தவறும் செய்யாத நிலையில், தீவிர வேதனையை அனுபவித்து உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த மனித சமூகத்தையும் உலுக்கியுள்ளது.
கிழக்கு மாகாண வனவிலங்கு திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் எச்.ஜி. விக்ரமதிலகவின் அறிவுறுத்தலின் பேரில், மகாஓயா வனஜீவிகள் யானை கட்டுப்பாட்டுப் பிரிவினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
