;
Athirady Tamil News

தமிழர் பகுதியில் மீன் சந்தையில் சுகாதாரமற்ற மீன்கள் பறிமுதல் ; மக்களின் சுகாதாரத்திற்கு ஆபத்து

0

மட்டக்களப்பு – களுதாவளை மீன் சந்தையில் பொதுமக்களின் சுகாதாரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மீன்கள் சுகாதார அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டு உடனடியாக அழிக்கப்பட்டுள்ளன.இன்று (30.09.2026) புதன்கிழமை, களுவாஞ்சிகுடி மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினரால் களுதாவளை பகுதியில் விசேட சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது களுதாவளை மீன் சந்தையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், சுகாதாரமற்ற முறையில் மண்கலந்த நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 8 கிலோ மீன்கள் அதிகாரிகளின் கவனத்திற்கு வந்துள்ளன.

இதனையடுத்து குறித்த மீன்கள் உடனடியாக கைப்பற்றப்பட்டதுடன், அவை பொதுமக்களின் சுகாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை எனக் கருதி அழிக்கப்பட்டன.

அத்துடன், சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் வகையில் உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாகக் கூறப்படும் குறித்த வியாபாரிக்கு அதிகாரிகளால் கடுமையான இறுதி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு சுகாதாரமான உணவுப் பொருட்கள் மாத்திரமே விநியோகிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், சந்தைகள் மற்றும் உணவு விற்பனை நிலையங்களில் இவ்வாறான திடீர் சோதனைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.