;
Athirady Tamil News

போலந்து: முன்னாள் மாணவன் பள்ளியில் நடத்திய கொடூர தாக்குதலில் பெண் பணியாளர் பலி

0

வார்சா,

போலந்து நாட்டில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில், 15 வயது முன்னாள் மாணவர் நடத்திய கொடூர கத்திக்குத்து தாக்குதலில் பெண் துப்புரவு பணியாளர் ஒருவர் உயிரிழந்தார். தடுக்க முயன்ற பள்ளி முதல்வர் உட்பட 2 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளிக்குள் புகுந்த வன்முறை

போலந்தின் லெஸ்சிடோல் நோவினி கிராமத்தில் ஜான் பால் II தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் நேற்று (வியாழக்கிழமை) காலை 9 மணியளவில், அந்த பள்ளியின் 15 வயது முன்னாள் மாணவன் ஒருவர், தனது ஹெல்மெட்டில் கேமராவைப் பொருத்திக்கொண்டு, 3 கத்திகளுடன் பள்ளிக்குள் நுழைய முயன்றுள்ளார்.

தடுத்த பெண் பலி

மாணவனை உள்ளே விடாமல் தடுக்க முயன்ற 37 வயது பெண் துப்புரவு பணியாளரை அந்த மாணவன் கத்தியால் ஓங்கி குத்தினார். இதில் அந்த பெண் பலத்த காயமடைந்தார். இதையடுத்து ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

முதல்வரின் துணிச்சல்

பெண் பணியாளரின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த பள்ளி முதல்வர் கிருஸ்டோப் ஓச்மான்ஸ்கி மற்றும் மற்றொரு ஆசிரியர் மீதும் அச்சிறுவன் கத்திக்குத்து தாக்குதல் நடத்தினான். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருப்பினும், காயத்தையும் பொருட்படுத்தாமல் பள்ளி முதல்வர் அந்த சிறுவனை துணிச்சலாகப் போராடி மடக்கிப் பிடித்தார்.

விசாரணை தீவிரம்

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் சிறுவனைக் கைது செய்தனர். தாக்குதலுக்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை. காயமடைந்த பள்ளி ஊழியர்கள் உயிருக்கு ஆபத்தில்லை என போலந்து உள்துறை அமைச்சகம் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலந்தில் அடுத்தடுத்து பள்ளிகளில் நடக்கும் இத்தகைய தாக்குதல்களால் நாடு முழுவதும் பள்ளிப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.