;
Athirady Tamil News

சவுதியில் அதிகரிக்கும் பதற்றம்: அடுத்தடுத்து விமானங்களை ரத்து செய்யும் நிறுவனங்கள்

0

துபாய்,

சவுதி அரேபியாவில் நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, அந்நாட்டுக்கான விமான சேவைகளை ரத்து செய்வதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.இந்த தகவலை இந்திய தூதரகமும் உறுதி செய்துள்ளது. இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-, ரியாத்துக்கு வந்து செல்லும் இண்டிகோ விமானங்கள் 31-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல், ஜெட்டா, தம்மாம், மதீனா ஆகிய நகரங்களுக்கு வந்து செல்லும் விமானங்கள் 27-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளன”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதல் தீவிரம்

சவுதி அரேபியாவில் உள்ள விமான நிலையங்கள், எரிசக்தி நிலையங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளைக் குறிவைத்து டிரோன், ஏவுகணைத் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. ஈரான் ஆதரவு பெற்ற ஏமனின் ஹவுதி கிளர்ச்சிப் படை இந்த தாக்குதலை நடத்தி வருகிறது. ஏமன் உள்நாட்டு போரில் அரசு படைக்கு சவுதி ஆதரவு அளிப்பதால், ஹவுதி கிளர்ச்சிக்குழு இந்த தாக்குதலை நடத்தி வருகிறது. நேற்று முன் தினம், தம்மாமில் உள்ள கிங் பஹத் சர்வதேச விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 2 பேர் காயமடைந்தனர். அதே நாளில், சவுதி அராம்கோ நிறுவனத்தின் ஷைபா எண்ணெய் வயலில் நடந்த மற்றொரு தாக்குதலில் இந்தியர் ஒருவர் காயமடைந்தார்.

ஏர் இந்தியா விமானங்களும் ரத்து

சவுதி அரேபியா விமான நிலையங்களை குறிவைத்து தாக்குதல் அதிகரித்து வருவதால், விமான சேவைகளை பிற இந்திய விமான நிறுவனங்களும் ஏற்கனவே ரத்து செய்துள்ளன. ஏர் இந்தியா மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனங்கள் அனைத்து வழித்தடங்களிலும் 24-ம் தேதி வரை விமான சேவைகளை நிறுத்தியுள்ளன. ஆகாசா ஏர் நிறுவனம் 27-ம் தேதி வரை அனைத்து வழித்தடங்களிலும் விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. அவசரமாக சவுதி அரேபியாவிலிருந்து வெளியேற வேண்டிய இந்தியர்கள், தேவையான விசாக்களைப் பெற்றிருந்தால் பஹ்ரைன், குவைத் அல்லது கத்தார் வழியாகப் பயணம் செய்யலாம் என இந்திய தூதரகம் ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.