நிந்தவூர் கடலில் காணாமல் போன 18 மற்றும் 23 வயதுடைய இருவரையும் தேடும் பணிகள் தீவிரம்
அம்பாறை மாவட்டம், நிந்தவூர் கடற்கரையில் இன்று (20) மதியம் கடலில் நீராடச் சென்றவர்களில் திடீரென அலையில் இழுத்துச் செல்லப்பட்டவர்களுள் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காணாமல் போயுள்ள மற்றைய இருவரையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இன்று மதியம் நிந்தவூர் கடற்கரையில் நீராடச் சென்றிருந்தவர்களில் நிலாம் அப்துல்லா ஆபித் (வயது 17)
என்பவர் உயிருடன் மீட்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, அலையில் இழுத்துச் செல்லப்பட்டுக் காணாமல் போயுள்ள ஏனைய இருவரும் பின்வருமாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்:
முகமது அன்வர் ஆத்திப்(18 வயது)
நௌவ்சாத் ஹபுனத் (வயது 23)
காணாமல் போன இருவரையும் தேடும் பணிகள் பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் மீட்புக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தற்போது கடலின் நீரோட்டம் அக்கரைப்பற்று திசையை நோக்கிச் செல்வதாகத் தெரிவிக்கப்படுவதால், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் உள்ளிட்ட தென்கிழக்குக் கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள், கடலுக்குச் செல்வோர் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
சம்பவத்தின் பின்னணி:
ஐந்து மாணவர்கள் இன்று மதியம் நிந்தவூர் கடற்கரைக்குச் சென்றிருந்த நிலையில், அவர்களில் இருவர் கடலில் இறங்கி நீராடியுள்ளனர். இதன்போது எதிர்பாராத விதமாக ஒருவர் திடீரென கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இதனை அவதானித்த கரையிலிருந்த ஏனைய மாணவர்கள் அபயக்குரல் எழுப்பியுள்ளனர். அவர்களின் கூக்குரலைக் கேட்ட அப்பகுதியிலிருந்த பொதுமகன் ஒருவர் உடனடியாகக் கடலில் குதித்து, அலையில் சிக்கியிருந்த மாணவர்களில் ஒருவரைப் போராடி மீட்டுக் கரைக்குக் கொண்டு வந்துள்ளார்.
தொடர்ந்து, கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த மற்றைய மாணவரைக் காப்பாற்றுவதற்காக அப்பொதுமகன் மீண்டும் கடலுக்குள் சென்றபோது, எதிர்பாராத விதமாக அவரும் குறித்த மாணவரும் பாரிய அலையில் இழுத்துச் செல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. மீட்கப்பட்ட நபர் உடனடியாக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அம்பாறை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தகவலறிந்த நிந்தவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தலைமையிலான பொலிஸார், இராணுவத்தினர், கடற்படையினர் ஆகியோர் இணைந்து நவீன ட்ரோன் தொழில்நுட்பத்தின் உதவியுடனும் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக, சாய்ந்தமருது ஜனாஸா பேரவை, கல்முனை ஆழ்கடல் மீட்புக் குழுவினர் மற்றும் நிந்தவூர் ஜனாஸா நலன்புரி அமைப்பின் மீட்பு வாகனம் உள்ளிட்ட தன்னார்வ மீட்புக் குழுவினரும் கடற்கரையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தை அறிந்து பெருமளவான பொதுமக்கள் நிந்தவூர் கடற்கரையில் திரண்டுள்ளதுடன், பல்வேறு தரப்பினரும் தேடுதல் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். எனினும், மாலை வேளையாகி இருள் சூழ்ந்துள்ளமையால் கடலில் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, நாளை (21) அதிகாலை மீண்டும் தீவிர தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
