விற்கப்படும் ஐஸ்கிரீம்கள் தொடர்பில் விசேட பரிசோதனைகள்!
இலங்கையில் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம்களின் தரம் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் விசேட பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதற்காகப் பல்வேறு உற்பத்தியாளர்களின் ஐஸ்கிரீம் மாதிரிகளை நுகர்வோர் விவகார அதிகாரசபை சேகரித்துள்ளதுடன், கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் ஆய்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஐஸ்கிரீம் உள்ளிட்ட சந்தையில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களைப் பரிசோதிக்கும் நடவடிக்கையை சுகாதார அமைச்சும் ஆரம்பித்துள்ளது.
இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் SLS 223:2017 தரத்தின்படி, ‘ஐஸ்கிரீம்’ என விற்பனை செய்யப்படும் பொருட்களில் குறிப்பிட்ட அளவு பால் கொழுப்பு இருக்க வேண்டும்.
பால் கொழுப்புக்குப் பதிலாக தாவரக் கொழுப்பைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படும் பொருட்களை ‘ஐஸ்கிரீம்’ என விற்பனை செய்ய முடியாது.
அவை ‘உறைந்த இனிப்புப் பண்டம்’ எனப் பெயரிடப்பட வேண்டும் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேசமயம் தரமற்ற தயாரிப்புகளைக் கண்டறிந்து, தவறான பெயரிடல் மூலம் நுகர்வோர் ஏமாற்றப்படுவதைத் தடுப்பதே இந்தப் பரிசோதனைகளின் நோக்கம் என சுகாதார அமைச்சும் தெரிவித்துள்ளது.