;
Athirady Tamil News

மியான்மர் அரசு ரோகிங்கியா மக்களை இனப்படுகொலை செய்தது: சர்வதேச கோர்ட் தீர்ப்பு

0

மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் கடந்த 2017-ம் ஆண்டு ராணுவம் நடத்திய தாக்குதல்களில் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதுடன், குழந்தைகள் மீதும் கொடூரமான தாக்குதல்கள் நடத்தப்பட்டன. நூற்றுக்கணக்கான கிராமங்கள் தீ வைத்து அழிக்கப்பட்டன.இந்த தாக்குதல்களால் சுமார் 7 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா மக்கள் அண்டை நாடான வங்காளதேசத்துக்கு அகதிகளாக தப்பிச் சென்றனர்.

இனப்படுகொலை

இதுதொடர்பாக, மியான்மர் அரசு மீது இனப்படுகொலை குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, கடந்த 2019-ம் ஆண்டு சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 1948-ம் ஆண்டு இனப்படுகொலை தடுப்பு ஒப்பந்தத்தை மியான்மர் மீறியதாக அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம், மியான்மர் ராணுவத்தின் நடவடிக்கைகள் ரோஹிங்கியா மக்களின் ஒரு பகுதியை அழிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டவை என்று தெரிவித்தது.மேலும், ரோஹிங்கியா மக்களுக்கு எதிராக இனப்படுகொலை நடைபெற்றதை உறுதி செய்த நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கான பொறுப்பும் மியான்மர் அரசுக்கு இருப்பதாக தெரிவித்துள்ளது.

முக்கியத்துவம் பெற்ற தீர்ப்பு

இடம்பெயர்ந்த ரோஹிங்கியா மக்கள் பாதுகாப்பாகவும் கண்ணியத்துடனும் தங்களது சொந்த இடங்களுக்கு திரும்புவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.இந்த தீர்ப்பு சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஒரு நாட்டையே இனப்படுகொலை குற்றத்துக்கு பொறுப்பாக்கி சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.