ஏற்றுமதித் துறைக்கு புதிய உத்வேகம்!
வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 750 மில்லியன் ரூபா, ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ‘ஸ்ரீலங்கா எக்ஸ்போ 2027’ (Sri Lanka Expo 2027) கண்காட்சிக்கும், தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழான முன்னுரிமைகளுக்கும் பயன்படுத்தப்படும்.
வர்த்தகத்திற்கான தேசிய ஒற்றைச் சாளர முறைமை (National Single Window for Trade) இம்முறை வரவுசெலவுத் திட்டத்தின் மிகவும் நடைமுறைச் சாத்தியமான சீர்திருத்தங்களில் ஒன்றாகும். தெரிவுசெய்யப்பட்ட ஏற்றுமதிகளுக்கான முன்னோடித் திட்டம் நவம்பர் 5 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்துவதற்காகக் கிட்டத்தட்ட 2 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 2027 ஆம் ஆண்டின் முதல் அரையாண்டில் ஏற்றுமதியாளர்களையும், இரண்டாம் அரையாண்டில் இறக்குமதிகள் மற்றும் மீள்-ஏற்றுமதிகளையும் இம்முறைமைக்குள் கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஒரே இடத்தில் ஆவணங்களைச் சமர்ப்பிக்கும் வசதியானது, ஒரே தகவலைப் பல நிறுவனங்களுக்கு அனுப்புவதில் வணிகங்கள் செலவிடும் நேரத்தைக் குறைக்கும். கப்பல் ஏற்றுமதிக் காலக்கெடுவைக் கொண்ட ஒரு சிறிய ஏற்றுமதியாளருக்கு, தமது விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதை அறியக்கூடியதாக இருப்பதே மிகப்பெரிய நன்மையாகும்.
இதே காரணங்களுக்காக, ஏற்றுமதிச் செயலாக்கத்திற்கான தற்காலிக இறக்குமதித் திட்டத்தை நவீனமயப்படுத்தும் முன்மொழிவும் கவனத்திற்குரியவை. இங்கு முடிவுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்குப் பல உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து விசேட உள்ளீட்டுப் பொருட்கள் தேவைப்படுகின்றன. இத்திட்டத்தின் வரிச் சலுகைகளின் கீழ் அப்பொருட்களை எளிதாகப் பெறுவது, தமது வளங்களுக்கு அப்பாற்பட்ட ஏற்றுமதிப் பணிகளையும் சிறிய நிறுவனங்கள் ஏற்றுக்கொள்வதற்கு உதவும்.
புதிதாக VAT வரிக்குப் பதிவுசெய்யப்பட்ட வணிகங்களின் கடந்த ஆறு மாத மொத்த விற்பனையில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை ஏற்றுமதி மூலம் கிடைத்திருந்தால், அவர்களைத் தகுதியான ஏற்றுமதியாளர்களாக அங்கீகரிக்க வரவுசெலவுத் திட்டம் முன்மொழிகிறது. இது புதிய நிறுவனங்களுக்கு விரைவாகத் தகுதி பெறுவதற்கான வழியை வழங்குகிறது. இது ஒரு விவேகமான மாற்றமாகும். ஒரு நிறுவனத்திடம் நிறைய உற்பத்திக் கட்டளைகள் இருந்தாலும், VAT வரி மீளளிப்புக்காகக் காத்திருக்கும் வேளையில் அடுத்த உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை வாங்கவோ அல்லது சம்பளம் வழங்கவோ சிரமப்பட நேரிடும். தெளிவான செயலாக்கக் காலக்கெடுவும், விரைவான வரி மீளளிப்பும் இம்முன்மொழிவுக்கு முழுமையான பெறுமதியை வழங்கும்.
பெரிய முதலீடுகளைச் செய்யத் திட்டமிடும் உற்பத்தியாளர்களுக்காக, முதலீட்டுச் சபையினால் (BOI) அங்கீகரிக்கப்பட்ட தகுதியான திட்டங்களுக்குத் தகுதிபெறும் செலவினத்தில் 200% சமமான மூலதனக் கொடுப்பனவை (capital allowance) வரவுசெலவுத் திட்டம் முன்மொழிகிறது. ஏற்றுமதி உற்பத்தியாளர்கள் மூன்று ஆண்டுகளுக்குள் குறைந்தபட்சம் 3 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்ய வேண்டும். புதிய மற்றும் ஏற்கனவே உள்ள கைத்தொழில் பேட்டைகளின் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 4 பில்லியன் ரூபாவுடன் இணைந்து, இது புதிய இயந்திரங்களைப் பொருத்துவதற்கும், உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கும், ஏற்றுமதி விநியோகச் சங்கிலிகளில் அதிகளவான உள்ளூர் விநியோகஸ்தர்களை இணைத்துக் கொள்வதற்கும் துணைபுரியும்.சந்தை வாய்ப்புகளைக் கொள்வனவுக் கட்டளைகளாக மாற்றுதல்
வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 750 மில்லியன் ரூபா, ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ‘ஸ்ரீலங்கா எக்ஸ்போ 2027’ (Sri Lanka Expo 2027) கண்காட்சிக்கும், தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழான முன்னுரிமைகளுக்கும் பயன்படுத்தப்படும். சிறிய நிறுவனம் ஒன்று பல மாதங்கள் முயன்றாலும் சென்றடைய முடியாத கொள்வனவாளர்களைச் சந்திப்பதற்கு, நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட கண்காட்சி வழிவகுக்கும். கொள்வனவாளர் மாதிரிகளைக் (samples) கோரி, விவரக்குறிப்புகளுக்கு இணங்கி, கொள்வனவுக் கட்டளையை வழங்கும் போதே அதன் உண்மையான வர்த்தகப் பெறுமதி வெளிப்படுகிறது. பரிசோதனை, மூலத்தைக் கண்டறிதல் (traceability) மற்றும் சான்றிதழ் பெறுதல் தொடர்பான கொள்வனவாளர்களின் தேவைகளை வணிகங்கள் பூர்த்தி செய்ய ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவுடனான நிலைபேறான வர்த்தகத் திட்டம் (EU-supported sustainable trade project) உதவும்.
சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளும் வரவேற்கத்தக்கவை. இந்தியாவுடனான தற்போதைய வர்த்தக ஒப்பந்தத்தை விரிவுபடுத்துதல், பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டுறவில் (RCEP) இணைவதற்கான இலங்கையின் விண்ணப்பம் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம், ஓமான் ஆகிய நாடுகளுடனான உத்தேச ஒப்பந்தங்கள் குறித்த பணிகளை வரவுசெலவுத் திட்டம் கோடிட்டுக் காட்டுகிறது. எந்தவொரு புதிய வர்த்தக விதிமுறைகளையும் பயன்படுத்துவதற்கு, தீர்வை வரிகள், உற்பத்தித் தரநிலைகள் மற்றும் தகுதி பெறுவதற்குத் தேவையான ஆவணங்கள் குறித்து ஏற்றுமதியாளருக்குத் தெளிவான பதில்கள் தேவை.
நைரோபியிலிருந்து பார்க்கும்போது, பதப்படுத்தப்பட்ட உணவுகள், இறப்பர் பொருட்கள், மின்சாரப் பொருட்கள் மற்றும் தொழில்சார் சேவைகள் போன்ற துறைகளில் கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள வாய்ப்புகளை இலங்கை வணிகங்கள் ஆராய்வதற்குப் பரந்த இடமுள்ளது. சரியான பங்காளரைக் கண்டறிவதே பெரும்பாலும் முதலாவது வர்த்தகத் தடையாக இருக்கும். ஒரு மின்சாரப் பொருள் உற்பத்தியாளருக்கு விற்பனைக்குப் பிந்தைய சேவையை வழங்கக்கூடிய விநியோகஸ்தர் தேவைப்படலாம். ஒரு உணவு உற்பத்தியாளர் தமது பொதியிடல் அல்லது பெயர்ச்சிட்டையை (labelling) மாற்றியமைக்க வேண்டியிருக்கலாம். வணிகங்கள் கணிசமான நேரத்தையும் பணத்தையும் முதலீடு செய்வதற்கு முன்னரே, சந்தைத் தேவையை மதிப்பிடவும், அத்தகைய அறிமுகங்களை ஏற்படுத்திக் கொடுக்கவும் வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களும் ஏற்றுமதி ஊக்குவிப்பு முகவர் நிலையங்களும் உதவ முடியும்.
நிதி ஒழுக்கத்திற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் நான் வரவேற்கிறேன். இன்று விலைமனுக் கோரலைச் (quote) சமர்ப்பித்துப் பல மாதங்களுக்குப் பிறகு பொருட்களை விநியோகிக்கும் ஓர் ஏற்றுமதியாளர், கொள்வனவாளர் பணம் செலுத்துவதற்கு நீண்ட காலத்திற்கு முன்னரே மூலப்பொருட்கள், சம்பளம், சரக்குக் கட்டணம் மற்றும் நிதிச் செலவுகளை மதிப்பிட வேண்டியுள்ளது. அதிகளவான பொருளாதார முன்கணிப்புத் தன்மையானது, அத்தகைய பொறுப்புகளை ஏற்பதற்கு வணிகங்களுக்கு அதிக நம்பிக்கையை அளிக்கிறது.
தொழிற்சாலை மட்டத்திலும் துறைமுகத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பல சீர்திருத்தங்களை அரசாங்கம் தெரிவுசெய்துள்ளது. இன்னும் ஓராண்டு கழித்து, மூன்று நடைமுறைக் கேள்விகளின் அடிப்படையில் இந்த முன்னேற்றத்தை நான் மதிப்பிடுவேன்: சரக்குகள் விரைவாக விடுவிக்கப்படுகின்றனவா? தகுதியான நிறுவனங்களுக்கு VAT வரி மீளளிப்பு விரைவாகக் கிடைக்கிறதா? மேலும், அதிகளவான சிறிய உற்பத்தியாளர்கள் தமது முதலாவது வெளிநாட்டுக் கட்டளையைத் தொடர்ச்சியான வர்த்தகமாக (repeat business) மாற்றுகிறார்களா? இலங்கையால் வழங்கக்கூடிய தரத்தின் மீது கொள்வனவாளர் நம்பிக்கை வைத்துள்ளார் என்பதற்கான மிகத் தெளிவான அடையாளங்களில் ஒன்று, அந்த இரண்டாவது கொள்வனவுக் கட்டளையாகும்.