பேருந்துடன் கார் மோதி பெண் வைத்தியசாலையில்
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில், குடாகம மயானத்திற்கு அருகிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில் தனியார் பேருந்துடன் கார் மோதிய விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இன்று (23) பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில், தலவாக்கலையிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து குடாகம பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்த முற்பட்டபோது, பின்னால் வந்த கார் பேருந்தின் பின்புறத்தில் மோதியுள்ளது.
காரின் சாரதியால் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாததே விபத்துக்குக் காரணம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் காரில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்துள்ளதுடன், பேருந்தில் பயணித்தவர்கள் மற்றொரு பேருந்தில் தமது பயணத்தைத் தொடர்ந்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.