;
Athirady Tamil News

13உம் இனவாதமும் !! (கட்டுரை)

0

ஜனாதிபதியின் கொள்கைப் பிரகடனத்தின் மீதான விவாதத்தில் பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜே.வி.பியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் அல்லது 13+ இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என்று அறுதியிட்டு ஜே.வி.பியின் மிக நீண்டகால நிலைப்பாட்டை மீள வலியுறுத்திக் கருத்துரைத்திருந்தார்.

1978ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்புச் சட்டமோ அல்லது அதில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களோ மக்கள் வாக்கெடுப்பின் மூலம் அங்கிகரிக்கப்படவில்லை என்ற அநுர குமார, வடக்கு மற்றும் தெற்கில் உள்ள மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் புதிய அரசியலமைப்பின் மூலமே இனப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துவேன் என்று ஜனாதிபதி ரணில் தட்டிவிட்ட பொறி, இனவாதிகளைப் பற்றிக்கொண்டு, மீண்டும் இனவாதிகளும் இனவாதக் கருத்துகளும் அரசியல் முன்னரங்கில் தலைதூக்கத் தொடங்கியுள்ளன.

13ஐ பௌத்த பிக்குகள் எதிர்ப்பது என்பது புதுமையானதல்ல. அவர்கள் அன்றும் அதை எதிர்த்தார்கள்; இன்றும் எதிர்க்கிறார்கள். இதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. ஜே.வி.பியும் அது போலத்தான். அவர்களும் அன்று மிகக் கடுமையாக 13ஐ எதிர்த்தார்கள். 13இன் கீழ் முதலாவது மாகாண சபைத் தேர்தல் நடந்தபோது, பெரும் வன்முறைத் தாக்குதல்களை ஜே.வி.பி என்ற பயங்கரவாத இயக்கம் நடத்தியிருந்தது.

ஆயுதங்களை விடுத்து, அவர்கள் ஜனநாயக நீரோட்டத்தல் கலந்துகொண்ட பின்னர் கூட, ஜே.வி.பி தன்னை மிகப் பெரும் ‘சிங்கள-பௌத்த’ இனவாத சக்தியாகவேதான் முன்நிறுத்தியது, இதைப்பற்றி முன்னைய பத்திகளில் விரிவாக எழுதியுள்ளேன்.

அவர்கள் தொடர்ந்தும் 13ஐ மட்டுமல்ல; தமிழர்களுக்கான எந்தவோர் அதிகாரப் பகிர்வையும் கடுமையாக எதிர்த்தே வந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்ல, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் படி, ஒன்றிணைந்த வடகிழக்கு மாகாணங்களைப் பிரிக்கவேண்டும் என உயர்நீதிமன்றம் வரை சென்று வழக்காடி, வடக்கு-கிழக்கை பிரித்தவர்கள் ஜே.வி.பியினர்தான்.

அரசியலுக்காக இனவாதத்தைப் பயன்படுத்தும் ஒருதரப்பு, இலங்கை அரசியலில் இருக்கிறது. அவர்களுக்கு இனவாதம் என்பது வாக்குகளைப் பெறும் ஒரு கருவி. ஆனால், மிக அடிப்படையிலே இனவெறிகொண்ட, தமது இரத்தம், நாடி, நாளங்கள் என எங்கும் இனவெறி ஊறிய, ஒவ்வொரு செல்லிலும் இனவாதம் நிறைந்த ஓர் அமைப்புக்களில் ஜே.வி.பியிற்கு நிலையான இடமிருக்கிறது. ஜே.வி.பி-யிற்கு தலைவராக அநுர குமார வந்தால் என்ன, முனைவர் ஹரிணி அமரசூரிய வந்தால் என்ன, யார் வந்தாலென்ன அந்த இனவெறி மாறாது.

இந்த இடத்தில், இல்லையே அநுர குமார 13ஐ தானே எதிர்க்கிறார். சர்வசனவாக்கெடுப்பில் மக்களுடைய அங்கிகாரத்தைப் பெறும் புதிய​தோர் அரசியலமைப்பை அநுர குமார எதிர்க்கவில்லையே என சில வினவலாம். இங்கேதான் அநுர குமார எனும் பேச்சில் வல்லோனின் வாய்ஜாலத்தைத்தாண்டி நாம் சிந்திக்க வேண்டியதாகவிருக்கிறது.

அநுர சர்வசனவாக்கெடுப்பில் அங்கிகாரம் பெறுவதுதான் ஓர் அரசியலமைப்புக்கான அங்கிகாரமாக நிறுவ விளைகிறார். இதைவிடப் பெரிய பெரும்பான்மைவாதம் இருக்க முடியாது. சர்வசனவாக்கெடுப்பில் அங்கிகாரம் என்பதன் அர்த்தம் என்ன? நாட்டிலுள்ள வாக்காளர்கள் அனைவரிலும் பெரும்பான்மையானோரின் அங்கிகாரம்; அதாவது 50%ற்கு அதிகமானவர்களின் அங்கிகாரம். 25 சதவீதமளவுக்கு சிறுபான்மையினரைக் கொண்டதோர் இலங்கை போன்ற பேரினவாதம் நிறைந்த நாட்டில், பெரும்பான்மையினருக்கு சாதகமானதும், சிறுபான்மையினருக்கு எதிரானதுமானதோர் அரசியலமைப்பை, 50 சதவீத அங்கிகாரத்தோடு நிறைவேற்ற முடியாதா என்ன?

பெரும்பான்மையினர்களில் மூன்றிலிரண்டு பேர் அங்கிகரித்தாலே போதும்; ஒரு சிறுபான்மையின வாக்கும் இல்லாமலும், பெரும்பான்மையினரில் மூன்றிலொரு பங்கினரின் வாக்குகள் இல்லாமலும் சர்வசனவாக்கெடுப்பில் அங்கிகாரமொன்றை இலகுவில் வென்றுவிட முடியும். இது ஜே.வி.பியிற்கு நன்றாகவே தெரியும்.

ஜே.வி.பி என்பது ஒரு பேரினவாத சக்திதானே! அது சொல்லியா தெரியவேண்டும் என்பவர்களுக்கு புரிய வேண்டிய விடயம் ஒன்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், குறிப்பான அநுர குமார, ஜே.வி.பி தலைவரான பின்னர், ஜே.வி.பி தனது பழைய பயங்கரவாத, இனவாத வரலாறு தெரியாத புதிய இளம் வாக்காளர்களைக் கவர்வதற்காக தன்னை ஊழலுக்கு எதிரான சக்தியாக, நல்லாட்சியை வழங்கு இரட்சகனாக முன்னிறுத்த விளைகிறது.

அதற்கான அதனுடைய பகீரதப் பிரயத்தனங்களில் ஒன்றுதான் ஜே.வி.பி என்ற பெயரை மாற்றி என்.பி.பி என்ற புதிய முகமூடியை அணிந்துகொண்டமையாகும். அதுபோல, கொழும்பின் உயர்குழாமிடையே தமது செல்வாக்கை அதிகரித்துக்கொள்ள முனைவர் ஹரிணி அமரசூரியவுக்கு தன்னுடைய தேசிய பட்டியல் ஆசனத்தை வழங்கியமை, மற்றும் கொழும்பு உயர் குழாமினரிடையே பிரபல்யம் பெறும் வகையிலானவர்களை என்.பி.பியின் பிரசார முன்னரங்கிற்கு கொண்டு வந்தமை என தனது பயங்கரவாதமும் இனவெறியும் நிறைந்த கடந்தகாலத்தை மறைப்பதற்கு ஜே.வி.பி கடுமையாக முயல்கிறது.

ஆனால், என்.பி.பி என்ற முகமூடியை அணிந்துகொண்டாலும், அலங்காரத்துக்காக கொழும்பின் உயர்குழாமினர் சிலரை முன்னரங்கில் வைத்திருந்தாலும், என்.பி.பியின் ஆன்மாவும் உடலும் இதயமும் தசையும் இரத்தோட்டமும் எல்லாம் அதே பழைய பயங்கரவாதமும் இனவாதமும் நிறைந்த ஜே.வி.பிதான். அவர்கள் தங்கள் கொள்கையில் கொஞ்சமும் மாறுபடவில்லை என்பதைத்தான் அநுர குமாரவின் பேச்சும் அப்பட்டமாக வௌிக்காட்டி நிற்கிறது. இந்த என்.பி.பி மாயைக்குள் தமிழர்களும் சிறுபான்மையினரும் விழுந்துவிடக்கூடாது.

மறுபுறத்தில், 13ஐப் பற்றி சஜித் பிரேமதாஸ இன்னும் வாய் திறக்கவில்லை. ஜே.வி.பியிற்கு எப்படிப் பார்த்தாலும் சிறுபான்மையின வாக்குவங்கி என்று ஒன்று கிடையாது. ஆனால், சஜித்தின் ‘சமகி ஜன பலவேகய’வைப் பொறுத்தவரையில் கணிசமானளவு சிறுபான்மையின வாக்குகள் உண்டு. ஆகவே, இது போன்ற விடயங்களில் எந்த நிலைப்பாட்டையும் வௌிப்படையாக எடுக்க முடியாத நிலை அவர்களுக்கு இருக்கிறது.

இவர்களும் மேற்சொன்ன ஜே.வி.பி அளவிற்கு ஆபத்தானவர்கள்தான். சஜித் பிரேமதாஸ எந்த வகைியல் ராஜபக்‌ஷர்களிலிருந்து வேறுபட்டவர் என்பதில் எந்தத் தௌிவுமில்லை.

சிறுபான்மையினரின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் அவரது நிலைப்பாட்டுக்கும் ராஜபக்‌ஷர்களின் நிலைப்பாட்டுக்கும் என்ன வித்தியாசமிருக்கிறது. இருவரும், ”அனைவருக்குமான சம உரிமை; இது அனைவருக்குமான நாடு; அனைவரும் ஒருதாய் மக்கள்” என்ற வாய்ஜாலத்தை முன்வைக்கிறார்களேயன்றி, அதனைத்தாண்டியதொரு காத்திரமான அதிகாரப்பகிர்வு தொடர்பான உறுதியை வழங்க ராஜபக்‌ஷர்களும் தயாரில்லை; சஜித்தும் தயாரில்லை. ஏனென்றால், இருவருக்குமே பெரும்பான்மையின வாக்குகள் தேவை.

அப்படியானால், ஜனாதிபதி ரணில் மட்டும் என்ன மேலா? இன்று இந்த சூழலில் 13ஐப் பற்றிய வாதத்தை இழுத்துவிட்டு ‘நரித்தனம்’ ஆடுகிறார் என்றும் சிலர் கேட்கலாம்.
13ஆம் திருத்தம் கொண்டுவரப்பட்ட நாளிலிருந்து இன்று வரை, இலங்கையின் எந்த ஜனாதிபதி, அனைத்துக் கட்சிகளின் முன்பும் பகிரங்கமாக, நான் 13ஐ முழுமையாக அமல்படுத்தப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறார்? சரி, அவர் ‘நரி’த்தனத்திற்காக சொன்னார் என்றே எடுத்துக்கொள்வோம். அந்த நரித்தனம் தமிழ் மக்களுக்கு ஒன்றை மிக உறுதியாக உணர்த்தியிருக்கிறது.

கடந்த வருடம் ‘அறகலய’ எழுந்தபோது அதில் மக்களின் உரிமைகளைப் பற்றிப் பேசிய குரல்களெல்லாம், 13ஐ அமல்படுத்துவோம் என்றதும் பம்முகிறது; அல்லது, அதை எதிர்க்கிறது. இதுதான் ‘அறகலய’வின் உண்மை முகம். கோட்டாவை விரட்ட எழுந்ததுதான் ‘அறகலய’. அந்தளவில் அது வரலாற்றுச் சிறப்புமிக்கதொரு மக்கள் எழுச்சி. அதனைத்தாண்டி அதற்கு வேறு முக்கியத்துவமெல்லாம் கிடையாது.

இலங்கை இன்றும் இனரீதியில் பிளவடைந்தே இருக்கிறது. இதைச் சொல்வதற்கு நான் வருத்தப்படுகிறேன். ஆனால் இதுதான் உண்மை. ஓர் ‘அறகலய’ இதனை மாற்றிவிடவில்லை. இவர்கள் சொன்ன ‘சிஸ்டம் சேன்ஞ்’க்குள் சிறுபான்மையினருக்கு இடமில்லை என்பதுதான் நகைமுரண். அதை ஜனாதிபதி ரணில் நாசூக்காக உணர்த்தியிருக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.