;
Athirady Tamil News

சமூகத்தினை கட்டியெழுப்பும் சிற்பிகள் ஆசிரியர்கள் : ஆசிரியர்களைப் போற்றுவோம்

0

சிறந்த தலைவர்களை கொண்ட எந்தவொரு நாடும் எத்தகைய சவால்களையும் இலகுவாக எதிர்கொண்டு வென்று வாழும். அத்தகைய சிறந்த தலைவர்களை ஆக்கும் மிகப்பெரிய பணியினை செய்தும் முடிப்பவர்கள் ஆசிரியர்கள்.

வாழ்த்தி வணங்கி வாழ்நாள் முழுவதும் அவர்கள் மீது மரியாதையோடு வாழ்தல் நலமன்றோ? இன்று மறைந்து போகின்றது ஆசிரியரை போற்றிப் புகழ்தலெனும் உயரிய பண்பு.

ஒக்ரோபர் – 05 உலக ஆசிரியர் தினம்
1966 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 05 நாளில் யுனோஸ்கோவினால் ஆசிரியர்களின் நிலை தொடர்பான பரிந்துரையில் கையெழுத்திட்டதை நினைவுகூர்ந்து அன்றைய நாள் உலக ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

ஒக்டோபர் – 05 என்பது ஆசிரியர்களை மட்டுமல்லாது கல்வியாளர் அனைவரையும் போற்றி ஏற்றும் இனிய நாளாக கொள்ள வேண்டும் என்பது அந்த பரிந்துரையின் நோக்கமாகும்.

உலக ஆசிரியர் தினமாக ஒக்டோபர் – 05 அமைந்த போதும் ஒவ்வொரு நாடும் விசேட காரணங்களால் வெவ்வேறு மாதங்களில் வெவ்வேறு நாட்களை தங்கள் நாட்டினுள் ஆசிரியர் தினமாக கொண்டாடி வருவதனையும் குறிப்பிடலாம்.

உதாரணமாக இந்தியா செப்டெம்பர் – 05 இல் இந்தியா முழுவதும் ஆசிரியர் தினமாக பிரகடனப்படுத்தியமையை குறிப்பிடலாம். இந்தியாவின் இரண்டாவது குடியரசு தலைவராக இருந்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள்.( முதல் துணைக் குடியரசுத் தலைவராகவும் இவர் இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.) அவர் சிறந்த எழுத்தாளர் மற்றும் ஆசிரியராகவும் இருந்திருக்கின்றார்.

அவரது நண்பர்கள் மாணவர்கள் இணைந்து அவரது பிறந்த நாளை கொண்டாட முனைந்தபோது தான் அதனை ஆசிரியர் தினமாக இந்தியா முழுவதும் கொண்டாடிடக் கேடடார்.

குடியரசுத் தலைவராக இருந்த அவரது வேண்டுகோள் எல்லோராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்பற்றப்படவே அவரது விருப்பம் போல் இன்று வரை செப்டம்பர் – 05 இல் இந்தியாவில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இன்றைய நாளில் ஆசிரியர்கள், கல்வியாளர்கள் கௌரவிக்கப்பட்டு அவர்களது சேவைகள் மெச்சப்படுகின்றமையையும் அவதானிக்கலாம். இந்த முயற்சி மாணவர்கள் மனதில் முன்னுதாரணமாக அமைந்துவிடுகிறது என்பதும் நோக்கத்தக்கது.

இலங்கையில் ஒக்டோபர் -06 ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அமெரிக்க ஐக்கிய நாடு – மே மாதத்தின் முதல் வாரம் தேசிய ஆசிரியர் வாரமாகக் கொண்டாடப்படுகின்றது. அவ்வாரத்தின் செவ்வாய்க் கிழமை ஆசிரியர் நாளாகவும் விசேடமாக்கப்பட்டுள்ளது.

உலக நாடுகளும் அந்த நாடுகளில் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படும் நாட்களும்
அவுஸ்திரேலியா – அக்டோபர் மாதத்தின் கடை வெள்ளி

பெலருஸ் – அக்டோபர் மாதத்தின் முதல் ஞாயிறு

புரூணை – செப்டம்பர் 23

சீன மக்கள் குடியரசு – செப்டம்பர் 10

ஜெர்மனி – அக்டோபர் 5

மலேசியா – மே 16

நியூசிலாந்து – அக்டோபர் 29

சிங்கப்பூர் – செப்டம்பர் மாதத்தின் முதல் வெள்ளி

ஆப்கானித்தான் – அக்டோபர் 3

அல்பேனியா – மார்ச்சு 7

அல்சீரியா – பெப்ரவரி 28

அர்ஜென்டினா – செப்டம்பர் 11

ஆர்மீனியா – அக்டோபர் மாதத்தின் முதல் ஞாயிறு

அசர்பைஜான் – அக்டோபர் 5

பக்ரைன் – பெப்ரவரி 28

பூட்டான் – மே 2

பொலிவியா – சூன் 6

பிரேசில் – அக்டோபர் 15

பல்கேரியா – அக்டோபர் 5

சிலி – அக்டோபர் 16

கொலொம்பியா – மே 15

செக் குடியரசு – மார்ச்சு 28

எக்குவடோர் – ஏப்ரல் 13

எகிப்து – பெப்ரவரி 28

எல் சால்வடோர் – சூன் 22

எசுத்தோனியா – அக்டோபர் 5

குவாத்தமாலா – சூன் 25

கொங்கொங் – செப்டம்பர் 10

அங்கேரி – சூன் மாதத்தின் முதல் ஞாயிறு

இந்தோனேசியா – நவம்பர் 25

ஈரான் – மே 2

ஈராக் – மார்ச்சு 1

யமேக்கா – மே 6

ஜோர்தான் – பெப்ரவரி 28

லித்துவேனியா – அக்டோபர் 5

லெபனான் – மார்ச்சு 9

லிபியா – பெப்ரவரி 28

மெக்சிகோ – மே 15

மொல்டோவா – அக்டோபர் 5

மங்கோலியா – பெப்ரவரி மாதத்தின் முதல் சனி மற்றும் ஞாயிறு

மொரோக்கோ – பெப்ரவரி 28

நேபாளம் நேபாள – மாதம் அஷாதின் வரும் முழு நிலவு தினம்

ஓமான் – பெப்ரவரி 28

பாக்கிஸ்தான் – அக்டோபர் 5

பனாமா – திசம்பர் 1

பராகுவே – ஏப்ரல் 30

பெரு – சூலை 6

பிலிப்பீன்சு – அக்டோபர் 5

போலந்து – அக்டோபர் 14

கத்தார் – அக்டோபர் 5

ருமேனியா – அக்டோபர் 5

ரசியா – அக்டோபர் 5

சவுதி அரேபியா – பெப்ரவரி 28

செர்பியா – அக்டோபர் 5

சிலோவாக்கியா – மார்ச்சு 28

தென் கொரியா – மே 15 (சியோலில் 1963 முதல் மற்றும் சுன்சு நகரில் 1964 முதல்)

இலங்கை – அக்டோபர் 6

எசுப்பானியா – சனவரி 29

சிரியா – மார்ச்சு 18

தாய்வான் – (சீனக் குடியரசு) செப்டம்பர் 28

தாய்லாந்து – சனவரி 16

துனீசியா – பெப்ரவரி 28

துருக்கி நவம்பர் 24

உக்ரைன் – அக்டோபர் மாதத்தின் முதல் ஞாயிறு

ஐக்கிய அரபு அமீரகம் – பெப்ரவரி 28

உசுபெக்கிசுத்தான் – அக்டோபர் 1

வியட்நாம் – நவம்பர் 20

யெமன் – பெப்ரவரி 28

மொரிசியசு – அக்டோபர் 5

ஆசிரியர் என்றால்
தெரியாததை தெரிந்து கொள்ள வைக்கும் செயல் ஆசிரியம்(teach)ஆகும். இதனை மேற்கொள்பவர் ஆசிரியர் (teacher) ஆகின்றார். பாடசாலைகளில் கற்பித்தலை மேற்கொள்பவர் மட்டும் தான் ஆசிரியர் என்ற மனநிலை மேலோங்கியுள்ளதை இங்கே சுட்டிக்காட்ட வேண்டும்.

இது அறிவியல் பார்வையில் தவறான நோக்கலாகும். தெரியாததை தெரிவிப்பது ஒரு புத்தகமாக இருந்தாலும் அதுவும் கூட ஆசிரியராகிப் போகிறது. இயற்கை நிகழ்வுகளும் கூட நிறையவே கற்றுத் தருவதால் அதுவும் கூட ஆசிரியராகப் போகின்றது. “இயற்கை எனது நண்பன்.வாழ்க்கை எனது தத்துவாசிரியன்.வரலாறு எனது வழிகாட்டி.” என தன் அனுபவத்திலிருந்து உரைத்துச் சென்ற விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரது வார்த்தைகள் இங்கே நோக்கத் தக்கது.

ஆச்சரியமான ஆசிரிய சுட்டிக் காட்டலை குறிப்பிட்டால் ஒரு இடத்திற்கு போகும் வழியை சொல்பவர் கூட ஆசிரியர் தான். அந்த நொடியில் அந்த இடத்திற்கான பாதை எமக்குத் தெரியவில்லை. அந்த பாதையை தெரிந்து கொண்டவர் எமக்கு முன் அதனை கற்றுவிட்டார். அதனை இப்போது எமக்கு கற்றுத் தருகின்றார். அவரது ஆசிரியத்துவம் நாம் அவரது வழிகாட்டலின் வழியில் அந்த இடத்தை அடைந்து விட்டால் வெற்றி பெற்று விடுகின்றது.

இது போலவே நமது வாழ்க்கையிலும் இலக்கை நிர்ணயம் செய்து விட்டு துறை சார் ஆசிரியரது வழிகாட்டலில் பயனித்து இலக்கை அடைந்து விட்டால் ஆசிரியர் தம் பணியில் வென்றவராகிவிடுகின்றார். இந்த உண்மை ஆச்சரியமானதே! ஆனாலும் யாதார்த்தத்தில் அதிக தடவைகள் ஆசிரியராக பணியாற்றுவோர் தோற்றுத் தான் போகின்றனர் என்பது கசப்பான உண்மை.

20 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பில் கணித பாடத்தை போதிக்கும் ஆசிரியரின் இலக்கு என்பது இருபது மாணவர்களும் கணிதத்தை புரிந்து கொண்டு அதனை கற்றுத் தங்கள் வாழ்க்கைக்கு பயன்படுத்துமளவுக்கு அவர்கள் தேர்ச்சி அடைவதாகும். அத்தகைய தேறலை பெற்றுவிட்டால் பரீட்சையில் இலகுவாக சிறந்த பெறுபேறுகளை பெற்று விடுவார்கள்.

20 மாணவர்களில் ஒரு சிலர் தோற்றாலும் அந்த ஆசிரியர் அவர்கள் விடயத்தில் தோற்று விடுகின்றார். வெற்றி பெற்று விடும் மாணவரை முன்னிறுத்தி வெற்றியையும் மகிழ்வையும் கொண்டாடும் போது அந்த ஆசிரியரின் திறமைக்கு அந்த வெற்றி பெற்ற மாணவர்களை எடுத்துக்காட்டி ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் ஒன்று சிந்தை தூண்டி சேவையையும் திறமையையும் பாராட்டும் போது தோற்றுப் போன மாணவர்களின் நிலை என்ன? அவர்கள் பக்கம் இருந்து நோக்கினால் அந்த ஆசிரியர் தன் பணியில் தோற்று விட்டார்.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்றால் தோற்ற ஒரு மாணவரினால் ஒரு ஆசிரியரின் திறமையை குறைத்துப் பேசவும் ஒரு வாய்ப்பு எதிர்மறையாக தோற்றம் பெறுவதையும் உற்று நோக்க வேண்டும்.அத்தகையதொரு பார்வையை எந்த ஆசிரியர் புரிந்து கொள்கின்றாரோ புரிதலின்படி செயற்படத் துணிகிறாரோ அவர் வெற்றி பெற்றுவிடுவார். அவர் தன் முயற்சியில் வென்று விடுவது திண்ணம்.

செயலால் வாழ்ந்து கற்பித்தல் வேண்டும்
சிறந்த கற்பித்தல் என்பது செயலால் தேறிப்போதலே ஆகும். சொல்வது ஒன்றும் செய்வது அதற்கு எதிர் மாறாகவும் இருக்கும் போது சிந்திக்கும் ஆற்றலுள்ள எந்தவொரு மாணவரும் அந்த வழி காட்டலுக்குச் செவி சாய்க்கப் போவதில்லை. இலங்கையில் பரவலாக அவதானிக்கப்பட்ட பல நிகழ்வுகளை இதற்காகச் சுட்டிக்காட்ட முடியும்.

சிறந்த சுகாதாரப் பழக்கங்களில் ஒன்று புகைப் பிடித்தலை தவிர்ப்பது எனச் சுட்டிக்காட்டும் ஆசிரியர் தான் புகைப் பிடித்தலை செய்யும் போது மாணவர் இதனை எவ்வாறு நோக்குவார்? சிறந்த பழக்கமற்றவர் எப்படி ஆசிரியராக முடியும் என்று சிந்திக்கத் தலைப்பட்டால் அத்தகைய ஆசிரியரின் வழிகாட்டலை முழுதாக பற்றுறுதியுடன் பின்பற்ற மாணவர்கள் முற்பட்டமாட்டார்கள் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

இலங்கையின் உயர்தரம் மற்றும் இடைநிலை வகுப்புக்களுக்கான ஆசிரியர்களாக தேர்வாகும் ஒருவர் தன்னுடன் சமகாலத்தில் படித்தவர்களிலும் குறைந்த திறனை வெளிப்படுத்தியவர்களாக இருக்கின்றனர்.

உயிரியல் பாடப்பிரிவில் உயர்தரத்தில் அதிகமாக திறமையை காட்டியவர் வைத்தியராகிப் போகின்ற போது அதனிலும் குறைவாக திறமையை வெளிப்படுத்தி பல்கலைக்கழகம் அல்லது கல்வியல் கல்லூரிக்கு தேர்வாகி அங்கு கற்று தேர்ந்தவர்கள் ஆசிரியர்களாக கடமையாற்ற வருகின்றனர்.

அல்லது உயர் தரத்தோடு தங்கள் படிப்பை நிறுத்தி விட்டு தொண்டராசிரியராக கடமையாற்றி நியமனம் பெற்று பின்னர் கல்வியல் கல்லூரிகளில் பயிற்றப்பட்டு ஆசிரியர்களாக இணைக்கப்படுகின்றனர்.

இவர்கள் மாணவர்களிடையே எப்படிப் படிக்க வேண்டும் என்று எப்படி ஆலோசனை வழங்க முடிகின்றது.அந்த ஆலோசனைகளை வைத்து எப்படி மாணவர்கள் அதீத திறமைகளை வளர்த்துக் கொள்வது? இந்தக் கேள்வி தற்போது ஆசிரியர்களிடையே விசனத்தை ஏற்படுத்தினாலும் இது தான் உண்மை.

இந்த நியமன முறை மாற்றப்பட்டு அதீத திறமையானவர்களை பல்துறை பயிற்றுவிப்பு மூலம் ஆசிரியர்களாக மாற்றப்பட வேண்டும். அப்போது ஆரோக்கியமான பல மாற்றங்கள் ஏற்படும் என்பது திண்ணம்.

தங்கள் சம்பளத்தை அதிகரிக்க கேட்டு ஆர்ப்பாட்டம் நிகழ்த்தும் போது பணவீக்கத்தை குறைக்கும் நடவடிக்கைகளை விரைவாக்கி பணவீக்கத்தை குறைக் கேட்டு இதுவரை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை.

ஒரு வேளை அப்படி நடந்து அரசும் அதனை ஏற்று பணவீக்கத்தை விரைவாக குறைத்து விட்டால் சம்பளவுயர்வு தேவையற்றதாகி விடும்.இதனால் ஆசிரியர் மட்டுமல்ல இலங்கையின் எல்லா மக்களுக்கும் அது பயனளிக்கும்.

இப்படி சிந்திக்கத் தலைப்படவில்லை. இப்போதுள்ள ஆசிரியர்கள் இத்தகைய நிலையை புரிந்துகொண்டு செயல்முறையில் சாத்தியமான வழிமுறைகளைக் கண்டறிந்து அவற்றை மாணவர்களுக்கு ஆலோசிக்கும் போது நடைமுறைச் சாத்தியமான வெற்றிக்கான வழிமுறைகளை மாணவர்கள் இலகுவாக கைக்கொண்டு வெற்றி பெற்று விடுவார்கள். அதனால் ஆசிரியர் தங்கள் பணியில் வென்று விடுகின்றனர்.

தன் வாழ்க்கையில் சவால்களை எதிர்கொண்டு வளமாக வாழ்தலே ஒரு மாணவர் தன்னை மதித்து தானக்குத் தரும் மரியாதையாக தான் நினைப்பதாக வன்னியின் பிரபலமான ஆசிரியர் ஒருவர் மாணவரிடையே அடிக்கடி தெரிவிப்பதை இங்கே சுட்டிக்காட்டல் பொருத்தமானதாக அமையும். கல்வியில் வளமானவராகவும் பொருளாதாரத்தில் தோற்றவராகவும் இருக்கும் ஆசிரியரொருவர் எப்படி முன் உதாரணமானவராக இருப்பார்.

படிப்பது பிழைப்புக்கு என்று இருக்கும் போது படித்து பிழைக்கக் கற்றுக்கொடுக்கும் ஒருவர் பிழைக்க துன்பப்படும் போது அவரது போதனை எதற்கு என்று மாணவர் தன்னிடம் கேட்டு விடும் நிலையில் தான் வாழ மாட்டேன் என்று மேலும் அவருடன் உரையாடும் போது எடுத்துரைத்தயையும் நோக்கத்தக்கது.

துரோணர் நல்ல ஆசிரியரா??
மகா பாரதத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்களில் துரோணர்,ஏகலைவன், அர்ச்சுனன், துரோணரின் வளர்ப்பு நாய் என்பன தொடர்புபட்ட குரு – சிசியன் உறவு முறை பேசப்படுகின்றது. சிறந்த குரு – சிசியன் உறவு முறைக்கு இது எடுத்துக் காட்டப்பட்டுள்ளது.

சத்திரியர்களுக்கும் பிராமணர்களுக்குமே போர்ப்பயிற்சியை கற்றுக்கொடுக்கும் வழக்கத்தில் இருக்கும் துரோணனிடம் இந்த இரு பிரிவுகளிலும் அடங்காத ஏகலைவன் போர்ப் பயிற்சியில் நாட்டம் கொண்டு துரோணரிடம் மாணவனாக சேர்ந்து பயிற்சி பெற விரும்புகின்றான்.துரோணரிடம் தன் விருப்பை தெரிவித்து வேண்டுகின்றான்.

துரோணர் மறுத்துவிடவே கவலையடைந்தவன் மன உறுதி தளராது துரோணரின் மீது மதிப்பைக் குறைக்காது அவரது சிலையைச் செய்து அதனை தன் குருவாக பாவனை செய்து வில்பயிற்சி உட்பட்ட போர்ப்பயிற்சியை கற்றுக்கொள்ள முயன்று வென்று விடுகின்றான்.

துரோணரின் சிலை மீது சிறுநீர் கழித்த நாயினை கண்ணுற்ற ஏகலைவன் ஒரு அம்பினால் ஆயிரம் துளைகளை தோற்றுவிக்கும் வித்தையைக் கொண்டு தன் கோபத்தை நாயின் மீது காட்டவே அது காயம்பட்டு துரோணரிடம் ஓடிப்போய் வீழ்ந்து சாகின்றது. துரோணர் ஏகலைவனிடம் வந்து நிலைமையை அறிந்து கொள்கின்றார். தன்னை குருவாக ஏற்று வில்வித்தையில் சிறந்த தேர்ச்சி பெற்றதையும் உணர்கின்றார்.

உலகில் சிறந்த வில்வீரனாக அர்ச்சுனனை தான் உருவாக்குவேன் என்ற வாக்கினை அர்ச்சுனனுக்கு கொடுத்திருந்த துரோணர் அர்ச்சுனனுக்கு நிகராக ஏகலைவன் தோற்றம் பெறுவதை விரும்பவில்லை. வில்வித்தைக்கு அதிக பயனுடையதாக இருக்கும் பெருவிரலை குருதட்சனையாக ஏகலைவனிடம் கேட்கிறார். அவனும் தயக்கமின்றி விரலை வெட்டிக் கொடுக்கின்றான். குருவின் மீது ஏகலைவன் கொண்ட பெரு மதிப்பை இங்கே சுட்டிக்காட்ட முயல்கின்றனர்.

இந்த கதை வழியில் ஏகலைவன் சிறந்த மாணவனாகவும் துரோணர் நல்ல ஆசிரியராகவும் சித்தரிக்கப்படுகின்றதனை அவதானிக்க முடிகின்றது. சிறந்த ஆசிரியராக துரோணரை எப்படி நோக்க முடியும்? போர்ப்பயிற்சியை விரும்பி கற்றுக்கொள்ள முயன்ற ஏகலைவனின் விருப்பை மதிக்காத ஆசிரியர். கற்றலில் ஏற்றத்தாழ்வு கருதியவர்.

கல்வி எல்லோருக்கும் சமமாக வேண்டும் என கருதாதவர். தானாக முயன்று கற்று தேறிய ஏகலைவனை சிறந்த மாணவனாகவும் மனதால் குருவோடு பேசிய வித்தையை கண்டு மகிழ்ந்து போற்றவும் விரும்பாது அவனது பெருவிரலை குருதட்சனையாக பெற்று அவனது திறமையை குறைத்துக்கொள்ள நினைத்துள்ளார்.

தன்னை குருவாக ஏற்று தானாகவே முயன்று கற்று தேறிய மாணவரை வெற்றிபெற வாழ்த்த விரும்பாது தோற்றுப்போக எண்ணிய வரை எப்படி சிறந்த ஆசிரியராக பாவனைசெய்ய முடியும்? எந்த குருவும் சவாலை எதிர்கொண்டு வெல்லவே தன் மாணவனுக்கு கற்றுக்கொடுப்பார். ஆசிரியரின் வழிகாட்டலை ஏற்று கற்றுத் தேறிய போது அந்த ஆசிரியரே தன் மாணவனை தோற்றுப் போகச் செய்ய முயலும் போது அவரை எதிரியாக கருதி தான் கற்ற கல்வி வழியில் எதிர் நின்று வெல்ல வேண்டும்.

இது மகாபாரதத்தில் தோன்றிய பகவத்கீதையினால் அர்சுனனுக்கு உபதேசிக்கப்பட்டுள்ளது. குருவோ அல்லது உறவினரோ தர்மத்திற்கு எதிரான போது அவர்களை குருசேத்திரத்தில் எதிராயகவே கருதி அவர்களோடு போர் செய்து தர்மத்தை நிலைநாட்டுமாறு சொல்லப்பட்டுள்ளது.

இங்கே தர்மம் என்பது நலம் வாழவைக்கும் செய்முறைகள்.இதனால் துரோணர் ஏகலைவனின் வில்வித்தை திறனை குறைக்க முயற்சிக்கும் போது ஏகலைவன் தன் குருவை எதிரியாக கருதி துரேணரின் தலையைச் சீவி தன் குருவின் (துரோணரின் சிலை) காணிக்கையாக்கி சவாலை எதிர்கொள்ளல் என்ற உயரிய கற்றல் பண்பை வெளிக்காட்டியிருக்க வேண்டும்.

ஒரு நல்ல குரு தன் மாணவரைத் தோற்றுப்போகும் நிலைக்கு தள்ளிவிட நினைக்கவும் மாட்டார். அதற்கான செயல்களில் ஈடுபடவும் மாட்டார். அது போலவே சிறந்த மாணவர் தம் வாழ்வின் சவால்களை எதிர்கொண்டு தம் சார்ந்தோரிடம் நலன்களை பேணி மற்றவருக்கு இடையூறின்றி வாழ்தலே குருவுக்கான மிகப்பெரிய மரியாதை என வாழ்தலே சரியாகும்.

ஆசிரியர் மற்றும் மாணவர் உறவு முறையில் முன்னோடி ஆசிரியர் தான் என்பதால் ஆசிரியர்கள் முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டுதலே நல்ல கற்பித்தல் ஆகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.