;
Athirady Tamil News

ஜப்பானில் அரசியல் பிரச்சாரத்தை கைப்பற்றிய AI தொழில்நுட்பம்

0

ஜப்பான் நாடாளுமன்றத்திற்கு இம்மாதம் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள அரசியல் கட்சிகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வெளியிடும் போலி காணொளிகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

இது வாக்காளர்கள் மத்தியில் கடும் குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாகத் தேர்தல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜப்பானில் வரும் பெப்ரவரி 8 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.

மொத்தம் உள்ள 465 இடங்களில், ஆட்சியைப் பிடிக்க 233 இடங்களைக் கைப்பற்ற வேண்டும். ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள சூழலில், இந்தப் புதிய ‘டிஜிட்டல் போர்’ கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது ஜப்பானிய வாக்காளர்களைக் குறிவைத்து சமூக வலைதளங்களில் செயற்கை நுண்ணறிவு காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன. தாய்வான் விவகாரம் தொடர்பாக பிரதமர் சானே தக்காயிச்சி ஆற்றிய உரையை அடிப்படையாகக் கொண்டு, அவருக்கு ஆதரவாக ஒரு முதியவர் பேசுவது போன்ற 15 வினாடி AI காணொளி வைரலாகி வருகிறது.

30 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்த இந்த காணொளி, உண்மையில் ஒரு AI தயாரிப்பு என்பது பலருக்குத் தெரியவில்லை. செய்தி நிறுவனங்களின் விவாதங்கள் மற்றும் தெருக்களில் பொதுமக்கள் பங்கேற்கும் கருத்துக்கணிப்புகள் போன்ற தோற்றத்தில் AI காணொளிகள் உருவாக்கப்படுகின்றன.

இவை 5 முதல் 10 லட்சம் பார்வைகளைப் பெற்று வைரலாகின்றன. இந்த காணொளிகளின் தலைப்பிலோ அல்லது அலைவரிசை பெயரிலோ ‘AI’ என்ற குறிப்பு எங்கும் இடம்பெறுவதில்லை. விளக்கப் பக்கத்தில் மிகச்சிறிய அளவில் மட்டுமே குறிப்பிடப்படுவதால், பெரும்பாலான வாக்காளர்கள் இவற்றை உண்மை என்றே நம்பி ஏமாறுகின்றனர்.

ஜப்பானின் ரிட்சுமேய்கன் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் சுகாசா தனிஹாரா இது குறித்துக் கூறுகையில், இத்தகைய காணொளிகள் ஒரு குறிப்பிட்ட கருத்துக்கு மக்களிடையே பெரும் ஆதரவு இருப்பது போன்ற மாயத்தோற்றத்தை உருவாக்குகின்றன.

பின்னணியில் வரைபடங்கள் மற்றும் தரவுகளைச் சேர்த்து இவை தயாரிக்கப்படுவதால், மக்கள் எளிதில் நம்பி விடுகின்றனர்.

இது ஒரு மோசடிச் செயல், என வேதனை தெரிவித்துள்ளார். இந்த காணொளிகளைப் பதிவேற்றும் 45 வயது தொழிலதிபர் ஒருவர் கூறுகையில், யாரையும் ஏமாற்றும் நோக்கம் எனக்கு இல்லை, அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது நோக்கம் என்று நியாயப்படுத்தியுள்ளார்.

இருப்பினும், எக்ஸ் போன்ற தளங்களில் பகிரப்படும் போது ஏஐ என்ற குறிப்பு நீக்கப்படுவதால், இது திட்டமிட்ட போலி பிரசாரமாகவே பார்க்கப்படுகிறது.

ஏஐ தொழில்நுட்பத்தின் ஆபத்துக்களைக் கருத்தில் கொண்டு, ஜப்பான் அரசு ஏற்கனவே 2025 மே மாதம் ஒரு புதிய சட்டத்தை இயற்றியது. இதன்படி, AI மூலம் தவறான தகவல்களைப் பரப்பும் நிறுவனங்களின் பெயர்களை அரசு பகிரங்கப்படுத்தும். இருந்தபோதும், தேர்தல் நேரத்தில் இத்தகைய காணொளிகள் கட்டுக்கடங்காமல் பரவுவது பெரும் சவாலாகவே உள்ளது.

ஜப்பான் வாக்காளர்கள் எவை உண்மையான பிரசார காணொளிகள் என்று தெரியாமல் குழப்பத்தில் உள்ள நிலையில், தேர்தல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.