;
Athirady Tamil News

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் – அதன் மட்டுப்பாடுகளும் தாக்கமும்

0

வெகுசன ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி ஆகியோர் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் திகதி அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பித்து, “இணைய பொய்ப் பிரச்சாரத்தால் சமூகத்தை ஏற்படுத்தக்கூடிய தீங்குகளிலிருந்து பாதுகாக்கும் வரைவு சட்டமூலத்தை முன்வைப்பதற்கு அமைச்சரவையிடம் அனுமதி கோரினர்.

இது ஏப்ரல் 19, 2021 அன்று அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. அதன்பிறகு, பெப்ரவரி 21, 2022 அன்று, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வரைவு சட்டமூலம் தொடர்பில் மேலும் செயற்படும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

அந்தவகையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான டிரான் அலஸ், “இணையத்தில் பொய் பிரச்சாரத்தினால் ஏற்படும் தீங்கிலிருந்து சமூகத்தைப் பாதுகாப்பதற்காக” சட்ட வரைஞர்கள் தயாரித்த வரைவுச் சட்டமூலத்துடன் 23/1025/626/011 இலக்கம் கொண்ட அமைச்சரவைப் பத்திரத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்ததுடன், அதற்கான அனுமதியையும் கோரினார்.

மே 30, 2023 அன்று அமைச்சரவை அதனது கொள்கை ரீதியான அனுமதியை வழங்கியது. இலத்திரனியல் ஒலிபரப்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு சட்டமூலம் பாராளுமன்றத்தில் பரிசீலனைக்காக தாக்கல் செய்யப்பட்ட பிறகு, நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கலாம் என்று அமைச்சரவை முடிவு செய்தது.

ஆகஸ்ட் 8, 2023 அன்று அமைச்சரவை கூட்டப்பட்டபோது, நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரன் அல்லஸ், நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தை 01/10 (O.S.B /2022 (குறிப்பு இல. 34/2023) இலக்கம் கொண்ட ஆகஸ்ட் 29, 2023 திகதியிடப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தின் கீழ் மேற்படி சட்டமூலத்திற்கான அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறுவதற்காகவும், அது வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்காகவும் சமர்ப்பித்தார்.

செப்ரெம்பர் 4, 2023 அன்று அமைச்சரவை அந்த பத்திரத்திற்கு அனுமதி அளித்ததுடன், நிகழ்நிலை காப்பு சட்டமூலம் செப்ரெம்பர் 18, 2023 அன்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் வழிகாட்டுதலின்படி அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. அதன் பின்னர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான டிரன் அலஸ், 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 23 ஆம் திகதி முதலாவது வாசிப்புக்காக குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

பொதுமக்களின் எதிர்ப்புக்கள்

இந்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டபோது, பல தரப்பினரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். இதில் சிவில் சமூக அமைப்புகள், தொழிற்சங்கங்கள், தகவல் தொழில்நுட்பத் துறையில் உள்ள வல்லுநர்கள், தொழில்முனைவோர் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் ஏனைய சட்டத்தரணிகளின் அமைப்புகளும் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மேலும், 13 இணைய சேவை வழங்குநர்களைக் கொண்ட ஆசிய இணையக் கூட்டமைப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருக்கு கடிதம் மூலமாக தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.

உயர் நீதிமன்றத் தீர்மானம்

அரசியலமைப்பின் 121 வது உறுப்புரையில் வழங்கப்பட்டுள்ளபடி, நாட்டின் குடிமக்கள் ஒரு சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மையைக் கேள்விக்குட்படுத்துவதற்கு, உச்ச நீதிமன்றத்திற்கு ஒரு மனு மூலமாக, அத்தகைய சட்டமூலம் பாராளுமன்றத்தின் உத்தரவு தாளில் சேர்க்கப்பட்ட நாளிலிருந்து 14 நாட்களுக்குள் உரிமை உண்டு. அதன்படி, இந்த சட்டமூலத்தை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் 47 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை ஆதரிக்கும் ஆரம்பத்தின் போது, சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான பிரதி சட்டமா அதிபர், நீண்ட ஆவணத்தை நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்ததுடன், சட்டமூலத்தின் குழுநிலையில் திருத்தங்களைச் செய்வதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். அந்த ஆவணத்தின்படி, சட்டமூலத்தின் 30 பிரிவுகளில் திருத்தம் செய்வதற்கு அரசாங்கம் தயாராக உள்ளது என்பது தெளிவாகிறது. (வரைவு சட்டமூலம் 52 பிரிவுகளைக் கொண்டது).

இந்த மனுக்கள் அக்டோபர் 18 மற்றும் 19, 2023 இல் ஆதரிக்கப்பட்டதுடன், 2023 நவம்பர் 07 அன்று பாராளுமன்றத்தின் சபாநாயகர் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

குறித்த தீர்ப்பின் பிரகாரம், வரைவு சட்டமூலத்தின் பிரிவுகள் 3, 5, 7, 9, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 36, 37, 42, 45, 53 மற்றும் 56 ஆகியவை அப்படியே நிறைவேற்றப்பட வேண்டுமெனில், அரசியலமைப்பின் 84 (2) வது உறுப்பிரையின் ஏற்பாடுகள் பிரயோகமாவதுடன், சபையில் இல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 2/3 விசேட பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட வேண்டும்.

எவ்வாறாயினும், உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களுக்கு ஏற்ப மேற்கூறிய பிரிவுகள் குழுநிலையில் திருத்தப்பட்டால், இந்த சட்டமூலத்தை தனிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும். சட்டமூலத்தின் எஞ்சிய ஏற்பாடுகள் அரசியலமைப்புக்கு முரணானவை அல்ல என்றும் தீர்ப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம், வரைவு சட்டமூலத்தை தனிப்பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டுமானால், 32 பிரிவுகளுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரைத்த திருத்தங்கள் குழுநிலையில் இணைக்கப்பட வேண்டும்.

வரைவு சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ளல்

வரைவு சட்டமூலத்தின் மீதான விவாதம் ஜனவரி 23 மற்றும் 24, 2024 ஆகிய திகதிகளில் நடைபெற்றது. விவாதம் ஆரம்பிப்பதற்கு முன்னராக, எதிர்க்கட்சிகள் இந்த சட்டமூலம் பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளைகளின்படி சம்பந்தப்பட்ட துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளது, இன்னமும் முறையான அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என ஆட்சேபனையை முன்வைத்தன.

எனவே, இந்த சட்டமூலத்தின் மீதான விவாதம் ஆரம்பிப்பதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. சட்டமா அதிபர் துறைசார்ந்த அமைச்சரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு பரிந்துரைத்த திருத்தங்களை இணைத்துக்கொள்ள மறுத்தமையால் இந்த சட்டமூலத்தின் மீதான விவாதத்தை நடாத்த வேண்டாம் எனவும் அவர்கள் மேலும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதன்பின், சட்டமூலம் விவாதத்திற்கு எடுக்கப்பட வேண்டுமா, வேண்டாமா என்ற வாக்கெடுப்பு நடாத்தப்பட்டதுடன், விவாதம் நடாத்துவதற்கு ஆதரவாக 83 வாக்குகள் அளிக்கப்பட்டதுடன், எதிராக 50 வாக்குகள் அளிக்கப்பட்டன. இதையடுத்து விவாதம் ஆரம்பமானது. இந்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பின் முடிவில் மற்றுமொரு வாக்கெடுப்பு நடாத்தப்பட்டது, இதில் சட்டமூலத்திற்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

குழுநிலையின் போது அரசாங்கம் திருத்தங்களை உள்ளடக்கிய போது, அத்தகைய திருத்தங்கள் உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்திற்கு ஒத்துப்போகவில்லை என்று எதிர்க்கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்தன. எவ்வாறாயினும், மூன்றாம் வாசிப்பின் முடிவில் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் வாக்களிப்பைக் கோரினாலும், வாக்கெடுப்பு கோருவதற்கான ஒதுக்கப்பட்ட நேரம் முடிவடைந்துள்ளதாகவும், எனவே இது வரைவைச் சட்டமாக்குவதைக் குறிப்பதாகக் கருதுவதாகவும் சபாநாயகர் தெரிவித்தார். இதனால் மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

சட்டத்தின் நோக்கங்கள்

சட்டத்தின் பிரிவு 3, சட்டத்தின் நோக்கங்களை பின்வருமாறு குறிப்பிடுகிறது:

தடைசெய்யப்பட்ட கூற்றுகளை நிகழ்நிலையில் தொடர்பாடல் செய்வதால் ஏற்படும் தீங்குகளுக்கு எதிராக நபர்களைப் பாதுகாத்தல்;

நீதிமன்ற அவமதிப்பு அல்லது நீதித்துறையின் அதிகாரம் மற்றும் பக்கச்சார்பற்ற தன்மையைப் பேணுவதற்காக பாரபட்சமான அறிக்கைகளின் தொடர்பாடலிருந்து பாதுகாப்பை உறுதி செய்தல்;

இந்தச் சட்டத்தின் கீழ் குற்றங்களைச் செய்வதற்கு நிகழ்நிலை கணக்குகள் மற்றும் botகளை தவறாகப் பயன்படுத்துவதைக் கண்டறிதல், தடுத்தல் மற்றும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துதல்; மற்றும் இலங்கையில் தடை செய்யப்பட்ட அறிக்கைகளை நிகழ்நிலை கணக்கு மூலமாகவோ அல்லது நிகழ்நிலை இருப்பிடம் மூலமாகவோ திரும்பத் திரும்பத் தெரிவிக்கும் நிகழ்நிலை தளங்களின் நிதியளிப்பு, மேம்படுத்துகை மற்றும் பிற ஆதரவைத் தடுத்தல்.

இச்சட்டத்தின் கீழான குற்றங்கள்

சட்டத்தின் கீழ் பல வகையான குற்றங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தடைசெய்யப்பட்ட அறிக்கைகளை நிகழ்நிலையில் தொடர்பாடல் செய்தல்.

நிகழ்நிலை அறிக்கை மூலமாக சிறுவர் துஷ்பிரயோகம் செய்தல்.

ஒரு குற்றத்தைச் செய்வதற்கு botகளை உருவாக்குதல்.

பிரகடனப்படுத்தப்பட்ட நிகழ்நிலை தளங்கள் தொடர்பான குற்றங்கள்.

தடை செய்யப்பட்ட அறிக்கைகள்

இந்த சட்டமூலம் நிகழ்நிலையில் வெளியிடுவதற்கு தடைசெய்யப்பட்ட அறிக்கைகளை அடையாளம் கண்டுள்ளதுடன், அத்தகைய அறிக்கைகளை வெளியிடுவதனை குற்றவியல் தவறாக அடையாளம் கண்டுள்ளது. இந்த குற்றங்கள் சட்டத்தின் பிரிவு 12 முதல் 20 வரை உள்ளடக்கப்பட்டுள்ளன.

தேசிய பாதுகாப்பு, பொது சுகாதாரம் அல்லது பொது ஒழுங்கிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துதல் அல்லது தவறான அறிக்கையைத் தொடர்பாடல் செய்வதன் மூலம் பல்வேறு வகுப்பு மக்களிடையே தவறான விருப்பம் மற்றும் விரோத உணர்வுகளை ஊக்குவித்தல். இந்த குற்றத்திற்காக ஒரு நபர் ஐந்து ஆண்டுகளை விஞ்சாமல் சிறைத்தண்டனை அல்லது ஐந்து இலட்சம் ரூபாயை மீறாத அபராதம் அல்லது இரண்டுக்கும் பொறுப்பாக்கப்படுவார். (பிரிவு 12).

எந்தவொரு தொடர்புடைய எழுதப்பட்ட சட்டத்தின் கீழ் நீதிமன்ற அவமதிப்புக்கு சமமான தவறான அறிக்கையின் தொடர்பாடல். குறிப்பிடப்பட்ட தொடர்புடைய எழுதப்பட்ட சட்டங்களின் ஏற்பாடுகள், அத்தகைய நபருக்கு தண்டனை வழங்குவதில் பிரயோகமாகும். (பிரிவு 13).

எந்தவொரு நபரும், நிகழ்நிலையில் தவறான அறிக்கையைத் தெரிவிப்பதன் மூலமாக, கலவர குற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு நபருக்கும் தூண்டுதலை வழங்கினால், (அ) கலவரம் நடைபெற்ற போது 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 500,000/-; அல்லது (ஆ) கலவரம் செய்யப்படாத போது 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ரூ. 300,000/- (பிரிவு 14).

நிகழ்நிலையில் தவறான அறிக்கையைத் தொடர்பாடல் செய்வதன் மூலமாக மத விழாவின் எந்தவொரு கூட்டத்திற்கும் இடையூறு ஏற்படுத்துதல். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அத்தகைய நபர் மூன்று ஆண்டுகளுக்கு விஞ்சாத சிறைத்தண்டனைக்கு அல்லது மூன்று லட்சம் ரூபாய்க்கு மிகையாகாத அபராதம் அல்லது இரண்டும் (பிரிவு 15) விதிக்கப்படுவார்.

மத உணர்வுகளை சீர்குலைக்கும் வேண்டுமென்றேயான மற்றும் தீங்கிழைக்கும் நோக்கத்துடன், நிகழ்நிலையில் தவறான அறிக்கையைத் தொடர்பாடல் செய்தல். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அத்தகைய நபர் ஒருவருக்கு மூன்று ஆண்டுகளுக்கு விஞ்சாத சிறைத்தண்டனை அல்லது மூன்று லட்சம் ரூபாய்க்கு மிகையாகாத அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படுவார். (பிரிவு 16).

நிகழ்நிலை கணக்கு மூலமாகவோ அல்லது நிகழ்நிலை தளத்தின் மூலமாகவோ யாரேனும் ஒருவருக்கு தவறான அறிக்கையைத் தெரிவிப்பதன் மூலம் நிகழ்நிலையில் ஏமாற்றுதல் குற்றத்தைச் செய்தல். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அத்தகைய நபர் ஏழு ஆண்டுகளுக்கு விஞ்சாத சிறைத்தண்டனை விதிக்கப்படுவார், அல்லது ஏழு லட்சம் ரூபாய்க்கு மிகையாகாத அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படுவார். (பிரிவு 17).

நிகழ்நிலை கணக்கு மூலமாக தனிப்பட்ட முறையில் நிகழ்நிலையில் ஏமாற்றுகின்ற குற்றத்தைச் செய்தல். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அத்தகைய நபர் மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படக்கூடிய சிறைத்தண்டனை அல்லது மூன்று இலட்சம் ரூபாய்க்கு மிகையாகாத அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படுவார் (பிரிவு 18).

கலகம் அல்லது அரசுக்கு எதிரான குற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நிகழ்நிலை தவறான அறிக்கையை பரப்புதல். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அத்தகைய நபர் ஏழு ஆண்டுகளுக்கு விஞ்சாத சிறைத்தண்டனை விதிக்கப்படுவார், அல்லது ஏழு இலட்சம் ரூபாய்க்கு மிகையாகாத அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படுவார் (பிரிவு 19).

துன்புறுத்தலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அறிக்கைகளைத் தொடர்பாடல் செய்தல். குற்றம் நிரூபிக்கப்பட்டால், அத்தகைய நபர் ஐந்தாண்டுகளுக்கு விஞ்சாத சிறைத்தண்டனை விதிக்கப்படுவார் அல்லது ஐந்து இலட்சம் ரூபாய்க்கு மிகையாகாத அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படுவார் (பிரிவு 20).

நிகழ்நிலையில் சிறுவர் துஷ்பிரயோகம் செய்தல்

எந்தவொரு நபரும், நிகழ்நிலை கணக்கு மூலமாகவோ அல்லது நிகழ்நிலை தளத்தின் மூலமாகவோ, சிறுவர் துஸ்பிரயோகத்தை மேற்கொள்ளல், அதாவது, தண்டனைச் சட்டக் கோவையின் 286A, 288, 288A, 288B, 308A, 360A, 360B, 360C, 363, 364A, 365 ஆகிய பிரிவுகளின் பொருட்களுக்குள்ளாக அமையும் குற்றமாகும், மற்றும் ஒரு சிறுவர் தொடர்பான துஸ்பிரயோக அல்லது ஆபாச தன்மையிலான ஏதேனும் ஒரு புகைப்படம், ஒலிப்பதிவு அல்லது காணொளியை வெளியிடுதல். (பிரிவு 21)

ஒரு குற்றத்தைச் செய்வதற்காக bot களைஉருவாக்குதல் அல்லது மாற்றுதல்

இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றமாக கருதப்படும் ஒரு அறிக்கையை, bot மூலமாக, தொடர்பாடல் செய்ய அல்லது வேறு எந்த நபரையும் தொடர்பாடல் செய்ய உதவும் நோக்கத்துடன் ஒரு bot இனை உருவாக்குதல் அல்லது மாற்றியமைத்தல். (பிரிவு 22)

இந்த குற்றங்களுக்கு எதிராக பதிவு செய்யப்படும் வழக்குகளை விசாரிக்க நீதவான் நீதிமன்றங்களுக்கு அதிகாரம் உள்ளது.

தடை செய்யப்பட்ட அறிக்கைகள் தொடர்பாக ஆணைக்குழுவால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் (பிரிவு 23)

தடைசெய்யப்பட்ட அறிக்கையின் தொடர்பாடலால் பாதிக்கப்பட்ட ஒருவர், அத்தகைய தகவல்தொடர்பாடல் பற்றிய தகவல்களை ஆணைக்குழுவிற்கு அளித்து முறைப்பாடு செய்யலாம். ஆணைக்குழுவானது அதன் அலுவலர்கள் மூலமாக விசாரணைகளை மேற்கொள்வதுடன், தடை செய்யப்பட்ட அறிக்கை தொடர்பாடல் செய்யப்பட்டதாகக் காட்ட போதுமான தகவல்கள் இருப்பதாகத் திருப்தி அடைந்தவுடன், அத்தகைய தடை செய்யப்பட்ட அறிக்கையை அனுப்பிய நபருக்கு அத்தகைய தடை செய்யப்பட்ட அறிக்கையின் பரம்பலைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவித்தல் அனுப்பலாம்.

அத்தகைய அறிவிப்பு வழங்கப்பட்ட நபர் 24 மணி நேரத்திற்குள் அத்தகைய அறிவிப்புக்கு இணங்க வேண்டும். எந்தவொரு நபரும் அத்தகைய அறிவிப்பிற்கு இணங்கத் தவறினால், அத்தகைய தடை செய்யப்பட்ட அறிக்கை யாருடைய நிகழ்நிலை தளத்தில் தெரிவிக்கப்பட்டதோ அந்த இணைய சேவை வழங்குநர் அல்லது இணைய இடைத்தரகருக்கு ஆணைக்குழு பின்வருமாறு ஒரு அறிவிப்பை வெளியிடும் –

· அத்தகைய தடை செய்யப்பட்ட அறிக்கையை இலங்கையில் உள்ள இறுதிப் பயனர்கள் அணுகுவதை முடக்குவதற்கு; அல்லது

· இதுபோன்ற தடைசெய்யப்பட்ட அறிக்கையை அத்தகைய நிகழ்நிலை தளத்திலிருந்து அகற்றுவதற்கு.

ஒரு நபர் அல்லது இணையச் சேவை வழங்குநர் அல்லது இணைய இடைத்தரகர், மேற்கூறிய ஏற்பாடுகளின் படி செயற்படத் தவறினால், ஆணைக்குழுவானது அத்தகைய இணைய சேவை வழங்குநர் அல்லது இணைய இடைத்தரகரை அத்தகைய ஏற்பாடுகளுக்கு இணங்குவதற்கான உத்தரவை பெறுவதற்காக மனு மற்றும் சத்தியப் பிரமாணப் பத்திரம் மூலமாக நீதவான் நீதிமன்றத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

தடை செய்யப்பட்ட அறிக்கைகள் புழக்கத்தில் விடப்படுவதைத் தடை செய்வதற்கான நீதிமன்ற உத்தரவுக்கு விண்ணப்பித்தல் (பிரிவு 24)

தடைசெய்யப்பட்ட அறிக்கையின் தகவல்தொடர்பாடல்களால் பாதிக்கப்பட்ட எந்தவொரு நபரும், அத்தகைய தகவல் பரவுவதைத் தடுப்பதற்கான உத்தரவைப் பெறுவதற்காக, மனு மற்றும் சத்தியப் பிரமாணப் பத்திரம் மூலம் நீதவான் நீதிமன்றத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

அத்தகைய விண்ணப்பத்தை பரிசீலித்தவுடன், நீதவான் அத்தகைய நபர் அல்லது இணைய சேவை வழங்குநர் அல்லது இணைய இடைத்தரகர் ஆகியோருக்கு ஒரு நிபந்தனை உத்தரவை பிறப்பிக்கலாம்.

பிரகடனப்படுத்தப்பட்ட நிகழ்நிலை தளங்கள்

ஆணைக்குழுவானது குறித்த நிகழ்நிலை தளத்தில் இலங்கையில் உள்ள இறுதிப் பயனர்களுக்கு மூன்று வெவ்வேறு தடைசெய்யப்பட்ட அறிக்கைகள் தெரிவிக்கப்பட்டதுடன், அது தொடர்பான நிபந்தனை உத்தரவுகள் பிரிவு 24ன் கீழ் நீதவானால் முழுமையாக மேற்கொள்ளப்பட்டிருந்தால், மற்றும் இந்த பிரிவின் கீழ் பிரகடனம் செய்யப்படுவதற்கு ஆறு மாதங்களுக்குள் இலங்கையில் உள்ள இறுதிப் பயனர்களுக்கு இதுபோன்ற மூன்று அறிக்கைகள் முதலில் தொடர்பாடல் செய்யப்பட்டிருந்தால் ஓர் வர்த்தமானி அறிவிப்பின் மூலம் நிகழ்நிலை தளத்தை “பிரகடனப்படுத்தப்பட்ட நிகழ்நிலை தளமாக” அறிவிக்கலாம். (நிகழ்நிலை தளம் என்பது ஏதேனும் இணையதளம், வலைப்பக்கம், அரட்டை அறை அல்லது மன்றம், அல்லது கணினியில் ஒருங்கிணைக்கப்பட்ட மற்றும் இணையம் மூலம் பார்க்க, கேட்க அல்லது வேறுவிதமாக உணரக்கூடிய வேறு ஏதேனும் விடயமாகும்).

பிரகடனப்படுத்தப்பட்ட நிகழ்நிலை தளத்தின் உரிமையாளர் அல்லது செயற்பாட்டாளர் அறிவிப்புக்கு இணங்கத் தவறினால், ஆணைக்குழு அல்லது ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு நபரும், இலங்கையில் உள்ள இறுதிப் பயனர்கள் அத்தகைய பிரகடனப்படுத்தப்பட்ட நிகழ்நிலை தளத்தை அணுகுவதை அல்லது அவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்ட நிகழ்நிலை தளத்தை அணுகும் இலங்கையில் உள்ள அனைத்து இறுதிப் பயனர்களுக்கும் தொடர்பாடல் செய்வதை முடக்க, நிகழ்நிலை தளம் பிரகடனப்படுத்தலுக்கு உட்பட்டது என்று குறிப்பிடும் அறிவிப்புக்காக நீதவானிடம் விண்ணப்பிக்கலாம். எவ்வாறாயினும், அத்தகைய நபர்களுக்கு ஏன் நிபந்தனைக்குட்பட்ட உத்தரவை முழுமையானதாக மாற்றக்கூடாது என்பதற்கான காரணத்தைக் காட்ட உரிமை உள்ளதுடன், வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளின் அடிப்படையில் நீதிமன்றம் அத்தகைய உத்தரவை முழுமையான அல்லது வேறுவிதமாக மாற்றுவதற்கு தொடரலாம்.

பிரகடனப்படுத்தப்பட்ட நிகழ்நிலை தளத்தின் உரிமையாளர் அல்லது செயற்பாட்டாளர் அத்தகைய உத்தரவுக்கு இணங்கத் தவறினால், பிரகடனப்படுத்தப்பட்ட நிகழ்நிலை தளத்தின் உரிமையாளர் அல்லது செயற்பாட்டாளர் ஒரு குற்றத்தை மேற்கொள்வதுடன், குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆறு ஆண்டுகளுக்கு விஞ்சாத சிறைத்தண்டனை அல்லது பத்து மில்லியன் ரூபாக்களுக்கு மிகையாகாத அபராதம் விதிக்கப்படும். (பிரிவு 28)

ஒரு இணைய சேவை வழங்குநர் மற்றும்/அல்லது இணைய இடைத்தரகர், இலங்கையில் எந்தவொரு கட்டணம் செலுத்தப்பட்ட உள்ளடக்கமும் பிரகடனப்படுத்தப்பட்ட நிகழ்நிலை தளத்தை பற்றி தெரிவிக்கவில்லை அல்லது அவ்வாறு பிரகடனப்படுத்தப்பட்ட நிகழ்நிலை தளம் விளம்பரப்படுத்தப்படுவதில்லை என்பதை உறுதிப்படுத்த நியாயமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அத்தகைய நிகழ்நிலை தளத்திலிருந்து பணம் பெறுவதும் தடைசெய்யப்பட்டுள்ளது. மேற்கூறிய ஏற்பாடுகளுக்கு இணங்கத் தவறும் நபர் ஒரு குற்றத்தை மேற்கொள்வதுடன், தகுதிவாய்ந்த நீதவான் நீதிமன்றத்தால் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகளுக்கு விஞ்சாத சிறைத்தண்டனை அல்லது பத்து மில்லியன் ரூபாய்க்கு மிகையாகாத அபராதம் விதிக்கப்படுவார். (பிரிவு 29)

பிரகடனப்படுத்தப்பட்ட நிகழ்நிலை தளத்தை செயற்படுத்துவதற்கான தூண்டுதலாக அல்லது வெகுமதியாக எந்தவொரு நிதி அல்லது பிற பொருள் பலனையும் கோருவது, பெறுவது அல்லது பெற ஒப்புக்கொள்வது குற்றமாகும். (பிரிவு 30)

பிரகடனப்படுத்தப்பட்ட தளத்தில் இலங்கையில் உள்ள இறுதிப் பயனர்களுக்கு தடைசெய்யப்பட்ட அறிக்கைகளின் தொடர்பாடலுக்கு உதவுவதற்கு அல்லது ஊக்குவிப்பதற்காக எந்தவொரு சொத்தை செலவழிப்பது அல்லது பயன்படுத்துவது ஒரு குற்றமாகும். (பிரிவு 31)

போலி நிகழ்நிலை கணக்குகள் மற்றும் ஒருங்கிணைந்த போலி நடத்தைகளை ஒழித்தல்

போலியான நிகழ்நிலை கணக்குகளைத் தடுக்கவும், போலி நடத்தையை ஒருங்கிணைக்கவும் இணைய இடைத்தரகருக்கு அறிவிப்பதற்கு ஆணைக்குழுவிற்கு அதிகாரம் உள்ளது. மேலும், சட்டத்தின் பிரிவு 18, இதுபோன்ற போலி நிகழ்நிலை கணக்குகளை பேணுவது சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாகும் என்று குறிப்பிடுகிறது.

சமூக ஊடக தளங்களின் பதிவு

இலங்கையில் இறுதிப் பயனர்களுக்கு சமூக ஊடக தளங்களை வழங்கும் இணையத்தளங்கள் இந்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட விதிகளால் குறிப்பிடப்படும் விதத்தில் ஆணைக்குழுவினால் பதிவு செய்யப்பட வேண்டும் என்று சட்டத்தின் 11(j) பிரிவு குறிப்பிடுகிறது.

நிகழ்நிலை பாதுகாப்பு ஆணைக்குழு

இந்த ஆணைக்குழுவில் 5 உறுப்பினர்கள் உள்ளதுடன், அவர்கள் அரசியலமைப்பு சபையின் ஒப்புதலைப் பெற்றவுடன் ஜனாதிபதியால் நியமிக்கப்படுகிறார்கள். ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகளாகும்.

ஜனாதிபதிக்கு விசாரணை நடாத்தி, அரசியலமைப்புச் சபையின் ஒப்புதலுடன், காரணங்களைச் சுட்டிக்காட்டி எந்தவொரு உறுப்பினரையும் பதவி நீக்குவதற்கு அதிகாரம் உள்ளது. (பிரிவு 7)

ஆணைக்குழுவின் அதிகாரங்கள் மற்றும் செயற்பாடுகள் (பிரிவு 11)

தடைசெய்யப்பட்ட அறிக்கையினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு பதிலளிப்பதற்கான ஒரு வாய்ப்பாக, தடைசெய்யப்பட்ட அறிக்கையை வெளியிடப்பட்ட அல்லது தொடர்பாடல் செய்த அல்லது தொடர்பாடல் செய்ய யாருடைய சேவை பயன்படுத்தப்பட்டதோ அந்த நபர்கள், இணைய சேவை வழங்குநர்கள் அல்லது இணைய இடைத்தரகர்களுக்கு உத்தரவுகளை வழங்குதல்;

தடை செய்யப்பட்ட அறிக்கைகளைத் தொடர்பாடல் செய்யும் நபர்களுக்கு, இணைய சேவை வழங்குநர்கள் அல்லது இணைய இடைத்தரகர்களுக்கு அத்தகைய அறிக்கைகளின் தொடர்பாடலை நிறுத்துமாறு அறிவிப்புகளை வெளியிடுதல்;

தகவல்தொடர்பாடல்களை வழங்கும் நபர்கள், இணைய சேவை வழங்குநர்கள் மற்றும் இணைய இடைத்தரகர்களுக்கு அறிவிப்புகளை வழங்குதல்;

சமூக ஊடக தளங்களை வழங்கும் வலைத்தளங்களை பதிவு செய்தல்;

சமூக ஊடக தளங்களுக்கான நடத்தை கோவைகளை அறிமுகப்படுத்துதல்;

தடைசெய்யப்பட்ட அறிக்கையைக் கொண்ட நிகழ்நிலை தளத்திற்கான அணுகலை முடக்குவதற்கு எந்தவொரு இணைய சேவை வழங்குநருக்கும் அல்லது இணைய இடைத்தரகருக்கும் அறிவிப்புகளை வழங்குதல்;

சட்டமூலத்தின் சட்ட ரீதியான தன்மைக்கான சவால்கள்

சட்டமூலத்தின் வரைவு மிகவும் ரகசியமானதுடன், வரைவுக் குழுவின் உறுப்பினர் கூட தனது எதிர்ப்பைக் காட்டிய பின்னர் பாதியிலேயே ராஜினாமா செய்தார்.

மேலும், இந்த வரைவு சட்டமூலத்தை தயாரிக்கும் போது எந்த பங்குதாரரிடமும் கருத்து கேட்கப்படவில்லை.

ஆரம்பத்தில், வரைவு சட்டமூலத்தை தயாரிக்கும் பொறுப்பு நீதி அமைச்சின் கீழ் இருந்ததுடன், பின்னர் அது திடீரென்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டது. எந்தவொரு குறிப்பும் அல்லது எழுத்துமூலமான அறிக்கையுமின்றி இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் தகவல் அலுவலர் தெரிவித்துள்ளார்.

வரைவு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்ட போது, சிவில் சமூகங்கள் ஒன்றிணைந்து சட்டமூலத்தை மீள் மதிப்பீடு செய்யுமாறு விடய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்த போதிலும், அவர் அத்தகைய கோரிக்கையை கவனத்தில் கொள்ளவில்லை அல்லது பரிசீலிக்கவில்லை.

உச்சநீதிமன்றத்தில் உள்ள விண்ணப்பங்களை ஆதரிப்பதற்கு முன்னராக, சட்டமா அதிபர் நீதிமன்றத்திற்கு ஒரு ஆவணத்தை சமர்ப்பித்ததுடன் குழு நிலையின் போது சட்டமூலத்தின் 30 பிரிவுகளில் திருத்தங்களை இணைப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்க்கிறது என்று தெரிவித்தார். சட்டமூலத்தின் 56 பிரிவுகளில் 30 பிரிவுகளில் எதிர்பார்க்கப்படும் திருத்தங்கள் சட்டமூலத்தில் கடுமையான பிழைகள் இருப்பதை தெளிவாகக் குறிக்கின்றன.

இந்த சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் 51 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதுடன், இது ஒரு வரைவு சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அதிக எண்ணிக்கையிலான மனுக்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பின் அளவைக் குறிக்கிறது.

உயர் நீதிமன்ற தீர்ப்பின்படி, இந்த சட்டமூலத்தை தனிப் பெரும்பான்மையுடன் நிறைவேற்ற வேண்டுமானால், 32 பிரிவுகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும். எனவே, குழு நிலையின் போது சட்டமூலத்தில் பாதிக்கும் மேற்பட்டவற்றை திருத்துவதற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

எவ்வாறாயினும், உயர் நீதிமன்றத்தால் சட்டமூலத்தில் இணைக்கப்படுவதற்கு பரிந்துரைக்கப்பட்ட சில திருத்தங்கள் பாராளுமன்றத்தில் குழுநிலையில் இணைக்கப்படவில்லை.

சட்டமூலத்தில் இணைக்கப்பட வேண்டுமென உயர் நீதிமன்றத்தினால் பரிந்துரைக்கப்பட்ட 9 திருத்தங்கள் விடுபட்டுள்ளதாகவும், அதனால் எதிர்க்கட்சிகள் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்க உள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் பொதுக்கூட்டத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தின் நிலையியற் கட்டளையின்படி இந்த சட்டமூலம் துறைசார் மேற்பார்வைக் குழுவுக்கு அனுப்பப்பட்ட போதிலும், அவர்களால் முறையான அறிக்கை எதுவும் சமர்ப்பிக்கப்படாததால், விவாதத்தை நடத்துவது சட்டவிரோதமானது என்று எதிர்க்கட்சிகள் வாதிடுகின்றன.

மூன்றாம் வாசிப்பின் முடிவில் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் வாக்கெடுப்பை கோரினாலும், சபாநாயகர் சட்டமூலத்தை சட்டமாக்கி, வாக்கெடுப்பு கோருவதற்கான அவகாசம் முடிவடைந்துள்ளதாக எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

வாக்கெடுப்பு முடிவடைந்த பின்னர், பல சிவில் சமூக அமைப்புகள் கூட்டாக சபாநாயகரிடம் உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையின்படி திருத்தங்களை இணைக்காத சட்டத்தை சான்றளிக்க வேண்டாம் என்று கோரின.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை, X இல் வெளியிடப்பட்ட செய்தியின் மூலம், இந்த சட்டம் இலங்கையர்களின் கருத்து வெளியிடும் உரிமை உட்பட அவர்களின் உரிமைகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது.

பேச்சு மற்றும் கருத்து வெளிப்பாட்டு உரிமைகள் மீதான தாக்கம்

நபர்கள் சில அறிக்கைகளை வெளியிடும் போது தங்களது அறிக்கைகளை மேற்குறித்த சுயாதீனமற்ற ஆணைக்குழுவானது இந்தச் சட்டத்தின் கீழ் தடைசெய்யப்பட்ட அறிக்கைகள் தொடர்பான உத்தரவு / உத்தரவின் விளைவாகபொது வெளியில் பகிர்வதை நிறுத்துமாறு தெரிவிக்கப்படும் போது, குற்றமற்றவர் என்ற அனுமானம் சவாலுக்குட்படுத்தப்படுகிறது.

மேலும், கட்டுப்பாடான உத்தரவுகளை பிறப்பிக்கும் அதிகாரம் ஒரு சுயாதீனமற்ற ஆணைக்குழுவுக்கு வழங்கப்படுகையில், சமூக ஊடக ஆர்வலர்கள் தங்களை வெளிப்படுத்த பயப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

ஒரு சுயாதீனமற்ற ஆணைக்குழுவின் தீர்மானங்கள் அரசியல் உந்துதல் கொண்டதாக இருக்கலாம், எனவே குடிமக்கள் சுதந்திரமாக கருத்தை வெளிப்படுத்தும் உரிமையைத் தடுக்கும்.

இந்தச் சட்டத்தின் கீழான தடைசெய்யப்பட்ட அறிக்கைகள் தொடர்பான குற்றங்கள் திட்டவட்டமானவை அல்ல என்பதுடன் மேலதிக பரந்த பொருள்கோடல்களுக்கு இடமளிக்கிறது, இது கருத்து வெளிப்படுத்தும் உரிமையில் தேவையற்ற மட்டுப்பாட்டை விதிக்கிறது.

‘தடைசெய்யப்பட்ட அறிக்கைகள்’ என்று அழைக்கப்படும் குற்றத்திற்கு மிகவும் பரந்த பொருள்கோடலுக்குஇடமளிக்கப்பட்டுள்ளதால், ஆக்கப்பூர்வமான தகவல்தொடர்பாடல்உள்ளடக்கத்தை நிகழ்நிலையில் வெளியிடும் படைப்பாளர்களுக்கு எதிராக ஆணைக்குழுவின் உத்தரவுகள் வழங்கப்படலாம்.

குறிப்பாக, ஒரு குறித்த அறிக்கையின் உண்மைத்தன்மை அல்லது குறைபாடு ஆகியவற்றை தீர்மானிப்பதில் உள்ள கனதி, தீவிரம் மற்றும் கடுமையான தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, நல்ல நம்பிக்கையுடன் வெளியிடப்பட்ட வெளியீடுகளுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதால், கருத்தினை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கடுமையாக கட்டுப்படுத்தப்படும்.

சமூக ஊடக தளங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற நிபந்தனை இருப்பதால், அத்தகைய நிபந்தனைக்கு கீழ்ப்படியாத எந்தவொரு சமூக ஊடக தளமும் இலங்கையை விட்டு வெளியேறக்கூடும் என்பதுடன்குடிமக்களின் கருத்தை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் மேலும் குறைக்கப்படும் அபாயம் உள்ளது.

மேலும், இந்தச் சட்டத்தின் கீழ் இணையச் சேவை வழங்குநர்கள் மற்றும் சமூக ஊடக தளங்கள் மீது குற்றவியல் பொறுப்புக்கூற முடியும் என்பதால், இது அவ்வாறான வணிகங்கள் இலங்கை சந்தையை விட்டு வெளியேறுவதற்கு தூண்டுவதுடன், சமூக ஊடகங்களில் கருத்துக்கள் மட்டுப்படுத்தப்பட்டதாகவோ அல்லது முழுமையாக நிறுத்தப்பட்டதாகவோ இருக்கும் அபாயம் உள்ளது.

இணைய சேவை வழங்குநர்கள் இலங்கை சந்தையை விட்டு வெளியேறுவது, இணைய வர்த்தகங்கள் மற்றும் சந்தைப்படுத்தல்களில் ஈடுபடுபவர்களுக்கு மிகவும் தீங்கு விளைவிப்பதுடன் பாரபட்சமாக இருக்கும்.

தொழில்நுட்ப காரணங்களால் இலங்கை தொடர்பான வெளிநாட்டு நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் சில botசெயற்பாடுகளை நிறுத்த முடியாது என்பதால், அத்தகைய குற்றங்களுக்கு இலங்கையில் வசிக்கும் குடிமக்கள் மட்டுமே பொறுப்பேற்க முடியும்.

ICCPR சட்டத்தின் பிரிவு 3 மற்றும் தண்டனைச் சட்ட கோவையின் பிரிவு 120 ஆகியவை அடுத்தடுத்த அரசாங்கங்களால் எவ்வாறு (தவறாக) பயன்படுத்தப்பட்டன என்பதைப் பற்றி விளக்கும் போது, இந்தச் சட்டத்தால் முன்மொழியப்பட்ட ஏற்பாடுகள் எதிரெதிரான சித்தாந்தங்களைக் கொண்ட நபர்களை ஒடுக்குவதற்கு பயன்படுத்தப்படுவதற்கு பெரும் ஆபத்து உள்ளது என்பதைக் குறிப்பிடுவது மிகவும் பொருத்தமானது.

சட்டமூலம் / சட்டத்தில் உள்ள நேர்மறையான விடயங்கள்

சட்டத்தின் கீழ் உள்ள அனைத்து குற்றங்களும் அடையாளம் காண முடியாத குற்றங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன, அதாவது, இந்த சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட எந்தவொரு நபரையும் கைது உத்தரவு இல்லாமல் கைது செய்ய முடியாது.

சட்டத்தின் கீழ் அனைத்து குற்றங்களும் பிணை பெறக்கூடியவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.