;
Athirady Tamil News

ஆளுகை, உலகளாவிய ஆரோக்கியத்தில் மூட நம்பிக்கை, விஞ்ஞானம்

0

விஞ்ஞான முன்னேற்றங்கள் மனித முன்னேற்றத்தின் பாதையை வரையறுக்கின்ற ஒரு யுகத்தில், ஒரு கவலைக்குரிய உலகளாவிய போக்கு உருவாகியுள்ளது. அது விஞ்ஞானத்தை சந்தேகிப்பதும், அரசியல் தலைமைத்துவத்தில் மூடநம்பிக்கை வார்த்தை ஜாலங்கள் மீண்டும் எழுவதுமாகும். தலைவர்கள் போலியான விஞ்ஞானம் மற்றும் கலாசார மாயவாதத்தின் மீது அதிகளவில் சாய்ந்து வருவதுடன், அதற்காக பெரும்பாலும் சான்றுகள் சார்ந்த கொள்கை வகுப்பை பலி கொடுக்கின்றனர்.

இந்த மாற்றம் பொது சுகாதாரம் மற்றும் சூழலியல் முயற்சிகளை அச்சுறுத்துவது மட்டுமல்லாமல், உலக அரங்கில் ஆளுகையின் நம்பகத்தன்மையையும் பாதிக்கின்றது. இரு நாடுகளின் உதாரணங்கள் மூலம் இந்த முன்னேற்றங்களை ஆராய்வது, விஞ்ஞானம் மற்றும் பகுத்தறிவில் வேரூன்றிய தலைமைத்துவத்திற்கான மீள்வடிவமைக்கப்பட்ட அணுகுமுறையின் அவசரத் தேவைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.

மூடநம்பிக்கை நீண்ட காலமாக அரசியல் பிரச்சாரத்தில் ஆதிக்கம் செலுத்தி வருவதுடன், பெரும்பாலும் மக்களுடன் இணைவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில், விஞ்ஞான ரீதியானஒருமித்த கருத்தை வேண்டுமென்றே நிராகரிப்பது தீவிரமடைந்துள்ளது.

அமெரிக்காவில், காலநிலை விஞ்ஞானத்தை சந்தேகிப்பதன் மூலமும், COVID-19 பெருந்தொற்றின் தீவிரத்தை நிராகரிப்பதன் மூலமும், தடுப்பூசி பற்றிய தவறான தகவல்களைப் பரப்புவதன் மூலமும் அரசியல் அதிகார மையங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. “உயரடுக்கு” விஞ்ஞான நிறுவனங்களை மக்கள் எதிர்ப்பதாக பெரும்பாலும் வடிவமைக்கப்பட்ட இந்த நடவடிக்கைகள், சமூகத்தின் ஏமாற்றமடைந்த பிரிவுகளிடையே வளமான தளத்தினை கண்டறிந்தன.

உலகளவில், இதே போன்ற போக்குகள் உருவாகியுள்ளன. அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் பொது நலனைப் பலி கொடுத்து ஆதரவைத் திரட்டுவதற்காக போலி விஞ்ஞானகூற்றுக்கள் மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகளை அதிகளவில் சார்ந்து இருக்கிறார்கள். இந்த நிகழ்வு எல்லைகளைக் கடந்து, நிறுவனங்கள் மீதான வளர்ந்து வரும் அவநம்பிக்கையையும், ஆறுதலளிக்கின்ற, ஆனால் பிற்போக்கான கதைகளுக்குள் பின்வாங்குவதையும் பிரதிபலிக்கிறது.

கார்ல் சாகன், 1995 ஆம் ஆண்டு எழுதிய Demon-Haunted World என்ற புத்தகத்தில்,

“மக்கள் தங்கள் சொந்த நிகழ்ச்சி நிரல்களை அமைக்கும் திறனை இழந்திருக்கும்போது அல்லது அதிகாரத்தில் இருப்பவர்களை அறிவுபூர்வமாக வினவும் திறனை இழந்திருக்கும்போது; “நம்முடைய படிகங்களைப் பிடித்துக்கொண்டு, பதட்டத்துடன் நமது சாதகங்களைப் பார்க்கும்போது, எது நல்லது, எது உண்மை என்பதை வேறுபடுத்திப் பார்க்க முடியாமல், நமது விமர்சனத் திறன்கள் வீழ்ச்சியடையும் போது, நாம் கவனிக்காமலேயே மூடநம்பிக்கை மற்றும் இருளில் மீண்டும் மூழ்கிவிடுகிறோம்.”

கட்டுப்படுத்த முடியாததைக் கட்டுப்படுத்த முயற்சிக்கும் தவிர்க்க முடியாத உளவியலுக்குத் திரும்புவதற்கான மனிதகுலத்தின் வழி இதுதானா, அல்லது நாம் ஒரு சில சக்திவாய்ந்த நபர்களின் பிரச்சாரங்களால் ஏமாற்றப்படுகிறோமா?

மூடநம்பிக்கையை ஆட்சியுடன் கலப்பதால் ஏற்படும் விளைவுகளுக்கு இலங்கை ஒரு குறிப்பிடத்தக்க உதாரணத்தை வழங்குகிறது. முந்தைய அரசாங்கம் முக்கியமான பிரச்சினைகளைத் தீர்க்க கலாச்சார மாயவாதத்தை நம்பியதற்காக விசாரணையை எதிர்கொண்டது. இந்தப் போக்கு புதியதல்ல. இலங்கையின் அரசியல் வரலாறானது, பகுத்தறிவானதீர்மானமெடுப்பை விட போலி விஞ்ஞான முன்னுரிமை பெற்ற நிகழ்வுகளால் நிறைந்துள்ளது.

கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில், பல உயர்மட்டத் தலைவர்கள் “மந்திர சிகிச்சைகளை” ஆதரித்ததுடன், இதில் தடுப்பூசிகள் என்று அறியப்பட்ட மூலிகை கலவைகளும் உள்ளடங்கும். இந்தக் கூற்றுக்கள், பெரும்பாலும் விஞ்ஞானபூர்வமான சரிபார்க்கைக்கு பதிலாக பாரம்பரிய நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டதுடன், நாட்டின் பொது சுகாதாரப் பதிலளிப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்தின. நெருக்கடியின் போது தவறான நிர்வாகம், ஆதாரங்களை விட மூடநம்பிக்கைக்கு முன்னுரிமை அளிப்பதன் ஆபத்துகளை அம்பலப்படுத்தியதுடன், இது மக்களுக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியது.

இந்தப் பிரச்சினை ஆரோக்கியத்திற்கு அப்பாலும் நீண்டுள்ளது. கடந்த காலங்களில், இலங்கைத் தலைவர்கள் தேர்தல்கள் மற்றும் கொள்கை வெளியீடுகள் உள்ளிட்ட முக்கியமான தீர்மானங்களை எடுக்க ஜோதிடத்தைப் பயன்படுத்தியதுடன், இது நிர்வாகத்தின் மீதான நம்பிக்கையை மேலும் சிதைத்துள்ளது. கலாச்சார மற்றும் மதம்சார் மரபுகள் ஆழமான முக்கியத்துவத்தைக் கொண்டிருந்தாலும், விஞ்ஞான அடிப்படையிலான கொள்கை வகுப்பில் அவற்றின் ஊடுருவல், நவீன சவால்களுக்கும் அவற்றை எதிர்கொள்ளும் தலைமைத்துவத்தின் திறனுக்கும் இடையிலான இடையூறானதுண்டிப்பினை விளக்குகிறது.

அமெரிக்காவிலும் இலங்கையிலும் விஞ்ஞானம் மீதான சந்தேகம் தனிமைப்படுத்தப்பட்டதல்ல, மாறாக ஓர் பாரிய உலகளாவிய போக்கின் ஒரு பகுதியாகும். தவறான தகவல்கள் முன்னெப்போதையும் விட வேகமாகப் பரவி வருவதால், விஞ்ஞானஎதிர்ப்பு பிரச்சாரங்கள் நிறுவனங்கள் மீதான நம்பிக்கையைக் குறைத்து, சர்வதேச ஒத்துழைப்பைத் தடுக்கின்றன.

உதாரணமாக, பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா ஆரம்பத்தில் விலகியது உலகளாவிய காலநிலை முயற்சிகளில் அதிர்ச்சி அலைகளை வெளிப்படுத்தியது. இதேபோல், இலங்கை அதன் பெருந்தொற்றுக்கான பதிலளிப்பை தவறாகக் கையாண்டமை, பிராந்திய சுகாதாரப் பாதுகாப்பில் மோசமான நிர்வாகத்தின் சிற்றலை விளைவுகளை எடுத்துக்காட்டுகிறது.

இரண்டு சந்தர்ப்பங்களிலும், விளைவுகள் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவையாகும். காலநிலை மாற்றம், பெருந்தொற்று மற்றும் பிற உலகளாவிய சவால்களுக்கு விஞ்ஞானரீதியானசான்றுகளை அடிப்படையாகக் கொண்ட கூட்டு நடவடிக்கை அவசியமாகின்றது. முக்கிய தரப்பினர் இந்த அணுகுமுறையைக் கைவிடும்போது, அதன் விளைவுகள் உலகளவில் உணரப்படுகின்றன. கொள்கை வகுப்பில் விஞ்ஞானத்திற்கு முன்னுரிமை அளிக்கத் தவறுவது உடனடி நெருக்கடிகளை மட்டுமல்லாது, சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் நிலைபேண்தகுஅபிவிருத்தி ஆகியவற்றில் நீண்டகால முன்னேற்றத்தையும் அச்சுறுத்துகிறது.

தலைமைத்துவத்தில் மூடநம்பிக்கை மற்றும் விஞ்ஞானஎதிர்ப்பு பிரச்சாரங்களின் எழுச்சியை நிவர்த்தி செய்வதற்கு பன்முக அணுகுமுறை அவசியமாகின்றது. முதலாவதாக, விஞ்ஞானதொடர்பாடலை வலுப்படுத்துவது அவசியமாகும். நிபுணர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளியைக் குறைப்பது சிக்கலான பிரச்சினைகளை தெளிவுபடுத்தி, தவறான தகவல்களை எதிர்கொள்ள உதவும். தலைவர்கள் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை வளர்க்க வேண்டியதுடன், தீர்மானங்கள் சித்தாந்தம் அல்லது பாரம்பரியத்தை விட ஆதாரங்களின் அடிப்படையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

விஞ்ஞானத்தை சந்தேகிப்பவர்கள் மீது பழி சுமத்துவது இலகுவாக இருந்தாலும், இந்த நிகழ்வுகளுக்கு முதலில் காரணம் அறிவுசார் உயரடுக்குதானா என்று ஒருவர் யோசிக்கலாம். இது அவர்களின் சுய வெளிப்பாட்டின் வழிவகை என்று நம் சக குடிமக்களை நாம் பாராதீனப்படுத்திவிட்டோமா?

சாகன் எச்சரிப்பது போல, இதற்கு பணிவும் மற்றும் உள்ளடங்கலும் அவசியமாகும்:

“ஐயுறவான இயக்கத்தில் நான் காணும் முக்கிய குறைபாடு அதன் துருவமுனைப்பான நாம் எதிர் அவர்கள் என்பதாகும். சத்தியத்தின் மீது நமக்கு ஏகபோகம் இருக்கிறது என்ற உணர்வாகும்; அதாவது இந்த முட்டாள்தனமான கோட்பாடுகளை நம்பும் மற்றவர்கள் முட்டாள்கள்; நீங்கள் உணர்திறன் உடையவராக இருந்தால், நாங்கள் சொல்வதைக் கேட்பீர்கள்; இல்லையென்றால், நரகம் உங்களுடன் தான். இது ஆக்கபூர்வமானதல்ல. இது நமது செய்தியை எங்கும் கொண்டு செல்லவில்லை. “இது எங்களுக்கு நிரந்தர சிறுபான்மை அந்தஸ்தை அளிக்கிறது.”

வினைத்திறனானவிஞ்ஞான தொடர்பாடலானது, உயர்குடியினரை தவிர்த்து, சமுதாயங்களை அர்த்தமுள்ள உரையாடலில் ஈடுபடுத்த வேண்டும். தலைவர்களும் கூட வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வை மாதிரியாகக் கொள்ள வேண்டும். கலாச்சார மரபுகளை மதிக்கும் அதே வேளையில், ஆதாரங்களில் தீர்மானங்களை வேரூன்றச் செய்வதன் மூலமாக, அவர்கள் பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்ப முடியும்.

மேலும், உலகளாவிய சமூகம் வெற்றிகரமான, சான்றுகள் அடிப்படையிலான நிர்வாகத்தின் உதாரணங்களை ஊக்குவிக்க வேண்டும். கலாச்சார மரபுகளுடன்விஞ்ஞானபுத்தாக்கங்களுக்குசமநிலையான மரியாதையைகொண்ட நாடுகள் பெறுமதியான பாடங்களை வழங்குகின்றன.

பொது சுகாதார முயற்சிகள் முதல் காலநிலை ஒப்பந்தங்கள் வரை கூட்டு சர்வதேச முயற்சிகள், பகிரப்பட்ட சவால்களை எதிர்கொள்வதில் விஞ்ஞானத்தின் முக்கியத்துவத்தை மேலும் வலுப்படுத்தும். மூடநம்பிக்கையின் எழுச்சியும், தலைவர்களிடையே விஞ்ஞானம் மீதான நம்பிக்கையின் தேய்வும் ஆழமான விளைவுகளைக் கொண்ட ஒரு உலகளாவிய அலையாகும்.

அமெரிக்காவிலிருந்து இலங்கை வரை, இந்தப் போக்கு பொதுமக்களின் நம்பிக்கையை அச்சுறுத்துவதுடன், சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை விளைவிக்கிறது, மேலும் முன்னேற்றப் பயணத்தைத் தடுக்கிறது. நமது நூற்றாண்டின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு, கலாச்சார அடையாளங்களின் திரையை மதிக்கின்ற அதே வேளையில், சான்றுகள் சார்ந்த தீர்மானமெடுப்பை ஏற்றுக்கொள்ளும் தலைமைத்துவத்தை நாம் கோர வேண்டும்.

இது விஞ்ஞானத்தில் நங்கூரமிட்டு, ஒத்துழைப்பில் கட்டியெழுப்பப்பட்டு, நம்பிக்கையில் அடித்தளமிடப்பட்ட நிர்வாகத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரமாகும். கார்ல் சாகன் கூறுவது போல, விஞ்ஞானமுறைமையின் கடுமையை மீட்டெடுப்பது வெறுமனே அறிவுசார் நாட்டம் மட்டுமல்ல; இது தனிநபர்கள் அறிவின் கட்டுப்பாட்டை மீண்டும் பெறுவதற்கும் ஜனநாயகத்தின் சக்தியை மீட்டெடுப்பதற்குமான ஒரு வழிமுறையாகும். அப்போதுதான்,மிக அதிகமான ஜனநாயகங்கள் தன்னலக்குழுக்களை ஒத்திருக்கின்ற உலகில் அரசாங்கங்கள் உண்மையிலேயே சலுகை பெற்ற சிலருக்கு அல்லாமல், பலருக்கு சேவை செய்ய முடியும்.

இது, நமது அருகாமையிலும் தொலைவிலும் உள்ள அயலவருக்காகவும், மனிதகுலத்திற்காகவும், வரவிருக்கும் தலைமுறைகளுக்காகவும் தர்க்கம், பகுத்தறிவு மற்றும் பச்சாதாபத்துடன் சுதந்திரமாக சிந்திப்பதற்கான ஒரு அழைப்பாகும். நாம் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும், “ஒரு கைதி தப்பிச் செல்வதைத் தடுப்பதற்கான சிறந்த வழி, அவன் சிறையில் இருப்பதை ஒருபோதும் அறியாமல் பார்த்துக் கொள்வதாகும்.”

You might also like

Leave A Reply

Your email address will not be published.