;
Athirady Tamil News

புது டில்லி சட்ட பேரவை தேர்தல்: ஒரு பார்வை

0

கே வி ஆர் கோபி

இந்தியாவின் தலைநகரம் என்ற சர்வதேச அடையாளத்துடன் உள்ள புது டில்லியில் எதிர்வரும் ஐந்தாம் திகதி அன்று சட்டப்பேரவை பொது தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ச்சியாக ஆளும் கட்சியாக இருந்து வரும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளுமா? அல்லது இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் ஆட்சி செய்து வரும் பாரதிய ஜனதா கட்சி இந்த முறை புது டில்லியை கைப்பற்றுமா? கடந்த பத்து ஆண்டுகளாக ஒரு சட்டமன்றத் தொகுதியை கூட வெல்ல முடியாமல் அதள பாதாளத்திற்கு சென்றிருக்கும் காங்கிரஸ் கட்சி குறைந்த எண்ணிக்கையிலான சட்டமன்ற தொகுதியில் வெற்றியை பெறுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

70 தொகுதிகளைக் கொண்ட புது தில்லி சட்டப்பேரவைக்கு கடந்த 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் 67 தொகுதிகளையும், 2020 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் 62 தொகுதிகளையும் வெற்றி பெற்று, மக்களிடம் நம்பிக்கையை பெற்ற ஆம் ஆத்மி கட்சி இந்த முறை மீண்டும் வெற்றி பெறுவதற்கு கடுமையாக போராடி வருகிறது.

அக்கட்சியின் நட்சத்திர முகமான தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் பம்பரமாக சுழற்றி அனைத்து தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். ஒவ்வொரு பிரச்சாரத்திலும் மகளிருக்கு உரிமை தொகை 2,100 வழங்கப்படும் என்றும், கல்வி மற்றும் குடிநீர் விநியோகிப்பதில் மேலும் எளிமையான நடைமுறை கையாளப்படும் என்றும் வாக்குறுதி கொடுத்து வாக்காளர்களை கவர்ந்து வருகிறார்.

கடந்த 10 ஆண்டு ஆட்சியில் இவர் அடித்தட்டு மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு சில நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு இருந்தாலும் புது டில்லி தொகுதியில் சீக்கியர்கள், தலித்துகள், இஸ்லாமியர்கள் ஆகியோர்களின் வாக்குகள்தான் அதிகம். இவர்களிடத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் மதசார்பற்ற தலைவராக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் இந்து மத கொள்கைகளை கடைப்பிடிக்கும் தலைவராக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதால் பாஜகவின் நெருக்கடி தாங்காமல் இந்து மக்களின் வாக்குகளை ஒருங்கிணைத்து அதனை பாஜக அறுவடை செய்து விடக்கூடாது என்பதற்காக இப்படி ஒரு அஸ்திரத்தை கையில் எடுத்திருக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால். இது அவருக்கு தேர்தலில் சாதகமாக இருக்குமா? அல்லது பாதிப்பை தருமா? என்பது தேர்தல் முடிவிற்குப் பிறகுதான் தெரிய வரும்.

அதே தருணத்தில் ஆம் ஆத்மி கட்சி புது டில்லியில் தனக்குள்ள செல்வாக்கினை தக்க வைத்துக் கொள்வதற்காக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருந்தது. ஆனால் சட்டப்பேரவை தேர்தல் என்பது வேறு என்பதால் கூட்டணியை முறித்துக் கொண்டு எழுபது தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. கூட்டணி வைத்திருந்தால் பாஜக எளிதாக வென்று விடும் என அரவிந்த் கெஜ்ரிவால் கணக்கு போட்டதால் காங்கிரசை கழட்டி விட்டு தனியாக தேர்தலை சந்திக்கிறார். மேலும் இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை சேர்ந்த சமாஜ்வாதி கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, சரத் பவர் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி ஆகியவை ஆம் ஆத்மி கட்சிக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்திருக்கிறது. இதனால் ஆம் ஆத்மி கட்சி ஹாட்ரிக் வெற்றியை பெறுவோம் என நம்பிக்கையுடன் களமாடி வருகிறது.

தேசிய அளவில் மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றி இருக்கும் பாரதிய ஜனதாவிற்கு இந்தியாவின் தலைநகரமான புது டில்லியில் காலூன்றி ஆட்சி செய்ய முடியவில்லை என்ற ஆதங்கம் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கிறது. இந்த முறை எப்படியாவது ஆம் ஆத்மி கட்சியை அகற்றி, பாஜகவை ஆளும் கட்சியாக அமர வைத்து விட வேண்டும் என அக்கட்சியினர் அதி தீவிரமாக களத்தில் பணியாற்றி வருகிறார்கள்.

அவர்களின் அரசியல் எதிரியான ஆம் ஆத்மி கட்சி மீது உள்ள நல்லெண்ணத்தை சிதைக்கும் வகையில் வருமான வரித்துறை , அமலாக்கத் துறை மூலம் அரவிந்த் கெஜ்ரிவால் மீது மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பாக வழக்கு பதிவு செய்து அவரை பிரச்சாரத்திற்காக வெளியே விடாமல் சிறையில் அடைத்தது. அவர் மீதும், அவர் கட்சி மீதும் இருந்த ஊழலற்ற கட்சி- ஊழலற்ற தலைவர் என்ற பிம்பத்தை பாஜக திட்டமிட்டு உடைத்து சுக்குநூறாக்கியது. அத்துடன் தேர்தல் ஆணையத்தை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு எந்தெந்த தொகுதியில் ஆம் ஆத்மியின் வாக்காளர்கள் அதிக அளவு இருக்கிறார்களோ அவர்களின் எண்ணிக்கையை முடிந்தவரை வாக்காளர் பட்டியலில் இருந்து சில அல்ப காரணங்களை சொல்லி நீக்கி இருக்கிறது. இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியும், காங்கிரஸ் கட்சியும் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்திருக்கிறது. இருந்தாலும் இந்த புகார் வழக்கம்போல் விசாரிக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது.

இருப்பினும் பாஜகவின் நட்சத்திர முகமான பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய இருவரும் புது டில்லியில் 20க்கும் மேற்பட்ட ரோட் ஷோகளை நடத்தி மக்களை கவர்ந்திருக்கிறார்கள். இவர்களும் மக்களுக்கு ஏராளமான இலவசங்களை வாக்குறுதிகளாக அளித்திருக்கிறார்கள். புது டில்லி மக்கள், கடந்த மக்களவைக்கு வாக்களித்ததை போல் நூறு சத வெற்றியை பாஜகவிற்கு வழங்குவார்களா? இல்லையா? என்பதும் தேர்தல் முடிவிற்குப் பிறகுதான் தெரியவரும்.

ஒரு காலத்தில் புது டில்லி சட்டப்பேரவையில் ஆளுங்கட்சியாகவும் பிறகு வலிமைமிக்க எதிர்க்கட்சியாகவும் திகழ்ந்த காங்கிரஸ் கட்சி, கடந்த பத்து ஆண்டுகளாக ஒரு சட்டமன்ற உறுப்பினரை கூட பெறாமல் கடுமையாக போராடி வருகிறது. இந்த முறையும் காங்கிரஸ் கட்சி, ஆம் ஆத்மி கட்சியின் கூட்டணியில் இருந்து கழட்டி விட்டதால் தனியாக போட்டியிடுகிறது. ராகுல் காந்தி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, ஆகிய தலைவர்கள் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாக தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தாலும் மக்களின் வாக்கு கிடைக்குமா ..! என்பது சந்தேகம்தான் என்கிறார்கள்.

ஆனால் காங்கிரஸ் கட்சியினரோ இந்த முறை புது டில்லி சட்டப்பேரவைத் தொகுதிக்கு 20 உறுப்பினர்கள் வெற்றி பெறுவார்கள் என்றும், இவர்கள்தான் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்வதா? அல்லது பாரதிய ஜனதா கட்சி ஆட்சி ஆட்சி செய்வதா? என்பதை நிர்ணைப்பார்கள் என்றும், அந்த அளவிற்கு இந்த முறை காங்கிரசின் செல்வாக்கு உயர்ந்திருக்கிறது என்றும் சொல்கிறார்கள். மேலும் கடந்த முறை ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்த இஸ்லாமியர்களும் ,தலித்துகளும் இந்த முறை காங்கிரசிற்கு வாக்களிக்க விருப்பம் தெரிவித்திருப்பதாகவும் காங்கிரஸ் கட்சியினர் தெரிவிக்கிறார்கள்.

இதனால் காங்கிரஸ் கட்சி அவர்கள் எதிர்பார்த்ததை போல் வெற்றி பெறாவிட்டாலும் கடந்த பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முறை புது டில்லி சட்டப்பேரவைக்கு கட்சி சார்பில் சிலர் தெரிவு செய்யப்படுவார்கள் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

பெப்ரவரி 5 ஆம் திகதியன்று புது டில்லி சட்டப்பேரவைக்குட்பட்ட 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது . மொத்தம் உள்ள ஒரு கோடியே 56 லட்சத்து வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு வசதியாக 13,766 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த தொகுதிக்கு இன்று மாலை 5 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது.

ஐந்தாம் திகதியன்று பதிவாகும் வாக்குகளின் எண்ணிக்கை எதிர் வரும் எட்டாம் திகதியன்று எண்ணப்பட்டு அன்று மாலை முடிவுகள் தெரியவரும். அதன் பிறகு தான் புது டில்லியை மீண்டும் ஆம் ஆத்மி கைப்பற்றுகிறதா? அல்லது மத்தியில் ஆளும் பாஜக கைப்பற்றுகிறதா? என்பது உறுதி பட தெரியவரும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.