;
Athirady Tamil News

தெற்காசியாவின் எரிசக்திப் பாதுகாப்பு : ஒரு ஒற்றைப் பாதையில் சிக்கிய மூன்று தேசங்கள்

0

(லியோ நிரோஷ தர்ஷன்)

தெற்காசியாவின் எரிசக்தி வரைபடம் ஒரு புதிய விடியலை நோக்கி நகர்வதாகவே 2026 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் பலராலும் கருதப்பட்டது. பாக்கிஸ்தானில் நிலவிய எரிவாயு மிகை மற்றும் கத்தார் வலுச்சக்தி துறையுடன் பங்களாதேஷம் மேற்கொண்ட 15 ஆண்டுகால வரலாற்றுச் சிறப்புமிக்க விநியோக ஒப்பந்தத்தின் முதல் கொள்வனவு வருகை, அத்துடன் 2022-ஆம் ஆண்டின் இறையாண்மைக் கடன் நெருக்கடியிலிருந்து மீண்டு வந்துகொண்டிருந்த இலங்கையின் நிதானமான பொருளாதார முன்னேற்றம் என அனைத்தும் ஒரு சுமுகமான சூழலையே பிரதிபலித்தன. ஆனால், அடுத்த ஏழே வாரங்களில் நிலைமை தலைகீழாக மாறியது.

மார்ச் மாத தொடக்கத்தில் ஹோர்முஸ் ஜலசந்தி முழுமையாக மூடப்பட்டது. இதனை தொடர்ந்து உலகின் மிகப்பெரிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு நிலையமான ராஸ் லாபானில் (Ras Laffan) கத்தார் வலுசக்தி ‘தவிர்க்க முடியாத சூழல்’ நிலையை அறிவித்ததும், தெற்காசிய நாடுகளை ஒரு இருண்ட யுகத்திற்குள் தள்ளியது. எரிசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த கையெழுத்திடப்பட்ட அதே ஒப்பந்தங்கள், இன்று அந்த நாடுகளுக்கு ஒரு பொருளாதாரப் பொறியாக மாறியுள்ளன.

தெற்காசியாவின் எரிசக்தித் தேவை என்பது நீண்டகாலமாகவே பாரசீக வளைகுடா நாடுகளைச் சார்ந்தே கட்டமைக்கப்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்களின்படி, பாக்கிஸ்தான், இந்தியா மற்றும் பங்களாதேஷம் ஆகிய நாடுகள் தங்களின் மொத்த திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு இறக்குமதியில் சிம்ம சொப்பனப் பகுதியை கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திடமிருந்தே பெற்று வந்தன. குறிப்பாக, பாக்கிஸ்தான் தனது கச்சா எண்ணெயில் 90 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை இந்தப் பிராந்தியத்திலிருந்தே இறக்குமதி செய்தது. பங்களாதேஷத்தைப் பொறுத்தவரை, அதன் மொத்த எரிசக்தித் தேவையில் 95 சதவீதம் இறக்குமதியைச் சார்ந்தே உள்ளது.

தற்போது தீவிரமடைந்துள்ள ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கப் போர் மற்றும் அதன் விளைவாக ஏற்பட்டுள்ள உலகளாவிய எரிசக்தி நெருக்கடி, ஒரு மிக முக்கியமான பாடத்தைக் கற்பித்துள்ளது. அதாவது, ஒரு ஒற்றைக் கடல் வழிப்பாதை வழியாக ஒரு பிராந்தியத்தின் மொத்த விநியோகத்தையும் குவிப்பது எவ்வளவு பெரிய கட்டமைப்பு ரீதியான தோல்வி என்பதை துல்லியத்துடன் இந்த 2026 நெருக்கடி நிரூபித்துக் காட்டியுள்ளது. தெற்காசியாவின் இந்த திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு சார்புநிலை என்பது தற்செயலாக உருவானது அல்ல, அது கடந்த கால நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க எடுக்கப்பட்ட திட்டமிட்ட கொள்கை முடிவுகளின் விளைவாகும். பங்களாதேஷத்தின் உள்நாட்டு எரிவாயு திறன் வற்றிப் போனதும், 2022 ஆம் ஆண்டில் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவின் உடனடி சந்தை விலைகள் விண்ணைத் தொட்டன. பாக்கிஸ்தான் நாடு தழுவிய முடக்க நிலைக்கு அருகில் சென்றதும், இலங்கை தனது அந்நியச் செலாவணி கையிருப்பு முழுவதையும் இழந்ததும் நாடுகளை ஒரு பாதுகாப்பான வழியைத் தேடத் தூண்டின.

2022 ஆம் ஆண்டில் ரஷ்யா-உக்ரைன் போர் வெடித்தபோது, ஐரோப்பிய நாடுகள் உலகளாவிய திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு சந்தையைத் தங்களுக்குச் சாதகமாக வளைத்தன. அப்போது தெற்காசிய நாடுகள் உடனடி சந்தையில் அதிக விலை கொடுத்து எரிவாயு வாங்க முடியாமல் தவித்தன. இதிலிருந்து தப்பிக்கவே, விநியோகத்தை உறுதிப்படுத்தவும் விலையை நிலைப்படுத்தவும் நீண்டகால ஒப்பந்தங்கள் எனும் வியூகத்தை அரசாங்கங்கள் கையாண்டன. அந்தத் தர்க்கம் அப்போது நியாயமானதாகவே இருந்தது. 2022 ஆம் ஆண்டில் உடனடி சந்தை விலை ஒரு மில்லியன் பிரிட்டிஷ் வெப்ப அலகிற்கு 70 டொலராக உயர்ந்தபோது, நீண்டகால ஒப்பந்தங்கள் ஒரு வரப்பிரசாதமாகத் தெரிந்தன. ஆனால், அந்த ஒப்பந்தங்கள் ஒரு மிக முக்கியமான அம்சத்தைக் கணக்கில் கொள்ளத் தவறிவிட்டன. அதாவது ஒப்பந்தம் செய்யப்பட்ட சரக்குகள் வரவேண்டிய பாதை பாதுகாப்பானது தானா என்பதே அதுவாகும். இன்று ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டுள்ள நிலையில், கையிலிருந்த ஒப்பந்தங்கள் வெறும் காகிதங்களாக மாறியுள்ளன. ‘கேஸ் அவுட்லுக்’ (Gas Outlook) கணிப்பின்படி, இந்த விநியோகப் பாதை முடக்கத்தால் உலகிலேயே இலங்கை, பங்களாதேஷம் மற்றும் பாக்கிஸ்தான் ஆகிய நாடுகளே பொருளாதார ரீதியாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்படும் என எச்சரித்துள்ளது.

நாடுகளின் தற்போதைய அவலநிலை

2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம், கத்தாருடன் பங்களாதேஷம் செய்துகொண்ட 15 ஆண்டுகால ஒப்பந்தம் ஒரு பெரும் சாதனையாகப் பார்க்கப்பட்டது. ஆனால், முதல் சரக்கு வந்த ஏழே வாரங்களில் கத்தார் விநியோகத்தை நிறுத்தியதும் அது பங்களாதேஷத்திற்குப் பேரிடியாக அமைந்தது. ஈரானியத் தாக்குதலால் கத்தாரின் உற்பத்தித் திறன் 17 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இது சீராக இன்னும் 5 ஆண்டுகள் வரை ஆகலாம் என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. இதன் விளைவாக, பங்களாதேஷம் தற்போது அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் மூடியுள்ளது. மின்சாரத்தைச் சேமிக்கப் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன், பதுக்கலைத் தவிர்க்க இராணுவ நடவடிக்கைளை முன்னெடுத்துள்ளது. அந்த நாடு இப்போது போருக்கு முந்தைய விலையை விட மூன்று மடங்கு அதிக விலைக்கு உடனடி சந்தையில் எரிவாயு வாங்கப் போராடி வருகிறது.

பாக்கிஸ்தானின் நிலைமை சற்று மாறுபட்டது, ஆனால் சமமான ஆபத்தைக் கொண்டது. கடந்த ஜனவரி வரை மேலதிக எரிவாயு வைத்திருந்த பாக்கிஸ்தான், போர் வெடித்ததும் ஒரே இரவில் தட்டுப்பாட்டைச் சந்தித்தது. வலுச்சக்தி பொருளாதாரம் மற்றும் நிதி பகுப்பாய்வு நிறுவன ஆய்வின்படி, 2032 வரை பாக்கிஸ்தான் நிறைவேற்ற வேண்டிய ஒப்பந்தங்களில் 177 கொள்வனவுகள் மேலதிகமாக இருக்க வாய்ப்புள்ளது. இதற்கான நிதிப் பொறுப்பு தற்போதைய விலையில் 5.6 பில்லியன் டொலர்களுக்கும் அதிகம். இதைப் பயன்படுத்தவும் முடியாமல், ஒப்பந்தத்திலிருந்து வெளியேறவும் முடியாமல் பாக்கிஸ்தான் தவிக்கிறது. உரத் துறைக்கான விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், இது அந்நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

சிறிய பொருளாதாரத்தைக் கொண்டுள்ள இலங்கை, ஏற்கனவே பலவீனமான அந்நியச் செலாவணி கையிருப்புடன் இந்த நெருக்கடியை எதிர்கொள்கிறது. எரிபொருள் வரிசை முறை மற்றும் வாரத்திற்கு நான்கு நாள் அரச வேலை ஆகியவை மீண்டும் அமலுக்கு வந்துள்ளன. 2022 ஆம் ஆண்டில் நிலவிய நீண்ட வரிசைகளும் மின்சாரத் தடைகளும் மீண்டும் திரும்புமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

விநியோகச் சங்கிலி இடையூறுகள் இவ்வளவு வெளிப்படையாகத் தெரிந்த பிறகும், தெற்காசிய நாடுகள் சுமார் 107 பில்லியன் டொலர் மதிப்பிலான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு முனையங்கள் மற்றும் குழாய்த்திட்டங்களை விரிவாக்கத் திட்டமிட்டுள்ளன. உலகளாவிய ஆற்றல் கண்காணிப்பு அமைப்பின் அறிக்கையின்படி, பங்களாதேஷம் மற்றும் பாக்கிஸ்தான் தங்களின் தற்போதைய இறக்குமதி உள்கட்டமைப்பை இரண்டு மடங்காக உயர்த்தத் திட்டமிட்டுள்ளன. ஹோர்முஸ் ஜலசந்தி போன்ற ஒரு நெருக்கடியான வழிப்பாதையை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு கட்டமைப்பில் மேலும் பல்லாயிரம் கோடிகளை முதலீடு செய்வது என்பது தற்கொலைக்குச் சமமானது என பலரும் எச்சரிக்கின்றனர்.

எனவே இந்த நெருக்கடியிலிருந்து தப்பிக்க ஒரே வழியாக, எரிசக்தி இறக்குமதியைக் குறைத்து உள்நாட்டு வளங்களை நோக்கித் திரும்புவது அவசியமாக உள்ளது. பாக்கிஸ்தானின் சூரிய சக்தி விரிவாக்கம் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. தற்போதைய நெருக்கடியின் போது பாக்கிஸ்தானின் மின்சாரத் துறை ஓரளவிற்குத் தாக்குப் பிடிப்பதற்குக் காரணம் அதன் சூரிய சக்தி முதலீடுகளாகும்.

ஆற்றல் பொருளாதாரம் மற்றும் நிதி பகுப்பாய்வு நிறுவனம் கணக்கீட்டின்படி, ஒவ்வொரு ஜிகாவோட் சூரிய மின்சக்தியும் பாக்கிஸ்தானிற்கு 25 ஆண்டுகளில் சுமார் 3 பில்லியன் டொலர் இறக்குமதிச் செலவை மிச்சப்படுத்துகிறது. மிக முக்கியமாக, சூரிய ஒளி எந்தவொரு வெளிநாட்டுத் துறைமுகத்திலிருந்தோ அல்லது முடக்கப்படக்கூடிய ஜலசந்திகள் வழியாகவோ வர வேண்டிய அவசியமில்லை. இது ஒரு நாட்டின் எரிசக்தி இறையாண்மையை நேரடியாக உறுதி செய்கிறது. மாறாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் போதிய முதலீடு செய்யாத பங்களாதேஷம் போன்ற நாடுகள் தற்போது பாரிய விலையைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன. எனவே, இந்த மாற்றம் என்பது வெறும் காலநிலை மாற்றம் தொடர்பான விவாதம் மட்டுமல்ல, இது ஒரு நாட்டின் தேசியப் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத் தற்சார்பு குறித்த உத்திசார்ந்த முடிவாகும்.

2026 ஆம் ஆண்டு ஜனவரியில் நிலவிய அந்த நிதானமான நம்பிக்கையும் உற்சாகமும் இப்போது இல்லை. மார்ச் மாதத்தின் கசப்பான யதார்த்தங்கள் தெற்காசிய அரசாங்கங்களின் கண்களைத் திறந்துள்ளன. ஒரு ஒற்றைக் கடல் வழிப்பாதையைச் சார்ந்திருப்பது எவ்வளவு அபாயகரமானது என்பதை இந்த திடீர் அதிர்ச்சி உணர்த்தியுள்ளது. 2026 ஆம் ஆண்டுக்கு பிந்தைய காலத்தில் தெற்காசிய அரசாங்கங்கள் உருவாக்கும் எரிசக்தி பாதுகாப்பு உத்திகளே, இந்த பிராந்தியம் அடுத்த இடையூறுக்கும் இதே அளவில் பாதிக்கப்படுமா அல்லது ஒரு வலுவான, தற்சார்பு கொண்ட பொருளாதாரமாக உருவெடுக்குமா என்பதைத் தீர்மானிக்கும். இறக்குமதி செய்யப்படும் எரிவாயு மீதான மோகத்தைக் குறைத்து, சூரியன் மற்றும் காற்று போன்ற இயற்கை வளங்களை நோக்கி நகர்வதே இந்த நெருக்கடி வழங்கியுள்ள ஆகச்சிறந்த தீர்வாகும். எரிசக்திப் பாதுகாப்பு என்பது ஒப்பந்தக் காகிதங்களில் இல்லை, அது ஒரு தேசத்தின் சொந்த மண்ணில் உற்பத்தியாகும் மின்சாரத்திலேயே உள்ளது என்பதை 2026 நெருக்கடி மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.