;
Athirady Tamil News

வீழ்ச்சியின் விளிம்பிலிருந்து மீண்டெழும் பொருளாதாரம்!

0

ஒரு காலத்தில் எரிபொருளுக்காக கிலோமீட்டர்கள் நீளமான வரிசைகளில் நின்ற நாடாக உலக ஊடகங்களில் சித்தரிக்கப்பட்ட இலங்கை, இன்று வேறொரு காரணத்திற்காக சர்வதேச நிதி உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. சர்வதேச நிதி தரவு பகுப்பாய்வு நிறுவனமான Bloomberg வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, இலங்கை ரூபாய் மிகக் குறுகிய காலத்தில் ஆசியாவின் வலுவான நாணயங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் ரூபாயின் மதிப்பு சில நாட்களுக்குள் சுமார் 3 சதவீதம் வரை உயர்ந்திருப்பது கடந்த மூன்று ஆண்டுகளில் பதிவான மிகப்பெரிய முன்னேற்றங்களில் ஒன்றாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது வெறும் நாணய மதிப்பெழுச்சி பற்றிய செய்தி மட்டுமல்ல. இலங்கை அரசியல், பொருளாதாரம் மற்றும் ஆட்சிக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை உலக நிதிச் சந்தைகள் எவ்வாறு வாசிக்கத் தொடங்கியுள்ளன என்பதற்கான முக்கிய அறிகுறியாகும்.

2022 ஆம் ஆண்டு இலங்கை எதிர்கொண்ட டொலர் நெருக்கடி இயற்கையாக உருவான பொருளாதார சரிவு அல்லவென்பதை நாம் அறிவோம். அது நீண்டகாலமாக நிலவிவந்த தவறான பொருளாதார கொள்கை மற்றும் முகாமைத்துவம், குடும்ப ஆட்சி, ஊழல் மோசடி, வரிவிலக்கு என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட வரிக்கொள்ளை அரசியல், திட்டமிடப்படாத கடன் பொருளாதாரம் மற்றும் தான்தோன்றித்தனமான அதிகார மையப்படுத்தலின் நேரடி விளைவாக உருவான பேரழிவாகும்.

அக்காலத்தில் ஆட்சியில் இருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ மற்றும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸவை உள்ளிட்ட ராஜபக்ஷ குடும்ப ஆட்சி, நாட்டின் பொருளாதாரத்தை உற்பத்தி வளர்ச்சியின் அடிப்படையில் அல்லாது கடன், கமிஷன் மற்றும் ஒப்பந்த பொருளாதாரத்தை சார்ந்து முன்னெடுத்து சென்றது. 2019 ஆம் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட பாரிய வரிக் குறைப்புகள் அரசின் வருவாய் அடித்தளத்தையே சிதைத்தன. அதேவேளை, கொவிட் தொற்றால் சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு தொழிலாளர் பணப்பரிமாற்றங்கள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன. இதன் பின்னர் அறிவியல் அடிப்படையற்ற உர இறக்குமதி தடை போன்ற திடீர் முடிவுகள் கமத்தொழில் உற்பத்தியையே பாதித்தன. இறுதியில் எரிபொருள், மருந்து மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கே நாட்டிடம் டொலர் இல்லாத நிலை ஏற்பட்டது. அதாவது, டொலர் கையிருப்பும் ரூபாயின் பெறுமதியும் சரிந்தன.

அந்த நேரத்தில் அரசாங்கம் நெருக்கடியை ஏற்றுக்கொண்டு கட்டுப்படுத்த முயற்சிக்கவில்லை. மாறாக, நிலைமையை மறைக்கும் அரசியல் பிரசாரங்களும் தற்காலிக செயற்கை நாணய கட்டுப்பாடுகளும் முன்னிலைப்படுத்தப்பட்டன. வெளிநாட்டு கையிருப்புகள் வேகமாக சரிந்தபோதும், ஆட்சியாளர்கள் பொருளாதார நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவே மக்களிடம் கூறிக் கொண்டிருந்தனர். இறுதியில் 2022 ஏப்ரலில் இலங்கை தனது வெளிநாட்டு கடன் திருப்பிச் செலுத்துதலை இடைநிறுத்தியதாக அறிவிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. அது வெறும் பொருளாதார நெருக்கடி கிடையாது. அரசின் மீதான மக்களின் நம்பிக்கை முற்றாக உடைந்த தருணமாக அது அமைந்தது.

இந்த நெருக்கடிக்குப் பின்னர் நாட்டில் மிக முக்கியமாக எழுந்த கேள்வி “இந்த பொருளாதார அழிவுக்கு பொறுப்பு யார்?” என்பதாகும். இலங்கையின் உயர்நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பில், நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தடுக்கத் தவறிய முன்னாள் ஆட்சியாளர்கள் மற்றும் உயரதிகாரிகள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாகக் குறிப்பிடப்பட்டது. அந்த வழக்கில் கோட்டாபய ராஜபக்ஷ, மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோரின் அரசியல் மற்றும் பொருளாதார முடிவுகள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. அதன் பின்னர் “பொருளாதார குற்றவாளிகள்” என்ற சொல் இலங்கை அரசியல் உரையாடலின் மையமாக மாறியது. நாட்டை திட்டமிட்ட தவறான கொள்கைகளால் வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் வரலாற்றின் முன் பொறுப்பேற்க வேண்டியவர்கள் என்ற சமூக மனநிலை உருவானது.

இன்றைய நிலைமை 2022 ஆம் ஆண்டின் சூழ்நிலையிலிருந்து முற்றிலும் வேறுபட்டுள்ளது. அதாவது, உலகளாவிய அழுத்தங்கள் இன்னும் தொடர்கின்றன. குறிப்பாக மத்திய கிழக்கில் உருவாகியுள்ள பொருளாதார பதற்ற நிலை, வளைகுடா பிராந்தியத்தில் அதிகரித்து வரும் போர் அபாயம், உலக எரிபொருள் விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு மற்றும் கடற் போக்குவரத்து தடைகள் போன்றவை வளர்ந்துவரும் இலங்கையின் பொருளாதாரத்திற்கு இன்னமும் பெரும் சவாவ்களாகவே உள்ளன. எனினும், இந்த நெருக்கடியை எதிர்கொள்ள இலங்கை தயாராகவே இருக்கிறது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தற்போதைய அரசாங்கம் அந்நிய செலாவணி முகாமைத்துவம், வரி வருவாய் விரிவாக்கம், அரச செலவுக் கட்டுப்பாடு, ஊழல் கண்காணிப்பு மற்றும் சர்வதேச நிதி அமைப்புகளுடனான ஒத்துழைப்பு போன்ற துறைகளில் முந்தைய ஆட்சியிலிருந்து மாறுபட்ட அணுகுமுறையை ஒழுங்கமைந்த முறையில் முன்னெடுத்து வருகிறது.

சர்வதேச நாணய நிதியத் திட்டம் தொடர்பாக சர்வதேச மட்டத்தில் உருவாகியுள்ள நம்பிக்கை, கடன் மறுசீரமைப்பு செயல்முறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடையே உருவாகியுள்ள நம்பிக்கை ஆகியவை டொலர் வருகையை நிலைப்படுத்தியுள்ளன. சுற்றுலாத்துறை மீளுருவாக்கம், வெளிநாட்டு தொழிலாளர் பணப்பரிமாற்றங்களின் அதிகரிப்பு மற்றும் ஏற்றுமதி வருவாய்களின் மீட்பு ஆகியனவும் தற்போதைய நிலைமையில் முக்கிய பங்காற்றுகின்றன. இதனால்தான் மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரித்திருந்தபோதும், உலக சந்தைகளில் எரிபொருள் விலை மாற்றங்கள் ஏற்பட்டிருந்தபோதும், ஒருகாலத்தில் கடுமையாக வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாய் எதிர்பாராத வகையில் தற்போது வலுவடைந்துள்ளது. Bloomberg போன்ற சர்வதேச நிதி நிறுவனங்கள் இதனை கவனிப்பது, இலங்கை மீதான உலக நிதிச் சந்தைகளின் பார்வையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதற்கான அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.

அதேவேளை, ரூபாய் வலுப்பெறுவது மட்டுமே முழுமையான வெற்றியின் அடையாளம் அல்ல என்பதையும் மறந்துவிட முடியாது. மிக வேகமாக நாணய மதிப்பு உயர்வது ஏற்றுமதி துறைக்கு சவால்களை ஏற்படுத்தக்கூடும். ஆனால், ரூபாவின் மதிப்பு மெதுமெதுவாக உயர்ந்து வருவது ஆரோக்கியமானதாகும். திடீர் மதிப்பு உயர்வும் எதிர்பாராத பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்திவிடும் என்பதையும் கருத்திற்கொள்வோம்.

2022 ஆம் ஆண்டு டொலர் நெருக்கடியின்போது, இலங்கையில் குடும்ப ஆதிக்கத்தின் கீழ் கண்கட்டுவித்தை அரசியலும் தற்காலிக போலி பொருளாதார பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. ஆனால், தற்போது பொருளாதாரத்தை முறையான தரவுகளின் அடிப்படையில் மக்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு நிர்வகிக்க வேண்டும் என்ற கொள்கை அரசியல் மையத்துக்குள் வந்துள்ளது. அதாவது, உலக சந்தைகளின் எச்சரிக்கைகளையும் சர்வதேச நிதி அமைப்புகளின் நிபந்தனைகளையும் கருத்திற்கொண்டு நெருக்கடிகளை முகாமைத்துவம் செய்து முன்னேறுகின்ற நிலைமை நாட்டில் உருவாகியுள்ளது.

ஆகவே, Bloomberg வெளியிட்ட இந்த அறிக்கை வெறும் நாணயச் செய்தி மாத்திரமல்ல, அது உலக முதலீட்டு சமூகத்துக்கான ஒரு அரசியல் பொருளாதாரச் சமிக்ஞையாகும். “இலங்கை முற்றிலும் சரிந்து போகவில்லை; மீண்டெழுகிறது” என்பதையே அது வெளிப்படுத்துகிறது. 2022 ஆம் ஆண்டு டொலர் இல்லாமல் திணறிய நாடு, 2026 ஆம் ஆண்டில் தனது நாணயத்தின் மீதான சர்வதேச நம்பிக்கையை மீண்டும் உருவாக்கத் தொடங்கியுள்ளது.

அந்தப் பயணம் இன்னும் முடிவடையவில்லை. ஆனால் இந்த முறை இலங்கை வீழ்ச்சியின் விளிம்பிலிருந்து அல்ல, கடந்த தவறுகளின் கடுமையான அனுபவத்திலிருந்து முன்னேற முயற்சிக்கிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.