;
Athirady Tamil News

நெறிப்படுத்தப்படாத அரசியல்

0

இலங்கையில் அரசியல் கட்சிகளின் போக்குகள், ‘நெறிப்படுத்தப்படாமல்’ தன்பாட்டில் போகின்ற கலாசாரத்தையே தொடர்ச்சியாகக் காண்கின்றோம்.

ஒவ்வொரு கட்சியின் உறுப்பினர்களும் அதன் ஆதரவாளர்களும், ‘அக்கட்சி சரியானது’ என்று கண்மூடித்தனமாக நம்புவதாலும், தவறுகளைத் தட்டிக்கேட்டு, அழுத்தம் கொடுத்து நெறிப்படுத்தாத காரணத்தினாலும், தமது பாதை சரி என்ற தோரணையில் அரசியல் கட்சிகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன.

கடந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி, ஆளுங்கட்சிகளும் எதிர்க்கட்சிகளும் முறையாக மக்களால் நெறிப்படுத்தப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். பெரும்பான்மைக் கட்சிகளைப் பௌத்த பீடங்களும், சிங்கள மக்களிடையே உள்ள அழுத்தக் குழுக்களும் சில பொழுதுகளில் இழுத்துப் பிடித்தாலும், அந்த முயற்சியின் வெற்றி என்பது நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்குப் பிறகே சாத்தியமாகின்றது.

சிறுபான்மைக் கட்சிகளிலும் இந்த நிலைமை உள்ளது. தமிழர் அரசியலில் இந்த கையறுநிலை மிகக் சற்றுக் குறைவாகும். ஏதோ ஓர் ஆயுத இயக்கமோ, வெளிநாட்டுச் சக்தியோ, புலம்பெயர் சமூகமோ, செயற்பாட்டாளர்களோ தமிழ் மக்களுக்கான அரசியலை நெறிப்படுத்தும் நகர்வுகளைச் செய்கின்றார்கள்.

அண்மைக்காலத்தில் எல்லாக் தமிழ்க் கட்சிகளின் விடயத்திலும், தமிழ் அழுத்தக் குழுக்களின் செயற்பாடுகள் பலிக்கவில்லை, வெற்றியளிக்கவில்லை என்றாலும், கொஞ்சமாவது தமிழர் அரசியல் நெறிப்படுத்தப்படுகின்றது எனலாம்.

முஸ்லிம் மக்களை மையப்படுத்திய அரசியலில், இந்த நெறிப்படுத்தப்படாத தன்மை மிக அதிகமாகும். முஸ்லிம் அரசியலை நெறிப்படுத்துவதற்கான எந்த ஏற்பாடுகளும் முஸ்லிம் சமூகக் கட்டமைப்பிற்குள் இல்லை. குறிப்பாக, சமூக நலனை மட்டும் இலக்காகக் கொண்ட காத்திரமான ஓர் ‘அழுத்தக் குழு’ (Pressure Group) கிடையாது.

ஒரு சமூகத்தின் இலக்குகளை நோக்கி அச்சமூகத்தின் அரசியல்வாதிகளைத் திசைமுகப்படுத்தாமல் வாழாவிருந்து விட்டு, அவர்களைச் சரியான வழித்தடத்தில் வழிநடத்துவதில் பராமுகம் காட்டிவிட்டு, ‘அவர்கள் சரியில்லை’ என்று மட்டும் கூறிக்கொண்டிருக்கின்றது முஸ்லிம் சமூகம்.

இலங்கைச் சூழலில், அரசியல்வாதிகளின் மூக்கணாங்கயிறுகளைப் பிடித்து வழிநடத்துவதற்கான ஏற்பாடுகள் இல்லாத ஒரேயொரு சமூகம் முஸ்லிம்கள் என்றுதான் சொல்ல வேண்டும். சிங்கள, தமிழ் சமூகத்தின் மத்தியில் மட்டுமன்றி, கத்தோலிக்க சமூகத்திற்குள்ளும் இவ்வாறான ஏற்பாடுகள் ஓரளவுக்கு உள்ளன.

நெறிப்படுத்தும் தரப்பு அல்லது அழுத்தக் குழு என்பதன் அர்த்தத்தைச் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டியுள்ளது. இது ஆயுத இயக்கமோ, சண்டியர்களின் கூடாரமோ அல்லது வன்முறைக் குழுவோ அல்ல. இது சமூகம் பற்றிச் சிந்தித்துச் செயற்படுகின்ற பலமான செயற்பாட்டாளர்களை உள்ளடக்கிய ஒரு கட்டமைப்பாகும்.

அதாவது, அரசியலுக்கு வெளியில் இருந்து கொண்டு எவ்வித உள்நோக்கங்களோ, அரசியல்சார் எதிர்பார்ப்புகளோ இல்லாமல், சமூகத்திற்கான இலக்குகளை நோக்கி அரசியல் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளை வழிநடத்துவதற்கான வெளிப்புற மக்கள் பிரிவை இது குறிக்கின்றது.

புத்திஜீவிகள், பல்கலைக்கழக மாணவர்கள், சமயத் தலைவர்கள், சமூக அமைப்புகள், மூத்த அரசியல்வாதிகள், சமூக நலன்விரும்பிகள், தொழில்சார் வல்லுநர்கள், வெளிநாட்டில் உள்ள அச்சமூகத்தின் ஒரு பிரிவினர், ஊடகச் செயற்பாட்டாளர்கள், ஏன் – வாக்களித்த மக்கள் கூட ஓர் அழுத்தக் குழுவாக இருக்க முடியும்.

சமூகத்திற்கான அரசியல் இலக்கை நிர்ணயித்தல், அரசியல்வாதிகளுக்கு அறிவுரை கூறுதல், அவர்களது போக்கைக் கண்காணித்தல், தவறுகளைத் தட்டிக்கேட்டல், தேவையான போது அவர்களது முன்னெடுப்புகளுக்குத் துணைநிற்றல், சமூக நலனுக்காக ஆற்ற வேண்டிய பணிகளைத் தொடராகக் கண்காணிப்பதுடன், அதிலிருந்து விலகிச் செல்லாத விதத்தில் வெளியில் இருந்து அழுத்தத்தைக் கொடுத்துக் கொண்டே இருத்தல் என இக்குழுவின் செயற்பாடுகள் அமையலாம்.

அந்த வகையில், தமிழ் சமூகத்திற்குள் ஏதோ ஒரு வகையிலான அழுத்தக் குழு எப்போதும் இருந்தே வருகின்றது. மூத்த தமிழ் அரசியல் சிந்தனையாளர்களுக்கு இதில் முக்கிய இடமுள்ளது. அதற்குப் பிறகு, பிரதான தமிழ் ஆயுத இயக்கமும் ‘பயத்தின்’ ஊடாக அரசியல்வாதிகள் மீது ஓர் அழுத்தத்தை எப்போதும் பிரயோகித்து வந்துள்ளது எனலாம்.

இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கிழக்குப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கல்விச் சமூகங்கள் தமிழ் மக்களுக்கான அரசியலை வழிப்படுத்துகின்றன; அரசியல்வாதிகளிடம் கேள்வி எழுப்புகின்றன. அதேபோல தமிழ் டயஸ்போரா எனப்படும் புலம்பெயர் சமூகம் உள்ளிட்ட பல தரப்பும், சரி, பிழைகளுக்கு அப்பால் ஏதோ ஒரு விதத்தில் அழுத்தக் குழுக்களாகவே செயற்பட்டு வருகின்றன.

பெரும்பான்மைச் சமூகத்தில் – பௌத்த பீடங்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஏன் சில பொழுதுகளில் கடும்போக்குச் சக்திகள் கூடச் சிங்கள மக்களுக்கான அரசியலின் அழுத்தக் குழுக்களாகவே செயற்படுவதாக நாம் எடுத்துக் கொள்ளலாம்.

முஸ்லிம் சமூகத்திற்குள் மட்டும் இப்படியான எந்தக் கட்டமைப்புகளும் இல்லை என்பதுதான் கசப்பான யதார்த்தமாகும். உருப்படியான, அரசியல் சார்பற்ற, உள்நோக்கமற்ற செயற்பாட்டாளர்களின் குழுவொன்று முஸ்லிம் அரசியலின் மீதான அழுத்தக் குழுவாக இதுவரை பரிணமிக்கவில்லை.

அழுத்தக் குழு பெயரைச் சொல்லிக் கொண்டு உருவான செயற்பாட்டாளர்களின் கூட்டு எல்லாம், மிகக் குறுகிய காலத்திற்குள் புஸ்வாணமாகிப் போன கதைகள் ஏராளம் உள்ளன. ‘கிழக்கின் எழுச்சி’ தொடக்கம் பல உதாரணங்களைச் சொல்லலாம்.

இதேவேளை, அழுத்தக் குழு என்ற தோரணையில் உருவான பல அமைப்புகள், காலவோட்டத்தில் ஒரு முஸ்லிம் கட்சிக்கு அல்லது தலைவருக்கு வக்காளத்து வாங்குகின்ற வேலையைச் செய்ததன் மூலம் தமது கௌரவத்தைக் குறைத்துக் கொண்டன.

இன்னும் சில தரப்பினர், இந்த அடையாளத்துடன் ஆரம்பித்து, அதனைப் பயன்படுத்தியே ஏதாவது ஓர் அரசியல் சகதிக்குள் சங்கமித்து விடுவதைக் காண்கின்றோம்.

அதைவிடுத்து அரசியல் சுயலாப நோக்கமோ, சமூகங்களுக்கு இடையில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கமோ இல்லாத, நிலைபேறான, தூரநோக்கான ஓர் அழுத்தக் குழு முஸ்லிம் சமூகத்திற்குள் இல்லை. ஆனால் அதற்கு மாறாக, ‘கூஜா’ தூக்கிகளும் ‘ஜால்ரா’ குழுக்களும் உருவாகியுள்ளன. சில அரசியல்வாதிகளே ஏதாவது ஒரு பெயரில் ஒரு சிலரை ஒன்றுசேர்த்து, அதன்மூலம் தமது காரியங்களைச் சாதித்துக் கொள்கின்றமை கண்கூடு.

இலங்கை முஸ்லிம்களின் அரசியல் எவ்வாறு கெட்டுக் குட்டிச்சுவராகிப் போயுள்ளது என்பதையும், எந்தளவுக்குத் தறிகெட்டு ஓடுகின்றது என்பதையும் நாம் நன்கு அறிவோம். ஆனால், முஸ்லிம் சமೂகம் இந்த அரசியலைச் சரியாக வழிப்படுத்தவும் இல்லை; அரசியல் தவறுகளைத் தட்டிக் கேட்கவும் இல்லை.

விரல்விட்டு எண்ணக்கூடிய சில முஸ்லிம் சமூகச் சிந்தனையாளர்கள், செயற்பாட்டாளர்கள் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பதை மறுக்கவில்லை. ஆனால் அது தொடரான, ஒரு கட்டமைக்கப்பட்ட இலக்கை நோக்கிய, அதேநேரம் பல தரப்பையும் உள்வாங்கிய ஒரு செயற்பாட்டுத் தளமாக இயங்கவில்லை என்பது கவனிப்பிற்குரியது.

தமிழ்த் தேசிய அரசியலை வழிநடத்துவதில் இரு பல்கலைக்கழகங்கள் பங்காற்றுகின்றன. அப்படியான கனவுடனும்தான் மர்ஹூம் அஷ்ரப் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை நிறுவினார். ஆயினும், அது முஸ்லிம் அரசியலை நெறிப்படுத்துவதற்கான ஒரு மறைமுக அழுத்தக் குழுவாகச் செயற்படவோ அல்லது குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய வகிபாகம் ஒன்றை எடுக்கவோ தவறிவிட்டது என்பது கவலைக்குரியது.

அதேபோல், தலைப்பிறை பார்ப்பதற்காக ஒன்றுகூடும் முஸ்லிம் அமைப்புகளின் பட்டியல் நீளமானது. ஆனால், ஜம்மியத்துல் உலமா சபையோ அல்லது ஏனைய முஸ்லிம் அமைப்புகளோ முஸ்லிம் அரசியல்வாதிகளின் தவறுகளைப் பொதுவெளியில் கேள்விக்குட்படுத்துவதன் மூலம் வழிப்படுத்தத் தவறிவிட்டன. ஒவ்வொரு ஊரிலும் உள்ள பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கும் இதில் பங்குள்ளது.

இதேவேளை, முஸ்லிம்கள் பல நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்கின்ற போதிலும், டயஸ்போரா சமூகம் சரிவரக் கட்டமைக்கப்படவும் இல்லை. உள்நாட்டு அரசியலில் செல்வாக்குச் செலுத்தக் கூடிய அல்லது (தமிழ் டயஸ்போராவைப் போல) முஸ்லிம் அரசியல்வாதிகளுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய ஒரு குழுவாக அவர்கள் தம்மைப் புடம்போட்டுக் கொண்டதாகவும் தெரியவில்லை.

ஆக மொத்தத்தில், முஸ்லிம் அரசியலை வழிப்படுத்துவதற்கு எந்த அடிப்படையிலான ஓர் அழுத்தக் குழுவும் ஏற்பாடும் இல்லாது போயிருக்கின்றது. முஸ்லிம் புத்திஜீவிகள், கல்விச் சமூகம், சமயத் தலைவர்கள், சமூக அமைப்புகள், குறிப்பாக அரசியல் செயற்பாட்டாளர்கள், சில ஊடகவியலாளர்கள், நலன்விரும்பிகள், வியாபார சமூகம் என எல்லா மட்டத்திலும் உள்ளவர்கள் இதற்குப் பொறுப்புக்கூற வேண்டும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.