;
Athirady Tamil News

இளைஞர்களை அடிமையாக்கும் இணையத் தொடர்கள்?

0

இன்றைய டிஜிட்டல் உலகில் இளைஞர் யுவதிகளின் பொழுதுபோக்கு வேகமாக மாற்றமடைந்து வருகின்றது. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்வையிட்ட காலம் மாறி, தமக்குப் பிடித்த திரைப்படத் தொடர்கள் மற்றும் இணையத்தின் ஊடாக வெளியிடப்படும் தொடர்கதைகள் அதாவது வெப் சீரிஸ் (web series) களை விரும்பிய நேரத்தில் கையடக்கத் தொலைபேசியின் ஊடாக பார்க்கும் காலம் உருவாகியுள்ளது. நெட்ப்ளிக்ஸ், அமேசன் ப்ரைம் வீடியோஸ் போன்ற பல தளங்களின் வளர்ச்சியுடன் இணையத் தொடர் கதைகள் இளைஞர் யுவதிகளின் அன்றாட வாழ்வில் ஒரு பகுதியாக மாறியுள்ளன. இதன் மூலம் பல தொடர்களை ஒரே நேரத்தில் மற்றும் ஒரே இடத்தில் இருந்தபடியே தொடர்ந்து விடாமல் பார்க்கும் பழக்கமும் அதிகரித்துள்ளது. இணையத் தொடர்கதைகள் இளைஞர் யுவதிகளிடம் அதிக வரவேற்புப் பெறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. முதற்காரணமாக கதைக்களம் சுவாரஸ்யமாகவும் தொடர்ச்சியாக எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்டிருப்பதாகும். ஒரு தொடர் முடிவடையும்போது அடுத்த தொடரில் என்ன நடக்கும் என்ற ஆர்வம் பார்வையாளர்களை தொடர்ந்து பார்க்கத் தூண்டுகிறது. அதேபோல் காதல், நகைச்சுவை, மர்மம், குற்றப் புனைவு, திகில், குடும்பம் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கை போன்று பல வகையான கதைகளை உள்ளடக்கியதாக இணையத் தொடர்கதைகள் காணப்படுகின்றன. இதனால் ஒவ்வொருவரும் தமக்கு பிடித்த தொடர்கதையை தேர்ந்தெடுக்கின்றனர். மேலும் எப்போதும் எங்கும் பார்க்கக் கூடியதாக இருப்பதினால் இளைஞர் யுவதிகளின் ஈர்ப்பை அதிகரிக்கிறது.

படிக்கச் செல்லும்போதும், ஓய்வு நேரத்திலும் மற்றும் இரவு நேரங்களிலும் கூட கையடக்கத் தொலைபேசி மூலம் இணையத் தொடர்கதைகளை பார்க்க முடிகிறது. பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்ந்து விடாமல் பார்க்கும் அளவிற்கு எளிதாக அணுகவும், சமூகத் தொடர்பு மற்றும் நிஜ உலக வாழ்க்கையிலிருந்து விலகும் ஆர்வம் போன்றவை போன்றவை அதற்கான காரணங்களாக இருக்கின்றன என ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. இணையத் தொடர்கதையை பார்ப்பது அடிமைத்தனம் எனக் கூற முடியாது. அளவோடு பார்க்கப்படும் நிலையில் அது பொழுது போக்காகவும் ஓய்வுக்கான ஒரு வழியாகவும் இருக்கலாம். ஆனால், ஒருவர் தனது பார்வை நேரத்தைக் கட்டுப்படுத்தாது தொடர்ந்து அடுத்தடுத்த தொடர்களை பார்த்துக் கொண்டிருக்கும் நிலை உருவாகும் போது அது தீங்கினை ஏற்படுத்தும். ஒரு தொடரைப் பார்த்து விட்டு நிறுத்த வேண்டும் என நினைத்தாலும் தொடர்ந்து பார்ப்பது, இரவு நேரம் அதிகமாக விழித்திருப்பது, படிப்பு அல்லது வேலைகளைத் தள்ளிப் போடுவது, குடும்பத்தினருடன் செலவிடும் நேரம் குறைவது போன்றவை தொடர்ந்தும் அதிகப்படியாக பார்வையிடுவதன் அறிகுறிகளாக இருக்கலாம்.

2021-ஆம் ஆண்டு Addictive Behaviors Reports ஆய்விதழில் வெளியூறான ஓர் ஆய்வறிக்கை, நேரடி ஒளிபரப்புச் சேவைகளைப் (Live Streaming Services) பயன்படுத்தும் 415 பயனர்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டது. அதன்படி, தொடர்களைத் தொடர்ந்து இடைவெளியின்றிப் பார்ப்பது (Binge-watching) மட்டுமே தீங்கானது அல்ல என்றும், மாறாக அடிக்கடி பார்க்கும் பழக்கமும், அதற்கான பின்னணிக் காரணங்களும் இணையும்போதே அது ஒரு தீவிரமான பழக்கமாக மாறுகிறது என்றும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், இளைஞர்கள் தொடர்களைப் பார்ப்பது வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமன்றி, மன அழுத்தம், தனிமை உணர்வு ஆகியவற்றில் இருந்து விடுபடவும், ஓய்வு நேரத்தைப் போக்குவதற்காகவுமே ஆகும் என்பதும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் எவ்வளவு நேரம் பார்க்கிறார்கள்? என்ற கேள்வியோடு ஏன் பார்க்கிறார்கள்? என்ற கேள்வியும் முக்கியம் பெறுகிறது. இணையத் தொடர்கதைகளின் தாக்கமானது சாதகமாகவும் பாதகமானதாகவும் இருக்கலாம். நல்ல உள்ளடக்கம், புதிய தகவல்களை அறிதல், மொழித்திறனை வளர்த்தல், சமூகப் பிரச்சினை குறித்து சிந்தித்தல் என்பனவற்றுக்கு உதவுகின்றன. அதே சந்தர்ப்பத்தில் சில இணையத் தொடர்கதைகள் வரலாறு, கலாசாரம், சமூகப் பிரச்சினைகள் மற்றும் மனித உறவுகள் பற்றிய புரிதலையும் ஏற்படுத்துகின்றன. இவ்வாறு இருப்பினும் மறுபுறம், அளவுக்கு அதிகமாக பார்ப்பது பிரச்சினைக்குரியதாகும்.

குறிப்பாக ஓய்வு நேரத்தில் தொடர்ந்து பார்ப்பது தூக்க நேரத்தை குறைக்கலாம். படிப்பு, வேலை, குடும்ப உறவுகள் மற்றும் சமூகச் செயற்பாடுகளுக்கு ஒதுக்கப்படும் நேரமும் பாதிக்கப்படும். 2026 ஆம் ஆண்டு வெளியான இளைஞர்களிடையேயான தொடர்ந்து விடாமல் பார்த்தல் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு நடத்தை சார்ந்த ஆபத்துக் காரணிகள் மற்றும் பாலின வேறுபாடுகள் பற்றிய ஆய்வில்

14 – 18 வயதுடைய 940 ஸ்பானிய இளைஞர்களிடையே தொடர்ந்து இணையத் தொடர் கதைகளை பார்ப்பதன் சில பரிமாணங்களாக அடிமையாதல் மற்றும் கட்டுப்பாட்டை இழத்தல் ஆகியவை சில ஆபத்தான நடத்தை பண்புகளுடன் தொடர்புடையதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இது இணையத் தொடர்கதைகளைத் தொடர்ந்து பார்ப்பதன் தொடர்பைக் காட்டும் ஆய்வு என்பதால், நேரடியாக அந்த நடத்தைகளுக்கு காரணம் என முடிவு செய்ய முடியாது. இணையத் தொடர்கதைகளை முழுமையாக பார்க்காமல் விடுவது என்பது தீர்வாக இருக்காது. அதற்குப் பதிலாக அவற்றைப் பார்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குவது பயனுள்ளதாக இருக்கும் படிப்பு, வேலை, தூக்கம், உடற்பயிற்சி மற்றும் குடும்பத்துடன் செலவிடும் நேரம் ஆகியவற்றுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

ஒரு தொடர் முடிந்ததும் தானாக அடுத்தடுத்த தொடர்கள் தொடங்கும் வசதியைத் தவிர்த்து, இரவு நேரங்களில் கைத்தொலைபேசி பயன்படுத்துவதை குறைப்பது, திரை நேரத்தை கண்காணிப்பது போன்ற செயற்பாடுகள் கட்டுப்பாட்டை வளர்க்க உதவும். இணையத் தொடர்கதைகள் என்பது இன்றைய இளைஞர்களின் பொழுதுபோக்கு உலகில் முக்கிய இடத்தை பெறுகிறது. அதன் சுவாரஸ்யமான கதைகள், உள்ளடக்கம், ஈர்க்கும் விதமான கதைகளம் ஆகியவை இளைஞர்களை அதிகமாக ஈர்க்கின்றன. அதனால், ஈர்ப்பு என்பது அடிமைத்தனம் அல்ல. கட்டுப்பாட்டை இழக்கும் அளவுக்கு மாறுவதுதான் அடிமைத்தனமாகும். அவற்றைப் பார்ப்பதை இடைநிறுத்தாது எல்லாவற்றுக்கும் நேரத்தை ஒதுக்கிச் செயற்படுவது பயனுள்ளதாக அமையும்.


You might also like

Leave A Reply

Your email address will not be published.