கல்லுண்டாய் மக்களின் கைவிடப்பட்ட கனவுகள்!
எல்லோருக்கும் வாழ்க்கை ஒரேமாதிரியாக அமைவதில்லை என்பது மறுக்கமுடியாத உண்மை. சிலருக்கு நிறைவாக எல்லாம் அமைந்த போதிலும் அதனை வைத்து எவ்வாறு வாழவேண்டும்? என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை. சிலருக்கு எதுவுமே இல்லாத போதிலும் ஏதோ ஒரு நிறைவுடன் சமாளித்துக் கொண்டு வாழக் கற்றுக்கொண்டுள்ளார்கள். இன்றைய காலச்சூழலில் எல்லாமே சரியாக அமைந்திருக்கின்றது என்று முற்று முழுதாக எதையுமே ஒப்புக்கொண்டு விட முடியாது. பல்வேறுபட்ட சூழல் சார் பிரச்சினைகள் காலப்போக்கில் மக்களை வாட்டி வதைக்கும் பிரச்சினைகளாக உருமாறுவதனையும் நன்கு அவதானிக்க முடிகின்றது. அவ்வாறு பல இன்னல்களுக்குள்ளும் வாழ்க்கையை வாழவேண்டுமென்ற கட்டாயத்தின் கீழ் யாழ். மாவட்டத்தின் கல்லுண்டாய்ப் பிரதேசத்தில் கடந்த 8 வருடகாலமாக ‘நூறு வீட்டுத்திட்டம்’ என்ற பெயரில் குடியமர்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.
மயானத்துக்கும், குப்பை மேட்டுக்கும் இடைப்பட்ட பகுதியிலேயே இவர்களின் அமைவிடம் அமையப் பெற்றுள்ளது. ஆரம்பத்தில் 100 குடும்பங்களைக் கொண்டதாக அமைந்த கல்லுண்டாய்ப் பிரதேசம் தற்பொழுது 80 குடும்பங்களை உள்ளடக்கியதாகவே காணப்படுகின்றது. சுட்டெரிக்கும் வெயில் காலத்திலும், மழைக் காலத்திலும் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் தம் வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் வரிசையில் குடிநீர்த் தட்டுப்பாடு, போதிய கல்வி வசதியின்மை, மலசல கூட வசதியின்மை, போக்குவரத்து வசதியின்மை. வேலைவாய்ப்பின்மை போன்ற பல பிரச்சினைகளைக் குறிப்பிட முடியும்.
தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள், மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சின் நிதியுதவியுடன், உள்ளூரில் இடம்பெயர்ந்தோர் மற்றும் இந்தியாவிலிருந்து மீளத்திரும்பியோருக்காக இவ்வீட்டுத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி கையளிக்கப்பட்ட 78 வீடுகளில், 17 வீடுகள் முற்றாகக் கைவிடப்பட்டுப் பயன்பாடற்ற நிலையில் காணப்படுவதாகச் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
வீடுகள் வழங்கப்பட்டும் மக்கள் அங்கு தொடர்ந்து வாழ முடியாத நிலை ஏற்பட்டிருப்பது, இத்திட்டத்தின் நடைமுறைச் சவால்களை வெளிப்படுத்துகின்றது. குடியிருப்புக்கு அருகிலுள்ள மயானம், குப்பைமேடு, வெள்ளப் பிரச்சினை மற்றும் அடிப்படை வசதிகளின் குறைபாடுகள் மக்களின் வெளியேற்றத்துக்கான முக்கிய காரணங்களாகக் காணப்படுகின்றன.
இது தொடர்பாக நவாலி தெற்கு அபிவிருத்தி உத்தியோகத்தர் தெரிவிக்கையில், “அருகில் இருக்கின்ற சுடலையில் சடலங்கள் எரிக்கப்படுவதையும், அதிலிருந்து வரும் புகை மற்றும் துர்நாற்றத்தையும் குடியிருப்பிலிருந்து உணரக்கூடியதாக இருக்கின்றது. மழைக்கால வெள்ளமும் மக்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகின்றது. வெவ்வேறு கிராமங்களிலிருந்து வந்த குடும்பங்களுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகளும் சிலர் வீடுகளை விட்டு வெளியேறுவதற்குக் காரணமாகின்றன” எனத் தெரிவித்தார்.
மேலும், குடியிருப்புத் திட்டத்தை மக்களிடம் கையளிப்பதற்கு முன்னர் முழுமையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மழைக்காலங்களில் வீடுகளைச் சுற்றி வெள்ளநீர் தேங்குவதுடன், வீதிகள் சீரமைக்கப்படாமையால் போக்குவரத்தும் பாதிக்கப்படுகின்றது. இதனால் சில குடும்பங்கள் தமது சொந்த வீடுகளை விட்டு வெளியேறி, வாடகை வீடுகளிலும் உறவினர்களின் வீடுகளிலும் வசிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
அப்பகுதியிலிருந்து வெளியேறிய யோகராசா தமிழினி, “எங்கள் வீட்டுப் பகுதியில் தண்ணீர் தேங்குகின்றது. பள்ளமான இடங்களை மண்ணால் நிரப்புவதாகக் கூறினார்கள். ஆனால், இதுவரை நிரப்பவில்லை. தற்போது மூன்று வருடங்களாகக் குருநகரில் வாடகை வீட்டில் வசித்து வருகின்றோம்” எனத் தெரிவித்தார்.
அதேபோன்று, ஜெனிடா ராணி தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும்போது, “எங்களுடைய மலசலகூடம் உடைந்துவிட்டது. மழை பெய்தால் தண்ணீர் நிறைந்துவிடும். ‘தித்வா’ புயலின்போது அதிகளவு வெள்ளம் ஏற்பட்டதால், நானும் எனது பிள்ளையும் குருநகரில் உள்ள எனது அம்மாவின் வீட்டில் தங்கியிருக்கின்றோம். வாரத்தில் ஒருநாள் இங்கு வந்து வீட்டைச் சுத்தம் செய்துவிட்டுச் செல்கின்றோம்” எனக் குறிப்பிட்டார். குப்பைமேட்டிலிருந்து வீசும் துர்நாற்றம், ஈக்களின் பெருக்கம் மற்றும் பூச்சிகளின் தொல்லை போன்றவையும் மக்களின் சுகாதாரத்தைப் பாதிக்கின்றன. மழைக்காலங்களில் பாம்புகள் உள்ளிட்ட உயிரினங்கள் குடியிருப்புக்குள் வருவதால், சிறுவர்களின் பாதுகாப்பு குறித்த அச்சமும் அதிகரிக்கின்றது. “குப்பைமேட்டினால் துர்நாற்றமும் நோய்கள் ஏற்படும் அச்சமும் காணப்படுகின்றது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்வதிலும் போக்குவரத்திலும் சிரமங்கள் ஏற்பட்டன. இதனாலேயே நாங்கள் அங்கிருந்து வெளியேறினோம்” எனத் கல்லுண்டாயிலிருந்து வெளியேறிய பிரவுன்சன் ரேகா, தெரிவித்தார். கல்வி, குழந்தைகளின் எதிர்காலத்தை மாற்றும் செல்வமாகும். ஆனால், மழைக்கால வெள்ளத்தால் பாடசாலைப் போக்குவரத்து பாதிக்கப்படுவது அவர்களின் கல்விக்குத் தடையாகின்றது. தாம் அனுபவித்த துன்பங்களைப் பிள்ளைகள் அனுபவிக்கக்கூடாது எனப் பெற்றோர் விரும்பினாலும், அடிப்படை வசதிகளற்ற சூழல் அவர்களின் எதிர்பார்ப்புகளுக்குத் தடையாகின்றது.
கல்லுண்டாய் மக்களின் மற்றுமொரு முக்கிய பிரச்சினையாகக் குடிநீர்த் தட்டுப்பாடு காணப்படுகின்றது. அப்பகுதியில் வசிக்கும் மாலா தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகையில், “ஆரம்பத்தில் 500 லீற்றர் தண்ணீர் ஒன்றுவிட்டொருநாள் நிரப்பப்பட்டது. ஆனால், இப்போது மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் நிரப்பப்படுகின்றது. அதனைச் சமையல், குளியல், உடைகளைத் தோய்த்தல், குடித்தல் என அனைத்துத் தேவைகளுக்கும் பயன்படுத்துகின்றோம். அது எங்களுக்குப் போதுமானதாக இல்லை. வெயில் காலங்களில் மரங்களை நட்டாலும் தண்ணீர் இல்லாமல் கருகிவிடுகின்றன. நிரந்தரமாக வசிக்கும் இடத்தில்கூட நிம்மதியாக வாழ்வதற்கான வசதிகள் இல்லை” எனத் தெரிவித்தார்.
இவ்வாறான அடிப்படை வசதிக் குறைபாடுகள் மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிப்பதுடன், அவர்களின் வாழ்வாதாரத்தையும் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்குகின்றன. குறிப்பாக, போக்குவரத்துச் சிரமங்களால் சிறுவர்களின் கல்வி பாதிக்கப்படுவதுடன், சுகாதாரமற்ற சூழல் குடும்பங்களுக்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட அரசாங்கத் திணைக்களங்களும் உள்ளூராட்சி நிறுவனங்களும் இணைந்து குடிநீர் விநியோகத்தைச் சீரமைத்தல், வெள்ளநீரை வெளியேற்றுவதற்கான வடிகால் வசதிகளை ஏற்படுத்துதல், சேதமடைந்த மலசலகூடங்களைப் புனரமைத்தல், குப்பைமேட்டுப் பிரச்சினைக்குத் தீர்வுகாணுதல் மற்றும் வீதிகளைச் சீரமைத்தல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அத்துடன், மயானம் தொடர்பான சுகாதாரப் பிரச்சினைகளையும் ஆராய்ந்து உரிய தீர்வுகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
கல்லுண்டாய் மக்களுக்குத் தேவை வெறுமனே ஒரு வீடல்ல; பாதுகாப்பான குடிநீர், சுகாதாரமான சூழல், வெள்ளமற்ற பாதை, கல்விக்கான வாய்ப்பு, எல்லாவற்றுக்கும் மேலாக நிம்மதியான வாழ்க்கை. கல்லையும் கரைய வைக்கும் அவர்களின் கைவிடப்பட்ட கனவுகள் மீண்டும் துளிர்விட வேண்டுமெனில், இதுதொடர்பான அரச நிறுவனங்களும் உள்ளூராட்சி அமைப்புகளும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.