மகாராஷ்டிரத்தில் கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி
மகாராஷ்டிரத்தின் சிந்துதுர்க் மாவட்டத்தில் சுற்றுலா சென்ற இடத்தில் கடலில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகினர்.
இந்தச் சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் மும்பையில் இருந்து 490 கி.மீ தொலைவில் உள்ள ஷிரோடா-வேலாகர் கடற்கரையில் நடந்தது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எட்டு பேர் சுற்றுலா சென்றிருந்தனர்.
அவர்களில் இருவர் சிந்துதுர்க்கில் உள்ள கூடலைச் சேர்ந்தவர்கள், மேலும் ஆறு பேர் கர்நாடகத்தின் பெலகாவியில் இருந்து வந்தவர்கள். எட்டு பேரும் நீச்சல் அடித்து கடலுக்குள் சென்றிருந்தனர், ஆனால் தண்ணீரின் ஆழத்தை அளவிடத் தவறியதால் அவர்கள் விரைவில் மூழ்கத் தொடங்கினர்.
காவல்துறை மற்றும் உள்ளூர் பேரிடர் மேலாண்மை குழுக்கள் மீட்புப் பணியைத் தொடங்கி மூன்று உடல்களை மீட்டனர். மேலும் நான்கு பேர் இன்னும் காணவில்லை. 16 வயது சிறுமியை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர். மீதமுள்ள நான்கு பேரை வெள்ளிக்கிழமை மாலை வரை தேடும் பணி நடைபெற்று வந்தது.
பலியானவர்கள் ஃபரீன் இர்பான் கிட்டூர் (34), இபாத் இர்பான் கிட்டூர் (13), மற்றும் நமீரா அப்தாப் அக்தர் (16) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதேசமயம் காணாமல் போனவர்கள் இஃப்ரான் முகமது கிட்டூர் (36), இக்வான் இம்ரான் கிட்டூர் (15), ஃபர்ஹான் மணியார் (25) மற்றும் ஜாகிர் நிசார் மணியார் (13) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.