;
Athirady Tamil News

பொலனறுவை சொலொஸ்மஸ்தான புனித பூமியின் அபிவிருத்தியை துரிதப்படுத்துவதற்கு நடவடிக்கை!!

0

பொலனறுவை வரலாற்று சிறப்புமிக்க சொலொஸ்மஸ்தான புனித பூமியின் அபிவிருத்தியை துரிதப்படுத்துமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும், பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ இன்று (09) அரச அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பொலனறுவை வரலாற்று சிறப்புமிக்க சொலொஸ்மஸ்தான புனித பூமியின் அபிவிருத்தி தொடர்பில் ஆராயும் வகையில் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

சொலொஸ்மஸ்தான புனித பூமியை மின் விளக்குகளால் அலங்கரிப்பதன் அவசியத்தை அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் கண்டி வரலாற்று சிறப்புமிக்க கெடிகே ரஜமஹா விகாராதிபதி மற்றும் பொலனறுவை சொலொஸ்மஸ்தானதிபதி வணக்கத்திற்குரிய வெண்டருவே உபாலி தேரர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

அதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு இலங்கை மின்சார சபையின் தலைவர் எம்.எம்.சீ.பெர்டினான்டு அவர்களுக்கு தெரிவித்த கௌரவ பிரதமர், எதிர்வரும் ஆண்டு மே மாதம் முதல் புனித பூமியின் மின்விளக்குக்கான மின் கட்டணத்தை மத்திய கலாசார நிதியத்தில் இருந்து செலுத்துமாறு மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி ரணசிங்கவிடம் பணிப்புரை விடுத்தார்.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் கோயிலைச் சுற்றி வருவதற்கு வசதியாக புனித பூமியினுள் வீதிகளை கார்பட் செய்து அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யூ.ஆர்.பேமசிறி அவர்களுக்கு பணிப்புரை விடுத்தார்.

மனம்பிட்டிய மணல் அகழ்வின் மூலம் பொலனறுவை மாவட்ட செயலாளரின் கீழ் வரும் நிதியில் ஒரு பகுதியை புனித பூமியின் அபிவிருத்திக்காக வழங்குமாறு கௌரவ பிரதமர் இதன்போது பொலனறுவை மாவட்ட செயலாளர் டபிள்யூ.ஏ.தர்மசிறி அவர்களுக்கு தெரிவித்தார்.

புனித பூமியில் முன்னெடுக்கப்படும் கட்டுமானம் மற்றும் புனரமைப்புப் பணிகளுக்காக முப்படையினரின் ஆதரவைப் பெற்றுத்தருமாறு இதன்போது பிக்குமார் கௌரவ பிரதமரிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைத்தனர்.

எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் இது தொடர்பில் முன்வைத்து தேவையான நடவடிக்கைகள் முன்னெடுப்பதாக கௌரவ பிரதமர் தெரிவித்தார்.

எதிர்வரும் 5 ஆண்டுகளுக்காக இலங்கையின் புனித பூமியின் அபிவிருத்திக்காக 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்தியாவிடமிருந்து கிடைக்கவுள்ளமையால், அந்நிதியின் ஒரு பகுதியை சொலொஸ்மஸ்தான புனித பூமியின் அபிவிருத்திக்காக பயன்படுத்தப்படும் என பிரதமரின் செயலாளர் காமினி செனரத் அவர்கள் குறிப்பிட்டார்.

பொலனறுவை சொலொஸ்மஸ்தான புனித பூமியின் அபிவிருத்திக்கான முனைப்பு கௌரவ பிரதமர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்டதாக கௌரவ இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்க சுட்டிக்காட்டினார்.

சொலொஸ்மஸ்தான புனித பூமியில் இடம்பெறும் அபிவிருத்தி நடவடிக்கைகளை கண்காணிக்குமாறு புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன அவர்களுக்கு கௌரவ பிரதமர் பணிப்புரை விடுத்தார்.

சியம் மஹா நிகாயவின் அஸ்கிரிய பீடத்தின் அனுநாயக்கர் கண்டி வரலாற்று சிறப்புமிக்க கெடிகே ரஜமஹா விகாராதிபதி மற்றும் பொலனறுவை சொலொஸ்மஸ்தானதிபதி வணக்கத்திற்குரிய வெண்டருவே உபாலி தேரர் மற்றும் பொலனறுவை கல்விகாரை பொறுப்பதிகாரி வணக்கத்திற்குரிய கந்தநெடியே அந்ததஸ்ஸீ தேரர் ஆகியோரும் இக்கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.