தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு குறைவு – உலக சுகாதார அமைப்பு தலைமை விஞ்ஞானி தகவல்…!!!
புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது. இதன் காரணமாக பெரும்பாலான நாடுகளில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்தபடி இருக்கிறது.
குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. மிகவும் வேகமாக பரவும் தன்மை கொண்ட ஒமைக்ரான் வைரஸ் தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பு மருந்துகள் அளிக்கும் நோய் எதிர்ப்பு சக்தியில் இருந்து தப்பித்துக் கொள்கிறது என்று முதல் கட்ட ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தடுப்பூசிகள் ஒமைக்ரான் வைரசுக்கு எதிராக இன்னும் செயல்திறனுடன் உள்ளது என்று உலக சுகாதாரஅமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமி நாதன் தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் தடுப்பூசி செலுத்தியவர்களையும் ஒமைக்ரான் வைரஸ் மாறுபாடு பாதிக்கிறது. அந்த வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் இன்னும் பலன் அளிக்கின்றன. எதிர்பார்த்தபடி டி செல் நோய் எதிர்ப்பு சக்தி ஒமைக்ரானுக்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது. இது கடுமையான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.
நீங்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என்றால் தயவு செய்து தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவினாலும் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு குறைந்த பாதிப்பையே ஏற்படுத்துகிறது.
தடுப்பூசி மூலம் உருவாகும் நோய் எதிர்ப்பு சக்தி ஒமைக்ரான் மட்டுமின்றி பிற நோய்களையும் எதிர்த்து போராடுகிறது. ஒமைக்ரான் பற்றிய சான்றுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் ஒமைக்ரானால் பாதிப்பு அடைகிறார்கள். இதனால் தான் உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தீவிர சிகிச்சையின் தேவை விகிதத்தில் அதிகரிப்பு காணப்படவில்லை. இது ஒரு நல்ல அறிகுறியாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெக்ராஸ் கூறும்போது, ஒமைக்ரான் மற்றும் டெல்டா வகை கொரோனா வைரஸ்களால் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது சுகாதார கட்டமைப்பை சீர்குலைக்கும்.
ஒமைக்ரான் – டெல்டா ஒரே நேரத்தில் பரவக்கூடியதாக இருப்பதால் கொரோனா பாதிப்பு சுனாமி போல உயருகிறது என்று நான் மிகவும் கவலைப்படுகிறேன். இது சோர்வடைந்துள்ள சுகாதார பணியாளர் மற்றும் சரிவின் விளிம்பில் உள்ள சுகாதார அமைப்புகள் மீது தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும். இந்த அழுத்தம் புதிய கொரோனா வைரஸ் நோய்கள் மட்டுமல்ல. அதிக எண்ணிக்கையிலான சுகாதார ஊழியர்களும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பதற்கு காரணம் என்றார்.