;
Athirady Tamil News

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் – கஜேந்திரன்!!

0

ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் நிலையில் அரசாங்கம் பல ஏமாற்று வேலைகளை செய்வதாகவும், இதனை உணர்ந்து அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே செல்வராஜா கஜேந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் அரசியல் கைதிகள் 10 தொடக்கம் 20 வருடங்களுக்கு மேலாக சிறையில் வாடுகிறார்கள். இவர்களை விடுவிப்பதற்கு அரசாங்கத் தரப்பு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் வருகின்ற நெருக்கடிகளை தவிர்ப்பதற்கு சர்வதேசத்தை ஏமாற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இந்த பயங்கரவாத தடைச்சட்டமானது சர்வதேச நியமங்களுக்கு முரணாக மோசமான சட்டம் என்பதை ஐநா மனித உரிமை பேரவை உட்பட பல்வேறுபட்ட சர்வதேச சமூக அமைப்புகள் மனித உரிமை அமைப்புகள் இலங்கையின் பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான பல்வேறுபட்ட விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன் வைத்துள்ளன.

நாங்கள் இது தொடர்பான குற்றச்சாட்டுகளை தொடர்ச்சியாக முன்வைத்து வருகின்றோம்.இத்தகைய நிலையில் அரசாங்கம் சர்வதேச சமூகத்துக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தாங்கள் இதனை மாற்றி அமைப்போம் என்று வாக்குறுதிகளை வழங்கி உள்ளார்கள். ஆனால் இன்று வரை அந்த சட்டம் மாற்றி அமைக்கப்படவில்லை. எங்களுடைய நிலைப்பாடு இந்தச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.இந்த சட்டம்
முழுமையாக நீக்கப்படும் போது அதன் கீழ் கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும். அரசாங்கம் பயங்கரவாத சட்டத்தை மாற்றி அமைக்கிறோமெனக் கூறிக்கொண்டு பலவித ஏமாற்று வித்தைகளை செய்துவருகின்றது.

குறிப்பாக கடந்த ஒரு வருடத்தில் 16 அரசியல் கைதிகளை
விடுவித்துள்ளார்கள். விடுவிக்கப்பட்டவர்கள் ஆறு மற்றும் எட்டு மாத காலப்பகுதிக்குள் விடுவிக்கப்பட வேண்டியவரகளைத் தான் இந்த அரசாங்கம் விடுவித்தது. மாறாக நீண்டகாலமாக விசாரணைகள் எதுவுமின்றி தடுத்துவைக்கப்பட்டவர்கள் மற்றும் நீண்டகால கைதிகள் எவரும் விடுவிக்கப்படவில்லை.

ஐநா மனித உரிமைப் பேரவையின் கூட்டத் தொடர்கள் நெருங்கி வருகின்ற வேளையில் புலிகளை மீளுருவாக்க முயற்சித்தார்கள், சமூக வலைத்தளங்களில் பிரபாகரனின் படத்தை காண்பித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் சுமார் 100 பேர் வரை கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து விட்டு அரசியல் கைதிகளை விடுவித்தது போன்று போலியான முகத்தை காண்பிப்பதற்கு இந்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. சர்வதேச சமூகம் இத்தகைய நடவடிக்கைகள் தொடர்பில் முழுமையான கண்காணிப்பை செய்ய வேண்டும். சிறைச்சாலைகளில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்,

அங்கங்கவீனர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் என பலதரப்பட்டவர்கள் உள்ள நிலையில் இவர்கள் உள ரீதியாக தாக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களை விடுவிப்பதற்கும் அனைத்து அரசியல்கைதிகளையும் விடுவிப்பதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.