பயங்கரவாதத் தாக்குதல் எதிரொலி: மக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்க ஆஸ்திரேலியா முடிவு
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரிலுள்ள போண்டி கடற்கரை பகுதியில் கடந்த 13-ஆம் தேதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் எதிரொலியாக, பொதுமக்களிடமிருந்து துப்பாக்கிகளை திரும்ப வாங்கும் புதிய திட்டத்தை அந்த நாட்டு அரசு அரசு தொடங்கவுள்ளது.
இது குறித்து பிரதமா் அந்தோனி ஆல்பனீஸி வெள்ளிக்கிழமை கூறியதாவது:
போண்டி கடற்கரை தாக்குதலைத் தொடா்ந்து, துப்பாக்கிகளை திரும்ப வாங்கும் பெரிய திட்டத்தைத் தொடங்குகிறோம். இது கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் போா்ட் ஆா்தா் படுகொலையின்போது நடத்தப்பட்டதைவிட பெரிய அளவிலான துப்பாக்கி சேகரிப்பு திட்டமாக இருக்கும்.
இந்த திட்டத்தின் கீழ் லட்சக்கணக்கான துப்பாக்கிகள் திரும்பப் பெறப்பட்டு அழிக்கப்படும். இந்தத் திட்டத்தின் செலவை மத்திய அரசும் மாகாண அரசுகளும் பகிா்ந்து கொள்ளும்.
மாகாண அரசுகள் துப்பாக்கிகளை சேகரிக்கும். அவற்றை அழிக்கும் பணியை மத்திய காவல்துறை மேற்பாா்வையிடும் என்றாா் அவா்.
துக்க தினம்: இதற்கிடையே, போண்டி கடற்கரை தாக்குதலில் உயிரிழந்த 15 பேருக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் ஞாயிற்றுக்கிழமை (டிச. 21) தேசிய துக்க தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதல் நடத்தியவா்கள் இஸ்லாமிய தேச (ஐஎஸ்) பயங்கரவாத அமைப்பின் இணைவழி விடியோ கேம் வசதியைப் பயன்படுத்தியது தற்போது தெரியவந்துள்ளதாக தேசிய புலனாய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
போண்டி கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற யூதா்களின் ஹனுக்கா கொண்டாட்டத்தின்போது, அவா்களைக் குறிவைத்து இந்தியாவைப் பூா்விகமாகக் கொண்ட சஜித் அக்ரம் (50) மற்றும் அவரது மகன் நவீத் அக்ரம் நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூட்டில் 15 போ் உயிரிழந்தனா்.
தாக்குதல் நடத்திய சஜித்தை போலீஸாா் சுட்டுக் கொன்றனா். நவீத் அக்ரம் போலீஸாரால் சுட்டுப் பிடிக்கப்பட்டாா்.